search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • விசாரணையில் காதல் ஜோடியை சிவானியின் தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
    • 2 பேரது உடல்களை இரவோடு இரவாக ஒருபெரிய கல்லில் கட்டி சம்பல் ஆற்றில் வீசிவிட்டனர்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் மோரினா மாவட்டம் பாலுபுரா அருகே உள்ள ரத்தன் பசாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவரது மகள் சிவானி (வயது18). இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராதேஷ்யம் (21) என்ற வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு 2 வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் சிவானி குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். காதலனை மறந்து விடும் படி கூறினார்கள். இதனால் காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் திடீரென மாயமானார்கள். இதுபற்றி ராதேஷ்யம் தந்தை போலீசில் புகார் செய்தார். தனது மகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர். ஆனாலும் அவர்களை பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் போலீசாரின் சந்தேக பார்வை சிவானி குடும்பத்தினர் மீது திரும்பியது. போலீசார் அவரது தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதல் ஜோடியை சிவானியின் தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. மேலும் 2 பேரது உடல்களை இரவோடு இரவாக ஒருபெரிய கல்லில் கட்டி சம்பல் ஆற்றில் வீசிவிட்டனர். அந்த ஆறு அதிகம் முதலைகள் நிறைந்தது ஆகும். இதையடுத்து போலீ சார் காதல் ஜோடியின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் உடல்களை முதலைகள் கடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

    • தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை.
    • இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார்.

    ஜபல்பூர் :

    மத்திய பிரதேச மாநிலம், தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் துர்வே. இவரது மனைவி ஜாம்னி பாய், கடந்த 13-ந் தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பலவீனமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

    அதன்படி பெற்றோர், அந்த குழந்தையை அங்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 15-ந் தேதி குழந்தை இறந்து விட்டது. ஆனால் அந்த குழந்தையின் உடலை பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லை என்று கூறி தர மறுத்து இருக்கிறது.

    தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை. இதையடுத்து குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து, பஸ்சில் எடுத்துச்சென்றுள்ளார்.

    இதை அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் உருக்கமுடன் கூறி உள்ளார்.

    ஆனால், இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "புதிதாக பிறந்துள்ள குழந்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை தொடங்கி உள்ளது. ஆனால் குழந்தையின் நிலைமை மோசமாக இருந்தபோதும், அதன் பெற்றோர் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். எனவே டிஸ்சார்ஜ் செய்த போது குழந்தை உயிருடன்தான் இருந்தது" என தெரிவித்தார்.

    • கஸ்தூரிபாய் தனது கணவர் கோவிந்திடம் 2-வது திருமணம் செய்து கொள்ள கூறினார்.
    • கோவிந்த், ஹீராபாய் (30) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தார்.

    மத்தியபிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் அதர்வேடியா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் குஷ்வாகா (வயது 62), இவரது மனைவி கஸ்தூரி பாய் (60). இவர்களது 18 வயது மகன் விபத்தில் உயிரிழந்தான்.

    எனவே குழந்தையின்றி இந்த தம்பதியினர் தவித்தனர். இந்நிலையில் கஸ்தூரிபாய் தனது கணவர் கோவிந்திடம் 2-வது திருமணம் செய்து கொள்ள கூறினார். அதன்படி கோவிந்த், ஹீராபாய் (30) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தார். திருமணமாகி 6 வருடங்களுக்கு பிறகு கர்ப்பம் அடைந்த ஹீராபாய்க்கு கடந்த 12-ந்தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஹீராபாய்க்கு மறுநாள் காலை அறுவை சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்தார்.

    அந்த குழந்தைகள் பலவீனமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவில் இணைந்த சிந்தியா தற்பொது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.
    • தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ல் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த மோதலின் உச்சகட்டமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த அவர்கள், பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவில் இணைந்த சிந்தியா தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.

    இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஜோதிராதித்ய சிந்தியாவைப் பின்பற்றி பாஜகவில் இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஒருவரான பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார். சிவபுரியில் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவரான பைஜ்நாத் சிங்குடன், மாவட்ட அளவிலான 15 பாஜக தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர். அவர்களை மூத்த தலைவர்கள் கமல் நாத், திக்விஜய் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

    தலைவர்கள் அதிருப்தி காரணமாக கட்சி தாவுவது சகஜம் என்றாலும், பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புவதை கொண்டாடும் வகையிலும், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையிலும் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது. 400 வாகனங்கள் அணிவகுக்க, தனது தொகுதியான சிவபுரியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள போபாலுக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கட்சியில் இணைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பைஜ்நாத் சிங், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், சீட் கிடைக்கும் என எந்த நம்பிக்கையும் ஏற்படாததால் மீண்டும் காங்கிரசில் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளன.
    • வருகிற 22-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய பிரதேச மாநிலம் வருகிறார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், கடந்த முறை ஆட்சியை பறி கொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளன. இம்மாநிலத்தை பொறுத்தவரை பல சட்டசபை தொகுதிகளின் வெற்றி, தோல்வி பெண் வாக்காளர்கள் கையில் உள்ளது. இதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க பாரதிய ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.

    காங்கிரசும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம் என தெரிவித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்தியபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார் என அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சர்மா தெரிவித்து உள்ளார்.

    அன்று ஒருநாள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தலைநகர் போபாலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் அவர் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறார்.

    10 லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட இருக்கிறார். அப்போது தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அவர் ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட பா.ஜனதா தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மத்தியபிரதேசத்தில் பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடி 27-ந்தேதி ஜபல்பூர்-இந்தூர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் தர் பகுதியில் ரத்தசோகை நோயை தடுப்பது தொடர்பான நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கடந்த 2½ மாதங்களில் பிரதமர் மோடி 3-வது முறையாக மத்தியபிரதேசம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக வருகிற 22-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய பிரதேச மாநிலம் வருகிறார். அவர் பலாகத் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    தேர்தலுக்கு இன்னும் 5 மாதம் இருக்கும் நிலையில் தலைவர்கள் அடுத்தடுத்து பிரசாரம் செய்ய உள்ளதால் மத்தியபிரதேச அரசியல் களம் இப்போதே பரபரப்பாகி இருக்கிறது.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.
    • மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு.

    மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது.

    இந்த அரசு கட்டிடத்தில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும் தீ பரவியது.

    இதையடுத்து, ஊழியர்கள், அலுவலர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    கட்டிடத்தில் இருந்த பர்னிச்சர் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீயை முழுவதும் அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது.

    மேலும், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
    • மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை கைவிட்டதாக பிரியங்கா குறிப்பிட்டார்.

    ஜபல்பூர்:

    மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஜபல்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் ஊழலில் மூழ்கிவிட்டது. வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டது. 'வியாபம்' மற்றும், 'ரேஷன் விநியோகம்' ஆகியவற்றில் ஊழல் நடந்திருக்கிறது. மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் 220 மாத ஆட்சியில் 225, 'மோசடிகள்' நடந்துள்ளன.

    கடந்த 3 ஆண்டுகளில், பா.ஜ.க. அரசாங்கத்தால், மாநிலத்தில் 21 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, எனது அலுவலகத்தில் இதனை 3 முறை சரி பார்த்ததற்கு பிறகு, இது உண்மைதான் என கண்டறிந்தேன்.

    நாங்கள் (காங்கிரஸ்) பல இரட்டை-எஞ்சின் மற்றும் மூன்று-எஞ்சின் அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் (பா.ஜ.க.விற்கு) தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

    காங்கிரசிலிருந்து பா.ஜ.க.விற்கு மாறிய தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவை, பெயரை குறிப்பிடாமல் கிண்டல் செய்த பிரியங்கா காந்தி, மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை கைவிட்டதாக குறிப்பிட்டார்.

    சிந்தியாவுக்கு விசுவாசமான எம்.எல்.ஏக்கள் கடந்த மார்ச் 2020 வருடம் காங்கிரஸிலிருந்து வெளியேறி, கமல்நாத் அரசாங்கத்தை வீழ்த்தி, தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் ஆட்சிக்கு வர வழி வகுத்தனர்.

    • துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ராஜேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
    • துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலக்குத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கோதாரா. இவர் தனது வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டேதாத் என்பவரின் குடும்ப உறுப்பினரைக் கண்டு அந்த நாய் தொடர்ந்து குரைத்தது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த டேதாத் தரப்பினர் துப்பாக்கியை எடுத்து வந்து ராஜேஷ் தரப்பினர் மீது சரமாரியாக சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ராஜேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரது உறவினர் கைலாஷ் கோதாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    மேலும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இன்னொருவரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். பின்னர் அவரை இந்தூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து சட்டம், ஒழுங்கை பாதுகாக்க மேற்கண்ட கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மஞ்சித் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஏழு பேர் கும்பல் இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

    அதில், டெதாத், வருண் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நாய் குரைத்த ஒரே காரணத்துக்காக ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது.
    • மத்தியப் பிரதேச முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

    100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர். இந்நிலையில், சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது.

    மீட்கப்பட்ட பெண் குழந்தை அங்கிருந்த ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆழ்துளை கிணற்றின் குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மனம் அளவற்ற வேதனையும் துயரமும் நிறைந்துள்ளது. தொடர் மற்றும் அயராத முயற்சிகளுக்குப் பிறகும், சேஹூரில் உள்ள முங்காவாலியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த அப்பாவி சிறுமியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

    இந்த துக்க நேரத்தில் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருடன் நாம் அனைவரும் இருக்கிறோம்.

    சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் ஆற்றலையும் இறைவன் தர பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றன.
    • மயங்கிய நிலையில் மீட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    போபால்:

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர்.

    இந்நிலையில், சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    மீட்கப்பட்ட பெண் குழந்தை அங்கிருந்த ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    300 அடி போர்வெல் குழிக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • லாரி முதலில் கார் மீது மோதி பிறகு அதன் மேலேயே கவிழ்ந்துள்ளது.
    • காவல் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சித்தி:

    மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் இன்று சொகுசு கார் மீது லாரி ஒன்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.

    சித்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர சிங் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்த தகவலின்படி, இந்த விபத்து காலை 09:30 மணியிலிருந்து 10:00 மணிக்குள், டோல் கிராமத்திற்கு அருகே சித்தி-திகாரி சாலையில் நிகழ்ந்துள்ளது.

    லாரி முதலில் கார் மீது மோதி பிறகு அதன் மேலேயே கவிழ்ந்துள்ளதன் விளைவாக 7 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

    • பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள் ஆவர்.
    • தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    பள்ளிக்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் சிக்கலில் சிக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சம்பந்தப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் கட்டியிருந்த கயிறு மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள், இருவர் வேறு மதத்தை சேர்ந்தவர்கள ஆவர்.

    ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது ஐ.பி.சி. 295 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் தாமோ கோட்வாலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

    முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கா ஜமுனா பள்ளி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    ×