search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.70 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.70 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை

    • தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் கட்டண சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
    • ரூ.149 கோடியே 86 இலட்சம் மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் கோவிந்தராவ் கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் கிருஷ்ணகிரி நகராட்சி குப்பைமேட்டு தெருவில் உள்ள நகர்புற நல வாழ்வு மையம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், ஜெகதேவியில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம், பர்கூர் அரசு மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு உடன் சென்றார்.

    ஜெகதேவி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாமை பார்வையிட்டு, காப்பீடு அட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை குறித்து நேரடியாக ஆய்வு செய்து, 10 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் காப்பீடு அட்டைகளை வழங்கினார்.

    தொடர்ந்து, பர்கூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    இது குறித்து இயக்குனர் கோவிந்தராவ் கூறியதாவது:-

    சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் வகையிலும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவை குறைப்பதற்கும், முதல்- அமைச்சரால் 18.12.2021 அன்று தொடங்கப்பட்ட திட்டம் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும்-48 திட்டம்.

    இத்திட்டத்தின் மூலம் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.

    இத்திட்டத்தில் 237 அரசு மருத்துவமனைகள், 451 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 688 மருத்துவமனைகள் மருத்துவ சிகிச்சைகள் வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்கள், வேற்று நாட்டவர்கள் என அனைவருக்கும் தமிழ்நாடு எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் கட்டண சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30.06.2023 வரை அரசு மருத்துவமனைகளில் 1,52,833 நபர்களும் தனியார் மருத்துவமனையில் 15,314 நபர்கள் என மொத்தம் 1,70,231 நபர்களுக்கு ரூ.149 கோடியே 86 இலட்சம் மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அலுவலர் சையத் அலி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் சந்திரசேகர், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சாத்வீகா, மருத்துவர் மீனாட்சி, தாசில்தார் சம்பத், ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் சரவணன் மற்றும் சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×