search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகள் வந்த வாகனத்தை சிறை பிடித்த பொதுமக்கள்
    X

    மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகள் வந்த வாகனத்தை சிறை பிடித்த பொதுமக்கள்

    விருத்தாசலம் அருகே மணல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது மணவாளநல்லூர். இந்த கிராமத்தில் மணி முக்தாறு செல்கிறது. இங்கு கடந்தசில மாதங்களுக்கு முன்புஅரசு சார்பில் மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர்.

    இதை அறிந்த பொதுமக்கள் இங்கு மணல் குவாரி ஏதும் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனால் அங்கு மணல் குவாரி அமைப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அங்கு மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர். அதற்காக இன்று காலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்திராதேவி, சீனிவாசன் ஆகியோர் வாகனங்களில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் மணிமுக்தாறு ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி அமைக்க உள்ள இடத்தை அளவீடு செய்தனர்.

    மணிமுக்தாற்றில் அதிகாரிகள் வந்து மணல் குவாரிகள் அமைக்க இடத்தை பார்வையிடவந்த தகவல் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்தது. உடனே வாலிபர்கள், மற்றும் பெண்கள் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணிமுக்தாறு செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது அவர்கள் தரையில் வாழை இலை விரித்து அதில் மணல் போட்டு உண்ணும் போராட்டம் நடத்தினர். அப்போது ஆற்றில் அளவீடு பணியை முடித்துக்கொண்டு அதிகாரிகள் வாகனங்களில் வந்தனர். இதை அறிந்ததும் அவர்கள் உடனே எழுந்துஅதிகாரிகள் வந்த 3 வாகனங்களையும் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது அதிகாரிகளிடம் கிராம மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் எக்காரணம் கொண்டும் மணல் குவாரி அமைக்கக்கூடாது. ஏற்கனவே பள்ளம் தோண்டப்பட்டு வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. எனவே இங்கு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்றனர்.

    உடனே அதிகாரிகள், அரசு வீடு கட்டும் பணி மற்றும் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்காகதான் மணல் குவாரி அமைக்கப்படுகிறது என்றனர். ஆனால், பொதுமக்கள் இந்த கருத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகளின் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×