search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஓஷோ
    X
    ஓஷோ

    இரு துருவம்... - ஓஷோ

    சிலருடன் கைகுலுக்கும் போது, வெட்டுண்ட மரக்கிளையுடன் கைகுலுக்குவது போல உணர்வீர்கள். அதில் உயிரிருக்காது: கதகதப்பு இருக்காது; சக்தி இருக்காது.
    ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசும்படி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ட்ரூமன் உத்தரவிட்டார். இரண்டு லட்சம் பேருக்கு மேல் எரிந்து சாம்பலாய்ப் போனார்கள்.

    அணுகுண்டுகள் வீசப்படும்வரை அவர் உறங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார். போடப்பட்டது தெரிந்த பிறகுதான் தூங்கப்போனார் ட்ருமேன்!

    மறுநாள் காலையில் பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு முதலில் கேட்ட கேள்வி இதுதான்:-

    “இரண்டு லட்சம் பேரைக் கொன்ற பிறகு, உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிந்ததா?”

    ஜனாதிபதி ட்ரூமன், “ஓ, நிம்மதியாகத் தூங்கினேனே! சில மாதங்களுக்குப் பிறகு நேற்றுத்தான் நான் நன்றாகத் தூங்கினேன். காரியம் கச்சிதமாக முடிந்துவிட்டது. இனி ஜப்பான் சரணடைய வேண்டியதுதான். தகவல் வந்ததும் நான் மிகவும் திருப்தியடைந்தேன். இரவு முழுவதும் ஒருமுறை கூட விழிக்காமல் நிம்மதியாகத் தூங்கினேன்,” என்றார்.

    சுரணையற்ற மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள். பலம் மிக்கவர்களுக்கு எந்த உணர்வுகளும் இருக்காது. மனிதர்களின் தலையை வெட்ட முற்படும்போது, அவனுக்கு இரண்டாவது யோசனை வருவதே இல்லை.

    மற்றொரு மனிதர் ஜார்ஜ் பெர்னாட்ஷா.

    இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதர் ஜார்ஜ் பெர்னாட்ஷா.

    ஓவியப் படைப்பாளியும், நாவலாசிரியருமான ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார்.

    ஷாவின் வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. அவருடைய அறைக்குள் சென்றபோது அங்கே ஒரு பூ கூடக் காணப்படவில்லை.

    ‘அதிசயமாக இருக்கிறதே... தோட்டத்தில் அத்தனைப் பூக்கள் இருக்கின்றனவே, சிலவற்றைப் பறித்து இங்கே ஒரு பூத்தொட்டியில் வைத்திருக்கலாமே,” என்றார் நாவலாசிரியர்.

    அதற்கு ஷா, “நான் குழந்தைகளைக் கூட நேசிக்கிறேன். அவர்களும் மலர்களைப் போல அழகானவர்கள்; அதற்காக அவர்களின் தலைகளைக் கொய்து இந்த அறையை அழகு செய்ய முடியுமா?  

    மலர்கள் மலர்கின்றன. மழையிலும், கதிரொளியிலும் காற்றிலும் அவை ஆடி மகிழ்கின்றன. அவை உயிரோடு இருப்பவை. நான் கசாப்புக் கடைக்காரன் அல்லன். உயிருள்ள அவற்றை என்னால் வெட்ட முடியாது, என் அறையில் பிணங்கள் இருப்பதை நான் விரும்பவில்லை என்றார்.

    அவர் சொன்னது சரிதான். அவர் உணர்ச்சிமயமானவர். அவர் மிகுந்த உணர்ச்சி உள்ளவர். உண்மையான மனிதர்.

    இந்த இரண்டு விதமான மனிதர்களையும் நீங்கள் தினமும் சந்திக்கிறீர்கள்.

    சிலருடன் கைகுலுக்கும் போது, வெட்டுண்ட மரக்கிளையுடன் கைகுலுக்குவது போல உணர்வீர்கள். அதில் உயிரிருக்காது: கதகதப்பு இருக்காது; சக்தி இருக்காது.

    வேறு சிலருடன் கை குலுக்கும்போது ஏதோ ஒன்று உங்களுக்குள் பாய்வதை உணரலாம்; ஒரு வெப்பம், அன்பான நட்பு பரிமாறப்படுவதை உணரலாம். அப்படிப்பட்ட மக்களுடன் அமர்ந்திருந்தால், நீங்கள் வளம் பெறுவதை உணரலாம்.

    -ஓஷோ
    Next Story
    ×