search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • பரிசோதனைக்காக கூட வாய்ப்பு கொடுக்காதவர்
    • பேட்டை எடுத்தால் ஹிட்அவுட் ஆவார்

    மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சிவராஜ் சிங் சவுகானுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது.

    தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், பா.ஜனதா தலைவர்கள் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், சிவராஜ் சிங் சவுகானின் தலைமையை (Leader) வெகுவாக பாராட்டினார். அத்துடன் டோனியுடன் ஒப்பிட்டார். டோனி இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்தி 2011 உலகக்கோப்பையை வென்றார். அதேபோல் சிவராஜ் சிங் சவுகான் வரவிருக்கும் தேர்தலில் வெற்றி வாகை சூடுவார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சியின் சுர்ஜேவாலா, டோனியுடன் ஒப்பிடுவது, நட்சத்திர வீரர்களை மிகப்பெரிய அளவில் அவமதிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுர்ஜேவாலா கூறுகையில் ''இந்த ஒப்பீடு மிகப்பெரிய வீரருக்கு மிகமிகப்பெரிய அவதிப்பாகும். சவுகான், பரிசோதனை அடிப்படையில் கூட ஒருவருக்கும் வாய்ப்பு வழங்காதவர். எப்போதெல்லாம் அவர் பேட்டிங் பிடிப்பாரோ?- அப்போதெல்லாம் அவராகவே ஹிட் விக்கெட் ஆவார். இங்கே மத்திய பிரதேச அரசு ஹிட் விக்கெட் ஆகிறது'' என்றார்.

    மேலும், இந்தியா பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வரும் செய்தி குறித்து கேட்டதற்கு ''பா.ஜனதா வேலைவாய்ப்பின்மை, விவசாயம், வறட்சி, இழப்பீடு, பணவீக்கம், வெறுப்பு, வளர்ச்சி போன்றவற்றை பற்றி ஒருபோதும் பேசியது கிடையாது. இதுபோன்ற வலை (சதி), பிரசாரத்தில் மக்களை மத்திய அரசு சிக்க வைக்கும். இது சகுனி வலை போன்றது.'' என்றார்.

    • பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
    • இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை

    "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாக ஜனாதிபதி மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது முக்கிய காரணம். வருகின்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்சித் கூறுகையில் "நீங்கள் நமது அரசியலமைப்பை படித்தீர்கள் என்றால், அதில் இந்தியா பாரத் எனவும் உள்ளது. பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை. பா.ஜனதா வளர்ச்சி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, ஊழல் போன்ற விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 13 வயதில் 10-ம் வகுப்பு முடித்த அவர் 15-வது வயதில் பிளஸ்-2 முடித்தார்.
    • 83 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் இந்திய அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார்.

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரை சேர்ந்தவர் நந்தினி அகர்வால். 21 வயதான இவர் தனது 19 வயதிலேயே ஆடிட்டர் ஆனார். இதையடுத்து அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 13 வயதில் 10-ம் வகுப்பு முடித்த அவர் 15-வது வயதில் பிளஸ்-2 முடித்தார்.

    இவர் ஆடிட்டர் படிப்பை முடித்தபோது 83 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் இந்திய அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். 23 வயதான இவரது மூத்த சகோதரர் அப்போது 18-வது இடத்தை பிடித்திருந்தார். இதுபற்றி நந்தினி அகர்வால் கூறுகையில், எனது வெற்றியில் என் சகோதரர் பங்கு மிக முக்கியமானது என்றார். ஏற்கனவே 1956-ம் ஆண்டு லக்னோவை சேர்ந்த ராமேந்திர சந்திர கவுலி 19 வயதில் ஆடிட்டராக தேர்ச்சிபெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். இளம் வயதில் பெண் ஒருவர் சாதித்திருப்பது இதுவே முதன் முறை ஆகும்.

    • சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • சாகர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் திவாரி விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இழுத்துச் சென்ற வீடியோ வைரலானதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அந்தப் பெண்ணின் ஐந்து மாத கைக்குழந்தை அருகில் தரையில் கிடந்தபோதும் அந்த பெண்ணை தடிகளால் அடித்து, முகத்தில் உதைக்கப்பட்டு இழுத்துச் செல்வது போன்று வீடியோ காட்டுகிறது.

    பேருந்து நிலையத்தில் உள்ள கேண்டீனில் பால் வாங்கச் சென்ற நடுத்தர வயதுப் பெண். அங்கு ஏதோ வாக்குவாதம் நடந்ததை அடுது்து, அந்த பெண்ணை மூன்று ஆண்கள் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

    அந்த வீடியோவில், பெண் தன்னை விட்டுவிடும்படியும், 'அண்ணா.. அண்ணா' என்று அழுவதும் காட்டப்பட்டது. சுற்றியிருந்தவர்கள் பெண்ணை அடிக்க வேண்டாம் என்றும் தடுக்க முயன்றனர்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து சாகர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் திவாரி விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

    • கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
    • சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இந்த வனப்பகுதியில் இருந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தை ஒன்று அருகில் உள்ள இக்லேரா கிராமத்திற்குள் புகுந்தது.

    அந்த சிறுத்தை நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு மெதுவாக சென்றது. இதை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த சிறுத்தை அருகில் சென்றனர். பின்னர் அந்த சிறுத்தையை சுற்றி நின்று கொண்டு அதன் வேதனையை பற்றி கவலைப்படாமல் கைத்தட்டி சிரித்தனர். மேலும் அதனை கையால் தள்ளி சித்ரவதை செய்தனர். அந்த சிறுத்தையுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுத்தை மீது ஏறி சவாரி செய்யவும் முயன்றார். இதை பார்த்த சிலர் அந்த கும்பலிடம் இது போன்று செய்யாதீர்கள், பாவம் சிறுத்தை உடல் நலம் சரியில்லாமல் உள்ளது என்று கூறினார்கள், ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை கொடுமை படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தனர்.

    மேலும் ஒரு சிலர் அந்த சிறுத்தையை ஊருக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதனை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் வனத் துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    அந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண் காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராம மக்கள் சிறுத்தையை கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வழக்கை வாபஸ் பெற மிரட்டிய கும்பல், அந்த பெண்ணின் வீட்டில் இருந்து பொருட்களையும், மேற்கூரையும் அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர்.
    • கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த பெண்ணின் தாய்க்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம்சிங். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் விக்ரம்சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த விக்ரம்சிங் தனக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும்படி தலித் பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டி வந்துள்ளார்.

    ஆனால் அவர்கள் வழக்கை வாபஸ் பெற மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த விக்ரம்சிங் தனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து தலித் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அந்த பெண் தனது தாயாருடன் இருந்துள்ளார்.

    அப்போது வழக்கை வாபஸ் பெற மிரட்டிய கும்பல், அந்த பெண்ணின் வீட்டில் இருந்து பொருட்களையும், மேற்கூரையும் அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர்.

    அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரான 20 வயது வாலிபர் அங்கு வந்துள்ளார். அவரிடமும் வழக்கை வாபஸ் பெறுமாறு கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த வாலிபர் மறுப்பு தெரிவிக்கவே அவரையும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். இதைப்பார்த்த வாலிபரின் தாயார் கும்பலிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்திய கும்பல் அவரையும், அவரது மகனையும் கொடூரமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.

    கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது தாய்க்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக விக்ரம்சிங் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை, பாலியல் தொல்லை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் உய்கே தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்த சம்பவத்திற்கு ஆளும் பாரதிய ஜனதா அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், மத்திய பிரதேசத்தில் தலித் மக்கள், பழங்குடியின மக்கள் மீது ஒடுக்கு முறை தடையின்றி தொடர்கிறது. தலித்களுக்கு எதிரான குற்றங்கள் விகிதத்தில் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது என தெரிவித்தார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் பூபேந்திரசிங் மறுத்துள்ளார். தகராறு காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், இதனை காங்கிரஸ் அரசியலாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    • சட்டசபை தேர்தல் நடைபெற 3 மாதங்கள் இருக்கும் நிலையில் மந்திரி சபை விரிவாக்கம்
    • தற்போது மந்திரி சபையில் 34 பேர் இடம் பிடித்துள்ளனர்

    மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    பிரதமர் மோடி சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் சென்று நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் சூழ்நிலை வரை கட்சிகள் சென்றுள்ளன.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தனது மந்திரி சபையில் புதிதாக மூன்று பா.ஜனதா எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்ப வழங்கியுள்ளார். இதனால் மந்திரிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மங்குபாய் பட்டேல் மூன்று பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மந்திரிகளாக பதவி ஏற்ற ராஜேந்திர சுக்லா முன்னாள் மந்திரியாவார். இவர் நான்கு முறை ரெவா பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    கவுரிசங்கர் பிசேன் ஏழு முறை பாலகாட் தொகுதியில் இருந்து ஏழு முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராகுல் லோதி கார்காபூரில் இருந்து முதல்முறையாக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

    • ம.பி.யில் வரும் நவம்பர் மாதம் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது
    • கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது

    இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    2018-ல் இங்குள்ள சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று, கமல் நாத் தலைமையில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.விற்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

    ஆனால், மார்ச் 2020ல், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் அரசை எதிர்த்து தனது அணியுடன் பா.ஜ.க.வை ஆதரித்ததால், பா.ஜ.க. அரசு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போது அங்கு அவர் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ம.பி.யில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருக்கிறது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இங்கு கடுமையாக போட்டி போடுகின்றன.

    மத்திய பிரதேச பண்டல்கண்ட் பகுதியில் 6 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சாகர் எனும் பகுதியில், ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு இப்போதுதான் கார்கே முதல்முறையாக மத்திய பிரதேசத்திற்கு வந்திருக்கிறார். கார்கேயின் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இப்பின்னணியில் அவர் உரையில் மக்களுக்கு அக்கட்சி சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

    எதிர்பார்த்ததை போலவே வாக்காளர்களை ஈர்க்கும் பல சலுகைகளை அவரது உரையில் உறுதியளித்தார். அதன்படி, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ.500-க்கு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். முதல் 100 யூனிட்டுகள் வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும், என்று அவர் தெரிவித்தார்.

    தேர்தல் நெருங்கும் போது இரு கட்சிகளின் சலுகைகளும் முழுவதுமாக தெரிய வரும்.

    • மழை பெய்ய வேண்டி ஒவ்வொரு ஊரிலும் வினோத சடங்குகளை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
    • கழுதைக்கு கிராம மக்கள் குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ வைரல்.

    மழை பெய்ய வேண்டி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்ஸர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் தான் இந்த வினோத சடங்கை செய்துள்ளனர்.

    கிராம மக்கள் மழைக்காக வினோத சடங்கு செய்த சம்பவம், பலருக்கும் புதிதாக இருக்கலாம் ஆனால் அவர்களை பொருத்தவரையில், கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட சடங்கு "மிஷன்" அமோக வெற்றி தான். குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட இரண்டே நாட்களில் அந்த மாவட்டத்தில் மழை பொழிந்து, கிராம மக்கள் வேண்டுதல் பலித்து விட்டது.

     

    மழை பெய்ததை அடுத்து ஊரில் உள்ள பூசாரி கழுதையை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று விவாசய பணிகளை துவங்கி வைத்தார். வினோத சடங்கின் அங்கமாக, கழுதை ஒரு பிளேட் முழுக்க குலாப் ஜாமுன் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல் ஆகி, பலதரப்பட்ட கமென்ட்களை குவித்து வருகிறது.

    வினோத சடங்கை தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து பெய்யத் துவங்கிய மழை, 24 மணி நேரத்திற்கு நீடித்தது. மழை பெய்ததால் ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், அதனை கொண்டாடும் வகையில் மீண்டும் கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்டனர். 

    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார்
    • பிரசாரத்தில் பிரதமர் மோடிதான் முன்னிலை படுத்தப்படுவார் என அமித்ஷா சூசக தகவல்

    மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இதனால் மீண்டும் சிவராஜ் சவுகான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பா.ஜனதா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக தொடருவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் முடிவுக்கு பின்னர்தான், முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

    மேலும், ''சிவராஜ் சவுகான் முதலமைச்சராக இருக்கிறார். இது எங்கள் கட்சியின் வேலை. நாங்கள் முடிவு செய்வோம். அவர் முதலமைச்சர். நாங்கள் தேர்தலில் இருக்கிறோம். பிரதமர் மோடி மற்றும் சவுகான் தலைமையிலான ஆட்சியில் நாம் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். ஆகவே, வளர்ச்சி தேர்தல் நிகழ்ச்சி நிரலாக அமைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பிரதமர் மோடி, பிரசாரத்தின்போது முன்னிலைப் படுத்தப்படுவார்'' என்றார்.

    பா.ஜனதா எப்போதுமே, தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. மீண்டும் ஆட்சியை பிடித்தால், ஏற்கனவே முதல்வராக இருக்கும் நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருந்தாலும், பா.ஜனதாவின் பாராளுமன்ற குழுதான் இறுதி முடிவு எடுக்கும்.

    • மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.
    • சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பாம்புகளை கண்டால் துரத்தி அடிப்பவர்களுக்கு மத்தியில், ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க வாலிபர் ஒருவர் போக்குவரத்தை நிறுத்தி உதவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    மத்தியபிரதேச மாநிலத்தில் நர்மதா புரத்தில் நெடுஞ்சாலையில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. ஆனால் அந்த பாம்பு சாலையில் நகர முடியாமல் 10 நிமிடங்களுக்கு மேலாக திணறுவதை அவ்வழியாக சென்ற வாலிபர் பார்த்தார். உடனடியாக அவர் தனது வாகனத்தை நிறுத்தியதோடு பாம்பின் மீது மற்ற வாகனங்கள் ஏறி விடாமல் இருப்பதற்காக அந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி உள்ளார்.

    பின்னர் அந்த பாம்பு சாலையை கடக்கும் வகையில் கை தட்டி உள்ளார். அவரின் கை தட்டலை கேட்டு பாம்பு மெதுவாக சாலையை கடந்து செல்கிறது. இதை சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிய நிலையில் வாலிபரை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின
    • கோபத்தில் ரஜாவத் ஓடிச்சென்று தனது துப்பாக்கியை எடுத்து வந்தார்

    மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்தவர் ராஜ்பால் சிங் ரஜாவத். இவர் உரிமம் வாங்கி ஒரு ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தார். இதனால் இவரை காவலாளியாக பணியமர்த்தியது மத்திய பிரதேச இந்தோரில் உள்ள ஒரு நிறுவனம்.

    இவ்வேலைக்காக இந்தோரில் வசித்து வந்த ரஜாவத்தின் அண்டை வீட்டுக்காரர் விமல் அசலா (35). அசலா, அந்நகரின் நிபானியா பகுதியில் முடி திருத்தும் நிலையம் வைத்துள்ளார். இவர்கள் இருவரும் சொந்தமாக ஆளுக்கொரு நாய் வளர்த்து வந்தனர். இருவரும் அவரவர் நாய்களுடன் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

    இவர்கள் வழக்கம் போல நேற்று இரவு அப்பகுதியிலுள்ள கிருஷ்னா பாக் காலனியில் நடந்து சென்ற போது அவர்களது இரு நாய்களும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின. இதனை தொடர்ந்து நாய்களின் உரிமையாளர்களான இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறியது.

    இதில் கோபமடைந்த ரஜாவத், வேகமாக தான் வசிக்கும் முதல் தளத்தில் உள்ள வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பால்கனிக்கு வந்தார். வந்ததும் முதலில் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்ட ரஜாவத், அசாலா நின்றிருந்த இடத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இதில் அசலா மற்றும் அங்கிருந்த 27 வயதான ராகுல் வர்மா என்பவரின் மீது குண்டு பாய்ந்தது. அங்கு சண்டையின் போது அருகில் நின்றிருந்தவர்களில் 6 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் மிக தீவிரமாக காயமடைந்துள்ளனர்.

    அங்கிருந்தவர்கள் தகவல் அளித்ததை அடுத்து கஜ்ரானா காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு பாய்ந்த அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அசலாவும், ராகுல் வர்மாவும் உயிரிழந்ததாக அறிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து ரஜாவத், அவருக்கு உதவியதாக அவர் மகன் சுதிர் மற்றும் உறவினர் சுபம் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறது.

    எந்தவித முன்பகையும் இல்லாதவர்களுக்கிடையே நாய்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மோதல் ஏற்பட்டதும், மோதல் கொலையில் முடிந்து இருப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×