search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசிய காட்சி.

    8 வழிச்சாலை குறித்து மக்களிடம் பொய் பிரசாரம் செய்கின்றனர்- அமைச்சர் உதயகுமார்

    சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை குறித்து சிலர் மக்களிடம் பொய் பிரசாரம் செய்வதாக திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். #ChennaiSalemgreenexpressway
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தின் நன்மைகள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துக் கொண்டு பேசியதாவது:-

    இந்தியாவிலேயே 2-வது பசுமை சாலை தமிழகத்தில் தான் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான ஆதரவு இல்லை என்று வதந்தி பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் திரண்டு இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது 8 வழிச்சாலைக்கு ஆதரவு அதிகம் இருப்பதை உணர முடிகிறது.

    ஜெயலலிதா வழியில் தொடரும் அ.தி.மு.க. ஆட்சி எவ்வளவு சீக்கிரம் கவிழும் என சிலர் ஜாதகம் பார்க்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சி ஆயுள் காலம் சில ஆண்டுகள் மட்டுமே எனவும் எதிர்ப்பார்க்கின்றனர். எத்தனை ஆண்டுகளானாலும் அ.தி.மு.க ஆட்சியை அசைக்க முடியாது.

    110-விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அதன் பிறகே, 110 விதியில் திட்டங்களை அறிவிப்பது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட எதிர்கட்சியினருக்கே விவரம் தெரியும்.

    8 வழி சாலை அமைவதால் 5 மாவட்டங்களிலும் தொழில் வளம், தனிநபர் வருமானம் மற்றும் கட்டுமான வளர்ச்சி பெருகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பசுமை சாலை அமைக்கப்படும்.

    இதற்கு முன் உதாரணமாகவே ரூ.10 ஆயிரத்து 250 கோடியில் சென்னை- சேலம் பசுமை வழி சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டத்திற்கு மக்கள், விவசாயிகள் பெரும்பாலும் ஆதரவளித்துள்ளனர்.

    சிலர் பொய் பிரசாரம் செய்து விவசாயிகளையும், மக்களையும் குழப்பி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் தீயசக்திகள் ஊடுருவியுள்ளனர்.


    பசுமை சாலை திட்டத்தால் கிடைக்கும் நன்மை என்னென்ன என்று தெரியாமல் மக்களை ஏமாற்றி குழப்பத்தை விளைவிக்கின்றனர். கையகப்படுத்தும் நிலத்திற்கு 2014 புதிய நில எடுப்பு சட்டத்தின் படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    மேலும் 2½ மடங்கு முதல் 4½ மடங்கு வரை நிலத்திற்கு நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்கப்படும். நிலத்தை கையகப்படுத்திய பிறகு உடனடியாக விவசாயிகளிடம் காசோலை வழங்கப்படும்.

    தற்போது அளவீடு மற்றும் மதிப்பீடு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. நிலத்தை கொடுக்கவும், கொடுக்க மறுக்கவும் விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், பசுமை சாலை திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அதன் பலன்களை முதலில் அறிந்து கொண்டு பிறகு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

    தமிழகம் சாலை விபத்தில் முதல் மாநிலமாக உள்ளது. பசுமை சாலை திட்டத்தால் விபத்துகள் குறையும். குறுகிய, விபத்துகள் ஏற்படும் மேலும் பல சாலைகள் அகலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன், பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #ChennaiSalemgreenexpressway
    Next Story
    ×