search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
    • 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு இந்தூர் மைதானத்தில் தொடங்குகிறது. 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்தியா தொடரைக் கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.

    மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வென்றால் கவாஸ்கர் பார்டர் கிரிக்கெட் கோப்பையை மீண்டும் தக்கவைப்பதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். எனவே வெற்றியை பதிவு செய்ய இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    அதே வேளையில் தொடர் தோல்வியிலிருந்து மீள்வதுடன் நடப்பு தொடரையும் மோசமாக இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணியினரும் தயாராகி வருகின்றனர்.

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.
    • முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள புதிய ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

    இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் உணவு உண்ட 43 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு, பழச்சாறு சாப்பிட்ட பிறகு சுமார் 43 பேர் வாந்தி எடுத்து, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.

    மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் ஆரம்ப சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    • விபத்தில் காயமடைந்தர்களை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் சந்தித்து பேசினார்.
    • இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பல நலத்திட்டங்களும் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.

    மத்தியப் பிரதேசம் மாநிலம், ரேவா- சட்னா எல்லையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மீது சிமெண்ட் ஏற்றிக் கொண்டு வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகே இரவு 9 மணியளவில் மகாகும்பத்தில் கலந்து கொண்டு திரும்பிய பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அவ்வழியாக வந்த சிமெண்ட் லாரியின் டயர் வெடித்ததில் ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்துகள் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்து குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) டாக்டர் ராஜேஷ் ரஜோரா கூறுகையில், "இந்த கோர விபத்தில், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில், காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

    இந்நிலையில், விபத்தில் காயமடைந்தர்களை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேவைப்பட்டால் மேற்சிகிச்சைக்காக நோயாளிகள் ரேவாவிற்கு வெளியே விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.

    இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பல நலத்திட்டங்களும் வழங்கப்படும்" என்றார்.

    • பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • முன்னதாக, போது, விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது.

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இண்டிகோ விமானம் 6E 2407 ஒன்று நேற்று டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது, திடீரென மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதால், டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானத்தை மத்தியப் பிரதேசம் மாநிலம், போபாலுக்கு திருப்பிவிடப்பட்டது.

    இந்நிலையில், பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும், அந்த அறிக்கையில், " மருத்துவ அவசரநிலை காரணமாக விமானம் போபாலில் தரையிறக்கப்பட்டதற்கு வருத்தம் தெிரவித்துக் கொள்கிறோம். போபாலில் தரையிறங்கிய பிறகு, விமான நிலையக் குழுவினர், ஒரு நொடி கூட வீணடிக்காமல், விரைவாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை ஆம்புலன்ஸில் ஏற்றி, அவரைப் பாதுகாப்பாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    முந்தைய நாள், கோழிக்கட்டில் இருந்து தம்மம் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படும் போது, விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சத்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் கடந்த 11-ந்தேதி ஆகாஷ்-சீதா அகிர்வார் என்ற தலித் தம்பதியின் திருமண விழா நடைபெற்றது.
    • திருமண விழாவிற்கு வந்தவர்கள் இரவு விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள அனுமான் கோவிலான பாகேஷ்வர் தாம் கோவிலின் இளம் பீடாதிபதியாக திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி உள்ளார்.

    சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

    இந்த கோவிலுக்கு சமீபத்தில் மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், பா.ஜனதா மாநில தலைவர் சர்மா உள்பட பல அரசியல்வாதிகள் சென்று வந்தனர்.

    இந்நிலையில் இவரது இளைய சகோதரரான சவுரப் என்ற ஷாலிகிராம்( வயது 26) என்பவரும் தற்போது ஒரு வீடியோவால் பரபரப்பாக பேசப்படுகிறார்.

    சத்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் கடந்த 11-ந்தேதி ஆகாஷ்-சீதா அகிர்வார் என்ற தலித் தம்பதியின் திருமண விழா நடைபெற்றது.

    இந்த திருமண விழாவிற்கு வந்தவர்கள் இரவு விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சவுரப் கையில் நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு விருந்தினர்களை மிரட்டுவது போன்றும், கையில் சிகரெட்டை புகைத்தவாறும் வீடியோவில் காட்சியளிக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து சத்தர்பூர் மாவட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஒரு குழு அமைத்துள்ளனர்.

    விசாரணையின் அடிப்படையில் சவுரப் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தாகர்கானின் சொத்துகள் தொடர்பாக 2 மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்று உறுதி படுத்தப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    போபால்

    மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன் விவாகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் தாகர்கானின் சொத்துகள் தொடர்பாக 2 மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று அஞ்சும் 3 பேருடன் சேர்ந்து தாகர்கானின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஹூமாகானுடன் அவர் சண்டை போட்டுள்ளார். சத்தம் கேட்டு தாகர்கான் வெளியே வந்தார்.

    அப்போது அவர்களுக்கிடையே நடந்த தகராறில் தாகர்கான் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த அவரும், அவரது 2-வது மனைவியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்று உறுதி படுத்தப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகத்திற்கு களப்பயணத்திற்காக, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சென்றனர்.

    மாணவர்கள் நேற்று மாலை பேருந்தில் கட்னி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பன்னா மாவட்டத்தில் உள்ள குவாகேடா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்து உதவியாளர் உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 32 மாணவர்களில் 16 பேர் காயமடைந்தனர்.

    இதையடுத்து காயமடைந்தவர்கள் ராய்புரா அரசு மருத்துவமனையில் முதன்மை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தலையில் படுகாயமடைந்த மாணவர் உட்பட இருவர் மேல்சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.
    • 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிவிங்கி புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும்.

    போபால்:

    சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன.

    இந்தியாவின் சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 1947-ம் ஆண்டு கடைசி சிவிங்கிபுலி இறந்தது. அதன் பிறகு 1952-ம் ஆண்டு அந்த இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கி புலி கண்டுபிடிக்கப் படவில்லை.

    இதையடுத்து சீட்டாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அந்நாட்டில் இருந்து 8 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இதில் 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகள் ஆகும்.

    இந்த சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தின் குனோ-பல்புர் தேசிய பூங்காவில் திறந்துவிட்டார்.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

    இது தொடர்பாக இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கி புலிகளை கொண்டு வர இந்திய விமான படையின் சி-17 ரக விமானம் கடந்த 16-ந்தேதி புறப்பட்டு சென்றது. அங்கு 12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.

    சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிவிங்கி புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும்.

    அவைகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோர் கூண்டில் இருந்து திறந்து விடுகிறார்கள்.

    மேலும் 12 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    • அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக உணவுப் பாதுகாப்பு என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது.
    • நிலமோ, இயற்கை வளமோ தற்போது உள்ளதைவிட அதிகரிக்கப் போவதில்லை.

    இந்தூர்:

    இந்தியாவின் ஜி20 தலைமையின்கீழ், முதலாவது ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் மூன்று நாள் கூட்டம், இந்தூரில் இன்று தொடங்கியது. ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய வேளாண் துறை செயலாளர் மனோஜ் அஹுஜாவும் பங்கேற்றார்.

    மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சிறுதானியம் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களுடன் கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை தொடர்பான அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

    நிகழ்ச்சியில் சவுகான் பேசியதாவது:-

    வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, சாகுபடி செலவை குறைப்பது மற்றும் விவசாயிகளுக்கு நல்ல விலையை உறுதி செய்வது ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். இந்த இலக்கை நோக்கி இந்தியா ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

    அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக உணவுப் பாதுகாப்பு என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. 2000ஆம் ஆண்டில் 192 மில்லியன் டன்னாக இருந்த உலக உணவு தானிய தேவை, 2030ஆம் ஆண்டில் 345 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    உலகில் உள்ள விளை நிலங்களில் 12 சதவீதம் மட்டுமே விவசாயத்திற்கு ஏற்றவையாக உள்ளன. நிலமோ, இயற்கை வளமோ தற்போது உள்ளதைவிட அதிகரிக்கப் போவதில்லை.

    எனவே, எதிர்கால உணவுத் தேவையை பூர்த்தி செய்ய நிலம் மற்றும் இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

    உள்ளூர் அமைப்புகள் மூலம் புதிய தொழில்நுட்பங்களை இணைப்பதன் மூலம் விவசாயத் துறையை மேம்படுத்த ஜி-20 உச்சிமாநாடு உதவும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார்.
    • சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் மனு

    சியோனி:

    மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் விகாஸ் யாத்திரையின் ஒரு பகுதியாக, கடந்த 5ம் தேதி சிஎம் ரைஸ் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஒரு மாணவர், மகாத்மா காந்தியை விமர்சனம் செய்யும் வகையில் கவிதை வாசித்தார். வன்முறையின் போது மகாத்மா அமைதியாக இருந்ததாக அந்த கவிதையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடுவதாக அமைந்தது.

    மாணவர் இவ்வாறு மகாத்மாவுக்கு எதிரான வாசகத்துடன் கவிதை வாசித்தபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்

    இந்நிலையில், அந்த மாணவரை வழிநடத்திய ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பள்ளி முதல்வர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக பொறுப்பு என்றும், அவர்களின் சித்தாந்தம் மகாத்மா காந்தியை அவமதிக்க குழந்தைக்கு கற்றுக்கொடுத்திருப்பதாகவும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் குரானா விமர்சித்தார்.

    தன் மீதான விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ முன்மம், இந்த சம்பவம் பள்ளி குழந்தைகள் தொடர்புடையது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார். குழந்தைகளை அரசியலுக்கு இழுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடிப்பழக்கத்தை அரசாங்கம் பணமாக்கக் கூடாது என்று உமா பாரதி கூறினார்.
    • மது விற்பனைக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் மாட்டுச் சாணத்தை வீசினார்.

    பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான பிரச்சாரத்தை மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதி மேற்கொண்டுள்ளார்.

    அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார். பின்னர், பசும்பால் குடிக்கவும், மதுவைத் தவிர்க்கவும் என்று மதுவிற்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

    கோவில்களுக்கும், அரண்மனைகளுக்கும் பெயர் பெற்ற நிவாரி மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா நகரத்தில் மதுபானம் விற்கும் கடையின் முன் நின்று, பசுக்களைக் கட்டிவிட்டு, "பசும்பால் குடிக்கவும்.. மதுவை தவிர்க்கவும்" என்ற பிரசாரத்தை மேற்கொண்டார்.

    மேலும் அவர், குடிப்பழக்கத்தை அரசாங்கம் பணமாக்கக் கூடாது என்றும் கூறினார்.

    மது விற்பனைக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் மாட்டுச் சாணத்தை வீசினார். மார்ச் 2022ல், போபாலில் உள்ள ஒரு மதுபானக் கடை மீது கல் எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நரசிங் தேவாங்கன் திருடப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்து அரசு வேலையில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.
    • திருடப்பட்ட அடையாள அட்டையின் மூலம் 36 ஆண்டுகள் அரசு பணியாற்றி உள்ளார்.

    போபால்:

    மத்திய பிரேதச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அனுப்புர் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வயல்கள் உள்ளன. இதில் 1984-ம் ஆண்டு நரசிங் தேவாங்கன் என்பவர் தனக்கு அறிமுகமான தாதாய்ராம் என்பவரது அடையாள அட்டையை திருடி அதன் மூலம் அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

    அதன்படி நரசிங் தேவாங்கனுக்கு அரசு வேலையும் கிடைத்தது. அவர் தொடர்ந்து 36 ஆண்டுகளாக 2020-ம் ஆண்டு வரை அரசு பணியாற்றி இறந்தார்.

    இந்நிலையில் மரணத்திற்கு பிறகு கருணைத்தொகை மற்றும் இதர பலன்களை பெறுவதற்காக அவரது மனைவி அகில்யாபாய் தேவாங்கன் விண்ணப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தாதாய்ராமின் மனைவி என கூறி வங்கி கணக்கு தொடங்குவதற்காக சென்றார். அப்போதுதான் நரசிங் தேவாங்கன் திருடப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்து அரசு வேலையில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. ஆனாலும் அந்த அட்டையின் மூலம் அவர் 36 ஆண்டுகள் அரசு பணியாற்றி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தாதாய்ராம் தற்போது கல்யாண்பூர் கிராமத்தில் வசித்து வருவது தெரியவந்தது. 75 வயதான அவரது குடும்பம் வறுமையில் உள்ளதாம். அவரது மகன் ஹர்குஷாகுல் கூறுகையில், நான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் மாதம் ரூ.6 ஆயிரம் வரை மட்டுமே வருமானம் கிடைக்கிறது. எனது தந்தையின் அடையாளத்தை பயன்படுத்தி நரசிங் தேவாங்கன் வாழ்நாள் முழுவதும் அரசு பணியில் இருந்துள்ளார். இது எனக்கு சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது.

    எனது தந்தையும், நரசிங்கும் ஒரு காலத்தில் ஒன்றாக தொழிலாளர்களாக வேலை பார்த்துள்ளனர். அப்போதுதான் நரசிங் எனது தந்தையின் அடையாள அட்டையை திருடி அரசு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×