search icon
என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது விபரீதம்.
    • சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர்.

    இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

    அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர்.

    இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள கோவிலில் ஜெர்மனி பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிந்தார்.
    • மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    ஜெகர்த்தா:

    இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள கோவிலுக்குள் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் சென்றார். அவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டார். அப்போது அங்கு ஏராளமானோர் உடனிருந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோவிலில் நிர்வாணமாக இருந்ததற்காகவும், புனித தலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அவரை மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பாலி கோவிலில் ஜெர்மனி பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்தோனேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர்.
    • அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். இந்தப் படகு புளாவ் புருங் என்ற இடத்தின் அருகிலுள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தைகள், பெண்கள் என 58 பேரை மீட்டனர்.

    திடீரென ஏற்பட்ட விபத்தால் 11 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். மேலும் 10 பேர் மாயமாகினர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் வீடுகள், ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கெப்புலவுன் படு நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உண்டானது.

    இந்த நிலையில் இந்தோனோசியாவில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.

    இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா, மென்டலாய் தீவு உள்ளிட்ட இடங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழுமையான சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அதிகாலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பு நிலவியது.

    • இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது.

    நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.

    முதல் நிலநடுக்கம் 43 கி.மீ. ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 40.கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தோனேசியாவில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் அருகே அமைந்துள்ள மொலுகா கடலின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இன்று மதியம் 3.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • இந்தோனேசியாவில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது

    ஜாவா:

    இந்தோனேசியாவில் இன்று மதியம் 3.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

    சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • பலர் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்தனர். மேலும் பல மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஜகார்த்தா:

    இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அதன் தலைநகரான ஜகார்த்தா அருகே உள்ள போகோர் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்தனர். மேலும் பல மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணி மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்துச் சிதறியது.
    • இதனால் அனல் மேகங்கள், எரிமலைக் குழம்புகளை வெளியேற்றி வருகிறது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் 2,968 மீட்டர் (9,721 அடி) உயரமுள்ள மெராபி எரிமலை நள்ளிரவு வெடித்துச் சிதறியது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல் அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    இந்த எரிமலை கடந்த 2010ம் ஆண்டு வெடித்த போது 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
    • இந்தோனேஷியாவை போல பக்கத்து நாடான மலேசியாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

    இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. தொடர் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    தொடர் மழை காரணமாக இந்தோனேஷியாவில் உள்ள பல தீவுகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமானது. ரியாசு தீவில் நிலச்சரிவில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததால் அதில் சிக்கி பெண்கள் உள்பட 11 பேர் இறந்து விட்டனர்.

    50க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை. பலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என தெரிகிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தோனேஷியாவை போல பக்கத்து நாடான மலேசியாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ரோடுகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மலேசியாவில் நேற்று மழைக்கு 4 பேர் பலியாகிவிட்டனர்.

    • சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
    • அண்டை நாடான மலேசியாவிலும் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் வெளிப்புற தீவுகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. நிலச்சரிவினால் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் குப்பைகளால் பல வீடுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    ரியாவு தீவில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என கூறுகின்றனர்.

    தற்போது அங்கு வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால் மீட்பு பணிகளும் சவாலாக உள்ளன. நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணியை விரைவுபடுத்துவதற்காக தேசிய பேரிடர் பாதுகாப்பு நிறுவனம் நாளை ஹெலிகாப்டரை அனுப்பவுள்ளது.

    அண்டை நாடான மலேசியாவிலும் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் நான்கு பேர் இறந்துள்ளனர். கடந்த வாரம் 41,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    • இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது.

    இந்தச் சேமிப்பு கிடங்கில் சமீபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் சேமிப்பு கிடங்கில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்தது.

    இந்நிலையில், எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்தில் 16 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    தகவலறிந்து 52 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    ×