search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரியில் நீர்மட்டம் குறைந்தது: செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் நிறுத்தம்
    X

    பூண்டி ஏரியில் நீர்மட்டம் குறைந்தது: செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் நிறுத்தம்

    பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். 

    புழல் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வட சென்னையிலும், செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு ஒப்பந்தப்படி கடந்த டிசம்பர் 27-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மார்ச் 26-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட நாட்களில் 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு தண்ணீர் வரத்து காரணமாக பிப்ரவரி 27-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    புழல் ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் 20-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.  இதையடுத்து கடந்த 21-ந் தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக 550 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது. 

    பூண்டி ஏரியின் நீர் மட்டம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கோடை வெயில் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக குறைந்தது. நேற்று தண்ணீர் மட்டம் 19.30 அடிக்கு குறைந்து விட்டது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம் பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 

    பூண்டி ஏரியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி  வெறும் 191 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 19 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
    Next Story
    ×