search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு தலையீடு இல்லாமல் காவிரி ஆணையம் செயல்பட வேண்டும்- கி.வீரமணி
    X

    மத்திய அரசு தலையீடு இல்லாமல் காவிரி ஆணையம் செயல்பட வேண்டும்- கி.வீரமணி

    மத்திய அரசு தலையீடு இல்லாமல் காவிரி ஆணையம் செயல்பட வேண்டும் எனவும் இதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கி.வீரமணி கூறியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விடுதலை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முயற்சி செய்து தனியார் பள்ளிகளில் பயிற்சி முகாம்களை நடத்துகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மதசார்பின்மை கட்சிகள் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலையை கர்நாடக தேர்தல் உண்டாக்கி விட்டது. இந்த நல்ல ஒற்றுமையை பிரதமர் மோடி தன்னுடைய அதீத நடவடிக்கையின் மூலமாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஒதுங்கியிருந்த கேரளா, ஆந்திரா, புதுச்சேரி முதல் மந்திரிகள், கர்நாடக எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று கூறி உள்ளனர்.

    மதர்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜனதாவை எதிர்க்க கூடிய கூட்டணி வர வேண்டும். இதன் மூலம் தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும், சமூக நீதியையும் காப்பாற்ற முடியும். நீட் தேர்வு நிலை பெற்று விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து நாங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

    காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட மத்திய அரசு திட்டத்தை ஏற்கிறோம் என்று சொல்லியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஆணையமா? அல்லது வாரியமா? என்பது முக்கியமல்ல. நடுவர் மன்ற தீர்ப்பு படி நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும். மத்திய அரசு தலையீடு இல்லாமல் ஆணையம் செயல்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×