search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • போர்டு வைத்ததால் ஆர்வலர்கள் உள்பட பலர் போராட்டம் நடத்தினர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டபின், பொது மன்னிப்பு கேட்டுள்ளார்

    மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள குக்சி தாலுகாவிற்கு உள்பட்ட ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருபவர் பிரஹ்லாத் விஷ்வகர்மா. இவர் தனது சொந்த நிலத்தில் கோவில் ஒன்று கட்டியுள்ளார். அதோடு, தலித்கள் கோவிலில் நுழைவதற்கு கண்டிப்பாக தடைவிதிக்கப்படுகிறது என்ற போர்டும் எழுதி வைத்துள்ளார்.

    இதனால் தலித் சமூதாயத்தினர் மற்றும் பீம் ஆர்மி ஆர்வலர்கள் கோவில் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்ததை நடத்தினர்.

    பின்னர், பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் பிரஹ்லாத் விஷ்வகர்மாவை கைது செய்துள்ளனர். பின்னர் பிரஹ்லாத் பொது மன்னிப்பு கேட்டதுடன், அந்த போர்டை அகற்றியுள்ளார்.

    • பெங்களூரு கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றனர்.
    • எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு குறித்து மும்பையில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளனர்.

    போபால்:

    பெங்களூருவில் இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளன. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அடுத்தகட்ட நகர்வு குறித்து மும்பையில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளனர்.

    எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவடைந்ததும் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மத்திய பிரதேச மாநிலம் போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டபின் விமானம் டெல்லி புறப்பட்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது
    • ஒரு பெட்டியின் பேட்டரி பாக்ஸ் தீப்பிடித்து எரிந்த நிலையில், தீயணைப்பு துறையினர் அதை அணைத்தனர்

    மத்திய பிரதேசத்திற்கும் புதுடெல்லிக்கும் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று காலை தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக உயிருக்கோ உடைமைகளுக்கோ எந்த சேதமும் இல்லை. அந்த பெட்டியிலிருந்த சுமார் 22 பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.

    இந்த வந்தே பாரத் ரெயில் வழக்கமாக ம.பி.யின் தலைநகர் போபாலிலிருந்து 5.40 மணிக்கு புறப்பட்டு புதுடெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தை மதியம் 1.10 மணியளவில் சென்றடையும்.

    இன்று காலை அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் ஒரு ரெயில் சக்கரத்தின் அருகிலிருந்து புகை வெளிவருவது கண்டதும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். ஒரு ரெயில் பெட்டியின் பேட்டரி பாக்ஸ் அருகே உருவான தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

    "ராணி கமலாபதி ரெயில் நிலையத்தை விட்டு புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் C-14 கோச்சில் தீ பிடித்தது தெரிய வந்தவுடன், குர்வாய்-கைதோராவிற்கும் இடையே நிறுத்தப்பட்டு காலை 7.58 மணியளவில் தீ அணைக்கப்பட்டு ரெயில் 10.05 மணியளவில் டெல்லி நோக்கி புறப்பட்டது" என மேற்கு மத்திய ரெயில்வேயின் அதிகாரி ராஹுல் சிரிவாஸ்தவா தெரிவித்தார்.

    • சொகுசு காரில் ஏழு பேர் பயணம் செய்தனர்
    • காயத்துடன் உயிர்பிழைத்த ஒருவர் மருத்துவமனையில அனுமதி

    மத்திய பிரதேச மாநிலம் சகர் மாவட்டத்தில் நேற்றிரவு கார் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் ஆறு பேர் பலியானார்கள். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த கோர விபத்து சகர்-ஜபால்புர் சாலையில் பமோரி தூதார் அருகில் நடைபெற்றது. சொகுசு காரில் ஏழு பேர் பயணம் செய்துள்ளனர். இந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியதில், கார் அப்பளமாக நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஏழு பேரில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த வியாழக்கிழமை அதிகாலை, பக்தர்களை ஏற்றிக் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி கன்வாரி பக்தர் ஒருவர் உயிரிழந்தார் 15 பேர் காயம் அடைந்தனர்.

    • உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள்

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் அக்காள், தங்கையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளது. பின்னர் சகோதரிகளில் மூத்த பெண்ணை கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது தங்கையையும் துன்புறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வீட்டுக்கு வந்ததும், மூத்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் ஒருவன் அப்பகுதி பாஜக பிரமுகரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனைவி, மகள் கிடைக்காததால் அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார்.
    • காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சஞ்சீவிடம் காவல் துறை உறுதி.

    நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளது. கிலோவுக்கு ரூ.130- ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனால் சாமானிய மக்கள் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியை வாங்க சிரமப்பட்டு வருகின்றனர். சமையலுக்கு தக்காளி மிக அவசியம் என்பதால், வீட்டில் பெண்கள் சிறிய தொகையிலாவது தக்காளியை வாங்கி பார்த்து பார்த்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தக்காளியால் சண்டை ஏற்பட்டு ஒரு குடும்பமே பிரிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஹ்டால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் புர்மன். சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். அப்போது, சமையலுக்காக சஞ்சீவ் தனது மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளியை பயன்படுத்தியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தக்காளி விற்கும் விலைவாசிக்கு என்னிடம் கேட்காமல் எப்படி இரண்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவீர்கள் என்று கோபமடைந்துள்ளார். இது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரிய பிரச்சினையாகி உள்ளது. இதனால் கோபமடைந்த சஞ்சீவின் மனைவி தனது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

    போனவள் திரும்பி வந்துவிடுவாள் என்று இருந்த சஞ்சீவ் வெகுநேரமாகியும் வராததால் பதற்றமடைந்தார். பின்னர் எங்கு தேடியும் மனைவி, மகள் கிடைக்காததால் அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார்.

    இந்நிலையில், காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சஞ்சீவிடம் காவல் துறை உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.

    • ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார்.
    • மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    குவாலியர்:

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவராகவும் இருந்து வருபவர் கமல்நாத். இவரது மொபைல் போனை மர்ம மனிதர்கள் ஹேக் செய்தனர். பின்னர் இவரது போனில் இருந்து காங்கிரஸ் பொருளாளர் அசோக் சிங் என்பவரை ஹேக்கர்கள் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார்கள்.

    இதேபோல இந்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுர்ஜித்சிங் சதா, குவாலியர் எம்.எல்.ஏ. சதீஷ் சகார்வார் மற்றும் முன்னாள் காங்.பொருளாளர் கோவிந்த் கோயல் ஆகியோரையும் போனில் மிரட்டினார்கள்.

    இதையடுத்து அந்த மர்ம மனிதர்களை கையும், களவுமாக பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார். உடனே 2 பேர் அவரது பங்களாவுக்கு பணம் வாங்க வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்களது பெயர் சாகர்சிங் பார்மர், பிந்து பார்மர் என்பதும் இருவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தொடரில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை  முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த விவகாரத்தை எழுப்பினர். இதேபோல் மகாகல் லோக் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் சத்புரா பவன் தீ விபத்து உள்ளிட்ட பிரச்சனைகளையும் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

    இரண்டாவது நாளாக இன்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். காங்கிரஸ் கொண்டு வந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இந்த கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட துணை பட்ஜெட் உட்பட பட்டியலிடப்பட்ட அலுவல்களை சபாநாயகர் எடுத்துக் கொண்டார். அதன்பின்னர் சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைக்கும் தீர்மானத்தை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    சனிக்கிழமை வரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியினரின் அமளியால் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இதுவே நடப்பு சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் ஆகும்.

    • சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில்.
    • 78,000 எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 78,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள என மாநில அரசு இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

    சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உணவுப் பற்றாக்குறை அல்லது அவர்களுக்கு ஏற்ற உணவுப் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், உடல்நலம் குன்றியவர்களாகவும் இருப்பார்கள். இது குழந்தைகளில் வளர்ச்சி குன்றியதையும், உடல் எடை குறைவதையும் உண்டாக்கும்.

    பிந்த் மாவட்டத்தில் உள்ள லஹார் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிங், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 78,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை அறிய முயன்றார்.

    இதில், அடல் பிஹாரி வாஜ்பாய் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, "இந்த எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்" என தெரிவித்தார்.

    அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ பதிலின்படி, இந்தூர் பிரிவு மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 22,721 ஆக உள்ளது. இந்த பிரிவில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் அலிராஜ்பூர் மற்றும் ஜாபுவா மாவட்டங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரவேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டார்.
    • அவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பண்டிட்

    போபால் :

    மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தை சேர்ந்த தஸ்மத் ராவத் என்ற பழங்குடியின வாலிபர் மீது மற்றொரு பிரிவை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இதைத்தொடர்ந்து பிரவேஷ் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    பாதிக்கப்பட்ட பழங்குடியின வாலிபர் தஸ்மத் ராவத்தை முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது வீட்டுக்கு வரவழைத்து, கால்களை கழுவி மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிரவேஷ் சுக்லாவை விடுதலை செய்யுமாறு தஸ்மத் ராவத் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஒரு தவறு நடந்து விட்டது. பிரவேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டார். எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசுக்கு எனது கோரிக்கை ஆகும்' என தெரிவித்தார்.

    பிரவேஷ் சுக்லா, மிகவும் கீழ்த்தரமான செயலை செய்திருக்கிறாரே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'ஆம். நான் ஒத்துக்கொள்கிறேன். அவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பண்டிட். அவரை விடுவிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
    • சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அங்கு ஒரு நபர் அலட்சியமாக சிகரெட் பிடித்தவாறு பழங்குடியின வாலிபரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது.

    சித்தி மாவட்டத்தின் பஹ்ரி அருகே உள்ள குப்ரி என்ற கிராமத்தை சேர்ந்த பிரவேஷ்சுக்லா என்பவர் தான் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தது என்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரான தஸ்மத் ராவத்தும் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இதற்கிடையே பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ராகுல்காந்தியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, 'குற்றவாளிக்கு மதம், சாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக அவர் கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றப்பட மாட்டார் என்றார்.

    அதை தொடர்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பிரவேஷ் சுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.

    இன்று காலை பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரை நாற்காலியில் உட்கார வைத்து முதல்-மந்திரி சவுகான் கீழே அமர்ந்து காலை கழுவினார். அதோடு நடந்த சம்பவத்துக்காகவும் பழங்குடியின வாலிபரிடம் முதல்-மந்திரி மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

    • இதுதான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேள்வி.
    • வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்தனர்.

    மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என அவர் கூறியுள்ளார்.

    மேலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் டேக் செய்துள்ள அவர், "இது தான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? இதை காட்டு தர்பார் என்று அழைக்கவேண்டும். ஏன் பாஜக தலைவரை கைது செய்யவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதேபோல் பிரவேஷ் சுக்லா பாஜக எம்எல்ஏக்களுடன் இருந்த புகைப்படங்களை மற்றொரு டுவிட்டர் பதிவில் ஷேர் செய்திருந்தார்.

    டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பால்யனும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை டேக் செய்து இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

    வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்ததுடன், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    வீடியோ வைரலாக பரவிய நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதலமைச்சர் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    ×