search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • நீதிபதிக்கு ஆதரவாக தாசில்தார் வினோத் குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
    • காவல் ஆய்வாளர் ராஜேஷ் சந்திர மிஸ்ரா 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்

    மத்திய பிரதேச மாநில உமரியா மாவட்டத்தில், கைரி பகுதியில் இருந்து பரவ்லா பகுதிக்கு சிவம் யாதவ் (Shivam Yadav) மற்றும் பிரகாஷ் தாஹியா (Prakash Dahiya) எனும் இருவர் தங்களது காரில் பயணித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் கார், முன்னால் சென்று கொண்டிருந்த காரை முந்தி சென்றது. அந்த காரில் பந்தவ்கர்ஹ் (Bandhavgarh) பகுதியின் துணை மாஜிஸ்திரேட் (SDM) அமித் சிங் பயணித்தார். காரை டிரைவர் நரேந்திர தாஸ் பனிகா ஓட்டினார்.

    தங்கள் காரை முந்தி சென்றதால் நீதிபதி அமித் சிங் ஆத்திரமடைந்ததாகவும், முன்னால் சென்ற சிவம் யாதவின் காரை வேகமாக சென்று வழிமறித்து அவர்களை கீழே இறங்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    அப்போது எதிர் திசையில் மற்றொரு காரில் வந்த வினோத் குமார் எனும் தாசில்தாரும் நீதிபதிக்கு ஆதரவாக மோதலில் ஈடுபட்டுள்ளார்.

    தகராறு முற்றியதில் யாதவ் மற்றும் பிரகாஷ் இருவரையும் நீதிபதியின் உத்தரவின் பேரில் நரேந்திர தாசும், தாசில்தாரின் டிரைவரும் கம்பால் இடுப்பிற்கு கீழே சரமாரியாக தாக்கினர்.

    இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தகவல் அளித்ததையடுத்து, கொத்வாலி பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தாக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முழு விசாரணையை அடுத்து, நீதிபதி, தாசில்தார், 2 டிரைவர்கள் உட்பட 4 பேர் மீது காவல் ஆய்வாளர் ராஜேஷ் சந்திர மிஸ்ரா, வழக்கு பதிவு செய்தார்.

    மாவட்ட ஆட்சியர் புத்தேஷ் குமார் வைத்யா, நீதிபதியை பணி இடைநீக்கம் செய்தார்.

    அச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மொபைல் போனில் அதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    சுமார் 10 நொடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி வருகிறது.

    மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இச்சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஆனால், நீதிபதி அமித் சிங் இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஷா என்ற சிறுத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றிருந்தது.
    • மற்றொரு சிறுத்தையான ‘ஜ்வாலா’ 3 குட்டிகளை ஈன்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் அழிந்து வரும் சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு நமீபியாவில் இருந்து 8 சீட்டா ரக சிறுத்தைகளை பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 8 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. அதில் ஒன்றான ஆஷா என்ற சிறுத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றிருந்தது.

    இந்நிலையில் மற்றொரு சிறுத்தையான 'ஜ்வாலா' 3 குட்டிகளை ஈன்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது வலைதள பதிவில், குனோவின் புதிய குட்டிகள்! ஜ்வாலா என்று பெயரிடப்பட்ட நமீபிய சிறுத்தை 3 குட்டிகளை ஈன்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    • சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
    • 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

    மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த குழந்தைகள் காப்பகத்தை வாத்ஸல்யபுரம் ஜெயின் டிரஸ்ட் அமைப்பினர் நடத்தி வந்தனர். அங்கு தங்கி இருக்கும் சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசாரணை அதிகாரி, "இங்கு தங்கியுள்ள சிறுவர்களை நிர்வாகிகள் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். சிறிய தவறு செய்தாலும் தலைகீழாக தொங்கவிடுதல், இரும்பு கம்பியால் சூடு போடுதல், கட்டி வைத்து அடித்தல், அடுப்பில் காய்ந்த மிளகாயை போட்டு நுகர்ந்து பார்க்க வைத்தல், உள்ளிட்ட பல கொடுமைகளை இங்குள்ள சிறுவர்கள் அனுபவித்து வந்துள்ளனர். 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காப்பக ஊழியர்கள் 5 பேர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

    இதுகுறித்து இந்தூர் கூடுதல்போலீஸ் கமிஷனர் அமரேந்திரசிங் கூறும்போது, "தற்போதுகாப்பகத்தை மூடி சீல் வைத்துள்ளோம். அங்கிருந்த குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் நலக்குழுவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    • லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சி வகுப்பின் இடையே திடீரென சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த 20 வயது மாணவர், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா லோதி என்று அடையாளம் காணப்பட்டார்.

    சிசிடிவி காட்சியின்படி, லோதி வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். 

    அப்போது அவர் திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தது சிசிடிவி காட்சி காட்டுகிறது.

    அதிர்ச்சியடைந்த சக மாணவரகள் லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    லோதியின் மரணம் சமீபத்தில் இந்தூரில் நடந்த நான்காவது சம்பவம் ஆகும். இது இளைஞர்கள் மத்தியில் "அமைதியான மாரடைப்பு" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிய கவலையைத் தூண்டுகிறது.

    இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.

    • அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வழக்கில் கைது.
    • 2010ம் ஆண்டு முதல் 2020 வரை கைலாஷ் பதவி வகித்துள்ளார்.

    மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விய்வர்கியா.

    இவர், கடந்த 2019ம் ஆண்டு அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய் வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக 2010ம் ஆண்டு முதல் 2020 வரை கைலாஷ் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. போட்டியில், கில், திலக் வர்மாவுக்கு பதில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்தனர்.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    அதனால், ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக குல்பாடின் நைப் அரை சதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, நஜ்புள்ளா சத்ரான் 23 ரன்களும், கரிம் ஜனாட் 20 ரன்களும், குர்பாஜ் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 14 ரன்களும், எடுத்தனர்.

    இறுதியில் முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது.

    இதன்மூலம், இந்திய அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    • நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது.
    • நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன்.

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் சிவராஜ் சிங் சவுகான்தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுமுகமான மோகன் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

    சிவராஜ் சிங் சவுகானுக்கு மத்திய பிரதேச மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. பெண்கள் அவரை "மாமா" என செல்லப் பெயருடன் அழைப்பாளர்கள். அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்காமல் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களை சிவராஜ் சிங் ஆறுதல் படுத்தினர்.

    முதல்வராக இல்லாத அவரின் எதிர்காலம் என்ன? கட்சி அவரை எப்படி பார்க்கும்? என்ற கேள்விகள் எழுந்தன.

    இந்த நிலையில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது சிவராஜ் சிங் சவுகான் பேசியதாகவது:-

    தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலமாக முதல்வராக இருக்கும் நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக முதல் மந்திரிகள் ராஜினாமா செய்யும் சம்பவம் பலமுறை நடந்துள்ளது.

    ஆனால் நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை மாமா என செல்லமாக அழைக்கின்றனர். மக்கள் எனக்காக குரல் கொடுக்கும்போது, நான் முதல் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது. நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன்.

    இவ்வாறு சிவராஜ் சிங் சவுதான் தெரிவித்துள்ளார். சிவராஜ் சிங் சவுகான் நான்கு முறை முதல் மந்திரியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விழாவில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • ராமர் கோவில் திறப்பு விழாவில் காஙகிரஸ் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது.

    போபால்:

    உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ராமர் கோவில் திறப்பு விழா பாஜக-ஆர்எஸ்எஸ் நிகழ்வு. இந்த விழா தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பதால் காஙகிரஸ் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்கு அக்கட்சியில் இருந்தே பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங், அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவு பொருத்தமற்றது. இந்த முடிவின் எதிரொலி தேர்தலில் தெரியும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

    மேலும், அனைவரும் அயோத்திக்குச் செல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வோம். எங்கள் பக்தி ராமர் மீது உள்ளது என தெரிவித்துள்ளார்.

    • மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமையே என்பதால் கணவருக்கு விவாகரத்து வழங்கியது ஐகோர்ட்.
    • பலரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு பேசுபொருளாகி உள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் ஒரு தம்பதிக்கு கடந்த 2006-ல் திருமணம் நடைபெற்றது. கணவர் வெளிநாடு செல்லும் வரை மனைவி உடலுறவுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.

    எனவே கணவர் கீழமை நீதிமன்றத்துக்கு போய் தனக்கு விவாகரத்து வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம் கணவருக்கு விவாகரத்து தர மறுத்தது. இதை எதிர்த்து மத்திய பிரதேச ஐகோர்ட்டில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில், மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமையே என்பதால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது மத்திய பிரதேச ஐகோர்ட்.

    இதுதொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் கூறுகையில், மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும். கணவன் - மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

    பலரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு பேசுபொருளாகி உள்ளது.

    • சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த காப்பகத்தில் குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்
    • இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி காப்பகம் செயல்பட்டு வந்துள்ளது

    மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கன்னுங்கோ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பதிவேட்டில் 68 மாணவிகளின் பெயர்கள் இருந்த நிலையில், 42 மாணவிகள் மட்டுமே அங்கு இருந்தனர். மீதமுள்ள 26 மாணவிகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக எப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சட்ட விரோதமாக காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த பிரியங்க் கன்னுங்கோ, "இந்தக் காப்பகத்தை மதபோதகர்கள் நடத்தி வந்துள்ளனர். தெருவில் திரிந்த குழந்தைகளை மீட்டு முறையான உரிமம் பெறாமல் இதனை நடத்தி வந்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற கட்டாய படுத்தப்பட்டுள்ளனர். காப்பகத்தில் 6 முதல் 18 வயது நிரம்பிய சிறுமிகள் இருந்தனர். இவர்களில் பலர் இந்துக்கள் என்றும் தெரிகிறது. மிகுந்த சிரமத்துக்கு இடையே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    காப்பகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இரண்டு பெண் காவலர்களைத் தவிர்த்து இரவில் இரண்டு ஆண் காப்பாளர்களும் விடுதியில் இருந்துள்ளனர். இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இச்சம்வத்தில் அரசு துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • 2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது.
    • செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது.

    இந்தூர்:

    சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகணங்கள் நிகழும் என்றும், ஆனால் அவை எதையும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த வானியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

    நடப்பு ஆண்டு கிரகணங்கள் நிகழ்வு குறித்து உஜ்ஜைன் நகரில் உள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது:-

    2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.

    அதனை தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 மற்றும் 9-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளதால், இந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க இயலாது.

    அதேபோல் செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணமும் இந்தியாவில் காணப்படாது.

    அக்டோபர் 2 மற்றும் 3-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் புலப்படாது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • டிப்பர் லாரியுடன் மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
    • 14 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் தனியார் பேருந்து சுமார் 30 பேர்களுடன் ஆரோன் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிப்பர் லாரி ஒன்று ஆரோனில் இருந்து குணா பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. குணா-ஆரோன் சாலையில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியது.

    மோதிய வேகத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் இருந்தவர்கள் வெளியே குதித்து தப்பிக்க முயற்சித்தனர். இருந்தபோதிலும் தீ வேகமாக பரவியதாலும், விபத்தில் பஸ் சேதமடைந்து இருந்ததாலும் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

    கண்ணிமைக்கும் நேரத்திற்குள் 12 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவர்களது குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி, காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் "இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்து குறித்து கேள்விப்ப்பட்டதும் உடனடியாக கலெக்டர் மற்றும் எஸ்.பி.-யை தொடர்பு கொண்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணியை தொடங்க உத்தரவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ×