search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரையர் சிலைக்கு திவாகரன் மாலை அணிவித்த காட்சி.
    X
    முத்தரையர் சிலைக்கு திவாகரன் மாலை அணிவித்த காட்சி.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- திவாகரன்

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லை எனவும் அவர்களை அரசு பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் திவாகரன் வலியுறுத்தியுள்ளார். #SterliteProtest #Thoothukudi #Dhivakaran
    திருச்சி:

    பெரும்பிடுகு முத்தரையரின் 1343-வது சதய விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு அம்மா அணி சார்பில் திவாகரன் மாலை அணிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343-வது சதய விழாவை முன்னிட்டு அவரை போற்றும் வகையில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம். முத்தரையரின் சாதனைகள் போற்றப்பட வேண்டியதாகும்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மாவட்டந்தோறும் முத்தரையரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அம்மா அணி சார்பில் நாங்கள் மரியாதை செய்கிறோம்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எப்போதோ மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இதுவரை 11 பேர் வரை பலியானதாக கூறுகிறார்கள். இந்த சம்பவம் தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நஷ்ட ஈடு தொகையை அதிகப்படுத்த வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.


    மேலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லை. அவர்களை தமிழக அரசு பதவி நீக்கம் செய்யவேண்டும். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறப்படுவதால் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள நீதி விசாரணை சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டதற்கு, அவர் எப்போதுமே அப்படித்தான் கருத்து தெரிவிப்பார் என்றார். #SterliteProtest #Thoothukudi  #Dhivakaran

    Next Story
    ×