search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேர்க்காடு அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி சிறுமி உள்பட 4 பேர் பலி
    X

    சேர்க்காடு அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி சிறுமி உள்பட 4 பேர் பலி

    சேர்க்காடு அருகே நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிப்காட்:

    சேர்க்காடு அருகே நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    வேலூர் மாவட்டம் பொன்னையை அடுத்த சி.என்.பட்டடையை சேர்ந்தவர் குமார் (வயது 55), மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி ஈடுத்துராணி (50), மகன் கார்த்தி (30). இவர்கள் அனைவரும் தற்போது ஆம்பூர் அருகே மாதனூரில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சேர்க்காட்டில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் உள்ள சியோன்மலையில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குமார், ஈடுத்துராணி, கார்த்தி மற்றும் 3 பெண்கள், 4 குழந்தைகள் ஆகியோர் ஆம்பூரில் இருந்து ஒரு காரில் நேற்று வந்தனர். காரை குமார் ஓட்டி வந்தார்.

    அந்த கார், சேர்க்காட்டில் இருந்து சியோன்மலைக்கு பகல் 1.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது திடீரென மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் குமார், ஈடுத்துராணி, கார்த்தி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆம்பூர் சாணாங்குப்பத்தை சேர்ந்த மெகர்சிலின் என்பவரின் மனைவி தமிழ்செல்வி (30), கார்த்தியின் மனைவி மெர்சி (28), ராஜேஷ்குமார் என்பவரின் மனைவி சங்கரி (28), மகன் சந்தோஷ்குமார் (7), மகள் மதுமிதா (5), கார்த்தியின் மகள் மெர்லின் (3), மகன் டேவிட்சன் (2) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் மேல்பாடி போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுமிதா பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×