search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
    X

    எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

    எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் உள்பட காவிரி பாய்ந்தோடும் பல்வேறு பகுதியில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    பெண்கள் விரதம் இருந்து ஆற்றை வழிபட்டு, வாழை மட்டையில் விளக்கேற்றி நீரில் விட்டனர். புதுமணப் பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றி புதுத் தாலி கயிற்றை அணிந்தனர். அத்துடன் தங்களது திருமண பூமாலையை ஆற்றில் விட்டு காவிரி தாயை வணங்கினார்கள்.

    எடப்பாடி அருகே உள்ள வெள்ளரி வெள்ளி வேட்டுவப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் (வயது 43) இன்று அதிகாலையில் காவிரி ஆற்றில் புனித நீராட தனது நண்பர்களுடன் கோணேரிப்பட்டி அருகே உள்ள கோட்டமேடு படித் துறைக்கு வந்தார்.

    அப்போது சக்திவேல் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். ஆற்று நீரின் இழுப்பு வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் உடனடியாக திரும்பி கரைக்கு வர முடியவில்லை. நீரில் தத்தளித்தார். சிறிது நேரத்திலேயே தண்ணீரில் மூழ்கி சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    நண்பர்களின் கண் முன்பே இந்த சம்பவம் நேர்ந்தது. அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பலியான சக்திவேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு ஒரு தம்பி உள்ளார். அவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆடிப்பெருக்கை முன்னிட்டு புனித நீராட வந்தவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×