என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மத்தியப்பிரதேசம்
- வரதட்சணை என்ற சமூக தீமையை முடிவுக்குக் கொண்டுவர உறுதி பூண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.
- தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்று ஆசிரியை கூறுகிறார்.
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த செய்திகள் புதிதல்ல. ஆனால், அதை எதிர்த்து ஒரு சிலரே தைரியமாக பொதுவெளியில் வந்து போராடுகின்றனர்.
அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபாலில் உள்ள 27 வயதான ஆசிரியை ஒருவர், இந்த "சமூக தீமைக்கு" முற்றுப்புள்ளி வைக்க, போபால் காவல்துறை தலைமை அதிகாரி, ஹரிநாராயணன் சாரி மிஷ்ராவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
10க்கும் மேற்பட்ட ஆண்களால் வரதட்சணை காரணமாக தாம் நிராகரிக்கப்பட்டு தனக்கு திருமணம் நின்று போனதாக தெரிவிக்கும் அவர், தனது சொந்த அனுபவத்தை வைத்து இந்த மனுவை கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அவரின் தந்தை, கடந்த பிப்ரவரியில் பெண் பார்ப்பதற்காக ஒரு இளைஞனையும் அவனது குடும்பத்தையும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் அந்த இளைஞனின் தந்தையிடம் வரதட்சணை குறித்து கேட்டிருக்கிறார். அவர்கள் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை எதிர்பார்ப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும், உங்கள் மகள் அழகாக இருந்திருந்தால், நாங்கள் உங்களுக்கு தள்ளுபடி தருவோம் என்று அந்த இளைஞனின் தந்தை கேலியாக பேசியுள்ளார்.
கடந்த வாரம், அவர் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக மிஷ்ராவை சந்தித்தார். அவரிடம் அவர் அளித்த தனது மனுவில், திருமண இடங்களில் சோதனை நடத்துவதும், வரதட்சணை கொடுப்பவர்கள் அல்லது பெறுபவர்களைக் கைது செய்வதும்தான் இந்த கொடுமையை தடுக்க ஒரே தீர்வு என்றும், தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இந்த கொடூரமான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்றும் கூறுகிறார்.
"வரதட்சணை ஒரு சமூகத் தீமை, அதை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் (காவல்துறை) உறுதி பூண்டுள்ளோம். எந்தப் பெண் இது குறித்து உதவி கேட்டு காவல்துறையை அணுகினாலும் அவர்களுக்கு உரிய உதவியை வழங்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என மிஷ்ரா கூறியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மிஷ்ரா, "காவல்துறைக்கு வரம்புகள் உள்ளன. அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. மேலும், இந்த விஷயத்தில் நாம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் மனநிலையையும் மாற்ற வேண்டும்" என கூறினார்.
பெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா ஸ்ரீவஸ்தவா இது குறித்து கூறுகையில், "காவல்துறையினால் கண்டிப்பாக உதவ முடியும். ஆனால் வரதட்சணையை சமாளிப்பது ஒரு சிக்கலான பிரச்சனை. இந்தியாவில் வரதட்சணை தடைச்சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என கூறினார்.
இந்த ஆசிரியையை போன்று மேலும் பலர் துணிச்சலாக போராட துவங்கினால், இந்த சமூக அவலம் கட்டுக்குள் வரலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- கடந்த 30-ந்தேதி சுமித்ரி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு பாரத் மிஸ்ரா போன் செய்து கூறியுள்ளார்.
- சுமித்ரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40).
சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 30-ந்தேதி சுமித்ரி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு பாரத் மிஸ்ரா போன் செய்து கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமித்ரியின் குடும்பத்தினர் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர்.
ஆனால் அதற்குள் பாரத் மிஸ்ரா தனது மனைவியின் உடலை பிரீசரில் வைத்து விட்டாராம். இது சுமித்ரியின் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது சகோதரர் அபய் திவாரி கோட்வாலி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் தனது மைத்துனருக்கும், எனது சகோதரிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் தான் எனது சகோதரி மர்மமான முறையில் இறந்துள்ளார். உடனடியாக அவர் எனது குடும்பத்தினருக்கோ, உறவினர்களுக்கோ தகவல் தெரிவிக்காமல் தாமதமாக கூறியுள்ளார்.
அவர் எனது சகோதரியை அடித்து கொலை செய்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் பாரத் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுமித்ரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரது இறுதி சடங்குக்காக தங்கள் மகன் மும்பையில் இருந்து திரும்ப வேண்டி இருந்ததால் மனைவியின் உடலை பிரீசரில் வைத்து இருந்ததாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து சுமித்ரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
டெல்லியில் இளம்பெண் ஸ்ரத்தா உடலை அவரது காதலன் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் அடைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு சில நகரங்களில் இதே பாணியில் நடைபெற்ற கொலைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.
இந்நிலையில் அதே போல இந்த சம்பவத்திலும் சுமித்ரியை அவரது கணவர் கொன்று பிரீசலில் அடைத்து வைத்ததாக புகார் கூறப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் புதிய சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜாமீனில் வருபவர்கள் கூட்டணி அமைப்பதாக குற்றச்சாட்டு.
போபால்:
மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. ஆளுங்கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.
முதியோர்களுக்கான இந்து புனித யாத்திரைகள், பெண்களுக்கு மாத உதவித்தொகை 1,000 ரூபாய் மற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதுபோன்ற புதிய திட்டங்களை ஆளும் பாஜக அரசு அறிவித்தது. எதிர்க்கட்சியான காங்கிரசும் இதேபோன்ற பல திட்டங்களுக்கான வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் புதிய சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இலவச வாக்குறுதிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். பிரதமர் பேசியதாவது:-
காங்கிரஸ் மற்றும் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் வெற்றி பெறுவதற்காக மக்களுக்கு தவறான உத்தரவாதங்களை வழங்குகின்றன. வம்ச கட்சிகள் தங்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே உழைக்கின்றன. அவர்களுக்கிடையேயான பழைய மோதல்கள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதைக் காட்டுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜாமீனில் வருபவர்கள் கூட்டணி அமைக்கின்றனர்.
காங்கிரஸ் உட்பட குடும்பத்தை மையமாகக் கொண்ட கட்சிகள் வழங்கக்கூடிய பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய சொந்த அரசியல் உத்தரவாதம் இல்லாவிட்டாலும், உத்தரவாதத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
எதிர்க்கட்சியினர் வழங்கும் தவறான உத்தரவாதங்கள் வழங்குவதன்மூலம் எங்கேயோ ஏதோ தவறு செய்யப்போகிறார்கள் என்று அர்த்தம். இலவச மின்சாரம், இலவச பயணம், ஓய்வூதியம், பெட்ரோல் விலை குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பு என அவர்கள் வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
இலவச மின்சாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்போது, மின்சாரத்திற்கு அதிக செலவு செய்ய தயாராகிறார்கள். இலவசப் பயணத்திற்கு உத்தரவாதம் அளிப்பதன்மூலம், போக்குவரத்துச் சேவைகள் எதிர்காலத்தில் அழிந்துவிடும். ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான உத்தரவாதம் என்பது அந்த மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கூட கிடைக்த நிலையை உருவாக்கும். குறைந்த விலையில் பெட்ரோல் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதன்மூலம், வரிகளை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கத் தயாராகி வருகின்றனர். வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான உத்தரவாதத்தை, எதிர்காலத்தில் தொழில்கள் மற்றும் வணிகங்களை அழிக்கும் கொள்கைகளுடன் கொண்டு வருவார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர்
- ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாக முயற்சி செய்கின்றன
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் 5 வந்தே பாரத் ரெயில்களை மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவற்றில் 2 ரெயில்களை மத்திய பிரதேசதிற்கானது.
அதற்கு பிறகு பா.ஜ.க. 'பூத்' ஊழியர்களுடன் உரையாடியபோது, மோடி, எதிர்கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சித்தார். இதில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விமர்சித்து அவர் கூறியதாவது:-
இப்போதெல்லாம், ஒரு புதிய வார்த்தை பிரபலமாகி இருக்கிறது. அந்த வார்த்தை என்னவென்றால் உத்தரவாதம். இதனை ஊழல் பற்றிய உத்தரவாதம் (எதிர்கட்சிகளின் ஒற்றுமை) என்று மக்களுக்குச் சொல்ல வேண்டியது பா.ஜ.க.வினர்களின் பொறுப்பு. இது 'லட்சம் கோடி ஊழல்' பற்றிய உத்தரவாதம்.
சில நாட்களுக்கு முன் இவர்கள் (எதிர்கட்சிகள்) அனைவரும் கூடிய 'போட்டோ-ஆப்' நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் சேர்ந்ததிலிருந்தே, குறைந்தது ரூ.20 லட்சம் கோடி ஊழல் நடப்பது உறுதி என்பதை நீங்கள் உணர்வீர்கள். இதில் காங்கிரஸ் மட்டுமே பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது.
பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர். ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாக முயற்சி செய்கின்றன. ஊழல் தலைவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் 'உத்தரவாதம்' கொடுப்பதுபோல், அனைவருக்கும் நான் ஒரு 'உத்தரவாதம்' தருகிறேன். அது என்னவென்றால், நான் அவர்களில் (ஊழலில் ஈடுபட்டவர்கள்) யாரையும் விட்டு வைக்க மாட்டேன். ஒவ்வொரு மோசடியாளரையும் நான் கடுமையாக தண்டிப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜூன் 23-ந்தேதி பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்த எதிர்க்கட்சி கூட்டத்தை மனவில் வைத்து மோடி இவ்வாறு தனது கடுமையனா விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- பிரதமர் மோடி கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றினார்.
- பயிர்கள் சேதம் அடைந்தால் உரிய நிவாரணமும் கொடுக்கிறார்.
போபால்:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் பயணமாக மத்திய பிரதேச தலைநகர் போபால் சென்றார். அங்கு ராணி கமலபதி ரெயில் நிலையத்தில் இருந்து 5 வந்தே பாரத் ரெயில் சேவைகளை அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் பிரதமர் மோடியை தனது மகனாக கருதி தனக்கு சொந்தமான 6.6 ஏக்கர் நிலத்தை, அவருக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது பெயர் மங்கிபாய் தன்வார். மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த மூதாட்டிக்கு 12 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஆனாலும் தனது பிள்ளைகளைவிட பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு வைத்து உள்ளார். தனது அறையிலும் பிரதமர் மோடி படத்தை மாட்டி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக மூதாட்டி மங்கிபாய் தன்வார் கூறியதாவது:-
பிரதமர் மோடி கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றினார். நாட்டு மக்களை தனது குடும்பமாகவே அவர் கருதுகிறார். எங்களையும் கவனித்துக் கொள்கிறார். எனவே அவரை மகனாக கருதி எனது பங்கான 6.6 ஏக்கர் நிலத்தை அவருக்கு வழங்க விரும்புகிறேன்.
தினமும் காலையில் எழுந்ததும் எனது அறையில் உள்ள மோடியின் படத்தை பார்ப்பேன். என்னை போன்ற கோடிக்கணக்கான விதவைப்பெண்களுக்கு அவர் ஓய்வூதியம் வழங்குகிறார். விவசாயிகளுக்கு கோதுமை, அரிசி மற்றும் உணவு கொடுக்கிறார்.
பயிர்கள் சேதம் அடைந்தால் உரிய நிவாரணமும் கொடுக்கிறார். எங்களுக்கு நல்ல வீடு கொடுத்துள்ளார். முதியவர்கள் புனித யாத்திரை செல்ல வழிவகை செய்துள்ளார். முதியோர் ஓய்வூதியத்தை மத்திய அரசு உயர்த்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்க்கட்சியினர் பொது சிவில் சட்டத்திற்கெதிராக வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாராளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மத்தியபிரதேச மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு, நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். பின்னர் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை பல முறை சாடினார்.
அப்போது பொது சிவில் சட்டம் (UCC) மற்றும் முத்தலாக் விவகாரத்தில், முஸ்லிம்களை தூண்டிவிட்டு தவறாக வழி நடத்துவதாக எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கினார்.
"பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை தூண்டி விடுகின்றனர். ஒரு நாடு எவ்வாறு இரண்டு சட்டங்களால் இயங்க முடியும்? அரசியல் சாசனம், பொது சிவில் சட்டத்தை குறித்தும், சம உரிமை குறித்தும் பேசுகிறது. உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இவர்கள் (எதிர்க்கட்சிகள்) பொது சிவில் சட்டத்திற்கெதிராக வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார் மோடி.
பிரதமர் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம், வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்ற கருத்து உருவாகி வருகிறது.
22வது சட்ட கமிஷன், ஜூன் 14 அன்று, இந்த பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு மசோதா குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும், 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐந்து வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நாடு திரும்பிய பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். போபால் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரெயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவா- மும்பை, பாட்னா- ராஞ்சி, போபால்- இந்தூர், போபால்-ஜபல்பூர், பெங்களூரு-ஹூப்ளி ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி போபாலில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பாஜக பூத் ஊழியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.
- ஷாதோல் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைப்பு.
- 5 வந்தே பாரத் ரெயில்களை நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நாடு திரும்பி பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு, இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்.
முதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, பாஜக தொண்டர்களின் பூத் அளவிலான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
மத்தியப் பிரதேச மாவட்டத்தின் ஷாதோல் மாவட்டத்துக்கு இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், போபால் மாவட்டத்திற்கான பயணம் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிவ் சவுகான் தெரிவித்துள்ளார்.
திட்டப்படி, இன்று காலை போபாலுக்கு செல்லும் பிரதமர் மோடி ராணி கமலாபதி ரெயில் நிலையத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து, வந்தே பாரத் அதிவேக ரயில்களான ராணி கமலாபதி (போபால்)-ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கஜுராஹோ-போபால்-இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மற்றும் ஹதியா-பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தொடங்கி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 வந்தே பாரத் ரெயில்களை நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-
நான் நாளை (இன்று) ஜூன் 27-ம் தேதி போபாலில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். முதலில், ராணி கமலாபதி ரெயில் நிலையத்தில் ஒரு நிகழ்ச்சியில் 5 வந்தே பாரத் ரெயில்கள் கொடியேற்றப்படும். இந்த ரெயில்கள் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, பீகார் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில நகரங்களை இணைக்கும்.
மேலும், "மேரா பூத் சப்சே மஸ்பூட்' திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பு வளர்ந்த இந்தியாவுக்கான அவர்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தும்
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- திருமணம் நடைபெற்ற இடம் முழுவதும் மலர்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- இரட்டை சகோதரிகளில் ஒருவரான லதா இரட்டை சகோதரர்களில் ஒருவரான அமனையும், லட்சுமி ரிஷப்பையும் திருமணம் செய்து கொண்டனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லதா மற்றும் லட்சுமி.
இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான அமன் மற்றும் ரிசப்பை திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் கோலாகலமாக நடைபெற்றது.
இரட்டையர்களின் இந்த இரட்டை திருமணத்தை பார்க்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிக அளவில் குவிந்தனர். திருமணம் நடைபெற்ற இடம் முழுவதும் மலர்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஹோம குண்டத்தை மணமக்கள் 7 முறை வலம் வந்தனர். பின்னர் இரட்டை சகோதரிகளில் ஒருவரான லதா இரட்டை சகோதரர்களில் ஒருவரான அமனையும், லட்சுமி ரிஷப்பையும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த 2 ஜோடிகளும் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்ததாக இந்த திருமணத்திற்கு வந்தவர்கள் கூறினர்.
திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் பிரதீப் திவேதி கூறுகையில், நான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். ஆனால் இதுபோன்ற இரட்டையர்களின் திருமணத்தை நடத்துவது இதுவே முதல் முறை என்றார்.
இரட்டை சகோதரிகளின் இளைய சகோதரன் கைலாஷ் கூறுகையில், லதா, லட்சுமி ஆகியோர் பிறந்ததில் இருந்து தற்போது வரை ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். தற்போதும் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்க உள்ளனர் என்றார்.
- சிறுமிகளை அன்புடன் பொதுவெளியில் சந்தித்ததாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விளக்கம்
- தவறாக சித்தரிக்கும் வகையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளதாக மாநில அமைச்சர் கண்டனம்.
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கவுரிசங்கர் பிசென், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் சிறுமிகளை தவறான கண்ணோட்டத்துடன் தொடுவதாக குற்றஞ்சாட்டி இது சம்மந்தமாக ஒரு வீடியோவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் ட்வீட் செய்து பகிர்ந்தனர்.
மத்தியபிரதேச காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தியில் இருக்கும் இந்த வீடியோவை வெளியிட்டு, இது "வெட்கக்கேடான செயல்" என தெரிவித்து, பிசெனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலாகாட் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த பா.ஜ.க., சிறுமிகள் தொடர்பான வீடியோவை ட்வீட் செய்ததற்காக எதிர்க்கட்சியான காங்கிரஸை கண்டித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.
மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா கூறும்போது, "இந்த சிறுமிகள் அவரது (பிசென்) பேத்தியின் வயதுடையவர்கள். பிசென், அவர்களை அன்புடன் பொதுவெளியில் சந்திக்கிறார்" என கூறினார்.
மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சரும், அரசின் செய்தித்தொடர்பாளருமான நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், "இது காங்கிரஸின் கீழ்த்தரமான மனநிலையை பிரதிபலிக்கிறது. கேவலமான அரசியலின் காரணமாகவே, பெண்கள் மீதான அவரது (பிசென்) பாசத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் வீடியோவை காட்டிய விதம் வெட்கக்கேடானது. குறிப்பாக சிறுமிகளின் அடையாளத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்சினையை நாங்கள் சட்டப்பூர்வமாக அணுகுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்," என்றார்.
- அந்த பெண்ணின் சம்மதம் இன்றி செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர்.
- வேறு இருக்கைக்கு செல்ல முடிவெடுத்த அங்கிருந்து சென்றபோதும் விடாமல் தாக்கி உள்ளனர்.
குவாலியர்:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஓடும் ரெயிலில் இருந்து ஒரு பெண்ணை அரைநிர்வாணமாக்கி கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முசாபர்பூரில் இருந்து சூரத் வரை இயக்கப்படும் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து சூரத் நோக்கி ஒரு பெண் மற்றும் அவரது உறவினர்கள் பயணம் செய்தனர். அப்போது அந்த பெண்ணுக்கும், அதே பெட்டியில் பயணித்த 5 ஆண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை 5 பேரும் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் சம்மதம் இன்றி செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட உறவினரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதையடுத்து வேறு இருக்கைக்கு செல்ல முடிவெடுத்த இருவரும் அங்கிருந்து வாசல் பகுதிக்கு சென்றனர். ஆனால் அப்போதும் விடாத 5 நபர்களும் வாசலில் வைத்து அந்த பெண்ணை மீண்டும் தாக்கி பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். சேலையை உருவி அரை நிர்வாணமாக்கி ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். உடனிருந்த உறவினரையும் தள்ளிவிட்டுள்ளனர்.
பரோடி கிராமத்தின் அருகே இருவரும் கீழே தள்ளிவிடப்பட்டுள்ளனர். பலத்த அடிபட்டு மயங்கிய அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே கிடந்துள்ளனர். காலையில் அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.
- எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார்.
போபால்:
எவரெஸ்டின் அடிவார முகாம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு ஏக சிரமப்படுவார்கள். ஆனால் 5½ வயதே ஆகும் பிரிஷா, இந்த உயரத்தை தொட்டு, பிரமிப்பூட்டி இருக்கிறார்.
பிரிஷாவின் பூர்வீகம் மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் என்றாலும், மகாராஷ்டிர மாநிலம் தானேயில் தனது பெற்றோர், 2 சகோதரிகளுடன் வசிக்கிறார்.
மும்பையில் ஐ.டி. என்ஜினீயராக பணிபுரியும் லோகேஷ், ஒரு மலையேற்ற வீரரும்கூட. அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.
அதையடுத்து அவருக்கு மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை தந்தை லோகேசும், தாய் சீமாவும் வழங்கியிருக்கிறார்கள். அதன் விளைவாக, பிரிஷா தனது 2½ வயதிலேயே மலையேறத் தொடங்கிவிட்டார். தனது 3 வயதில், மகாராஷ்டிரத்திலேயே உயரமான சிகரமான கால்சுபாயை தொட்டுவிட்டார்.
அந்த வழியில், எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார்.
தினமும் 5, 6 மைல் தூரம் நடப்பது, ஏரோபிக்ஸ் பயிற்சி, தனது அடுக்குமாடிக் குடியிருப்பு படிகள், பூங்கா சுவரில் ஏறுவது என்று தயாரானார்.
கடந்த மே 24-ந்தேதி நேபாளத்தின் லுக்லாவில் இருந்து தனது தந்தையுடன் மலையேற்றத்தை தொடங்கிய பிரிஷா, இம்மாதம் 1-ந்தேதி எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தார். அங்கு இந்திய தேசியக்கொடியுடன் பெருமிதத்தோடு 'போஸ்' கொடுத்தார்.
'இவ்வளவு உயரமான இடத்தை எட்டுவதற்கு பெரியவர்களான மலையேற்ற வீரர்களே மிகவும் சிரமப்படுவார்கள். பலருக்கு மூச்சுத்திணறல், தலைவலி, மலைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் பிரிஷா கஷ்டங்களை எல்லாம் எளிதாக கடந்து இந்த சாதனையை படைத்துவிட்டாள்' என்று பூரிப்பாய் சொல்கிறார் தந்தை லோகேஷ்.
அடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் பிரிஷா ஏறுவார் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த குட்டிப்பெண், மலையேற்றத்தில் கெட்டிதான்!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்