search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னிப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
    X

    கன்னிப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட பாசனத்திற்கு நீர் ஆதாரமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு-1, சிற்றாறு-2, மாம்பழத்துறையாறு, பொய்கை அணை ஆகிய உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அணைகள் பிப்ரவரி மாதம் இறுதியில் மூடப்படும். அதன் பிறகு விவசாய பணிகளுக்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம். பேச்சிப்பாறை அணையில் இருந்துதான் முதலில் விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்துவிடப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு பேச்சிப்பாறை அணையில் ரூ.60 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அதை வெளியேற்றி விட்டு சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணையில் 6.70 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணையை பாசனத்திற்காக திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கன்னிப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

    இதைதொடர்ந்து பெருஞ்சாணி அணை தண்ணீரை குமரி மாவட்ட பாசனத்திற்காக திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி இன்று பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. ஆகியோர் பெருஞ்சாணி அணையை திறந்து வைத்தனர். விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து பாய்ந்து செல்கிறது.

    இந்த தண்ணீர் மூலம் கோதையாறு, பட்டணங்கால் அமைப்பில் உள்ள தோவாளை கால்வாய், அனந்தனாறு கால்வாய், நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய், பத்மநாபபுரம் கால்வாய், பட்டனங்கால் கால்வாய் ஆகியவற்றை சார்ந்துள்ள 79 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    பெருஞ்சாணி அணை திறப்பு தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறும் போது விவசாயிகள் பெருஞ்சாணி அணை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெரும்படி கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு இரு பருவத்திலும் குமரி மாவட்டத்தில் போதுமான அளவு மழை பெய்யாததால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பெருஞ்சாணி அணையும் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடியும் தொடங்கிவிட்டது.

    இதற்கிடையே, நேற்று அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 19.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
    Next Story
    ×