search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே மணல் அள்ளிய மாட்டுவண்டி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
    X

    விருத்தாசலம் அருகே மணல் அள்ளிய மாட்டுவண்டி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

    குவாரியில் மணல் அள்ளியதற்கு ஏ.டி.எம். கார்டு மூலம்தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் மணிமுக்தாறு செல்கிறது. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அரசு சார்பில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த மணல் குவாரிகளில் பணம் கட்டி மாட்டு வண்டிகளில் மணலை ஏற்றி சென்று வந்தனர்.

    இன்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி செல்ல மணல் குவாரிக்கு சென்றனர். பின்னர் குவாரியில் மணல் அள்ளி முடித்ததும் குவாரி ஊழியர்களிடம் பணம் கட்ட சென்றனர்.

    அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.100 வீதம் கொடுத்தனர். அதை அங்கிருந்த ஊழியர்கள் ஏற்க மறுத்து ஏ.டி.எம். கார்டு மூலம்தான் பணம் கட்ட வேண்டும் என்றனர்.

    இதைகேட்டதும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை மணல் குவாரி அருகே வரிசையாக நிறுத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாட்டு வண்டிகள் அணிவகுத்து நின்றன.

    பின்னர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைவரும் விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் போராட்டம் நடத்தியதால் அங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×