search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே நிதி நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சம் பறிப்பு - 2 பேர் கைது
    X

    மதுரை அருகே நிதி நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சம் பறிப்பு - 2 பேர் கைது

    மதுரை அருகே நிதி நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சத்தை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அசோக்குமார் (வயது24). இவர் மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    அசோக்குமார் நேற்று மோட்டார் சைக்கிளில் பட்டணம், ஜோதியபட்டி, பஞ்சாங்கிபட்டி, கட்ட முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசூல் செய்துவிட்டு ஒத்தக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அவர் கண்டமுத்துபட்டி- சின்னமங்கலம் சந்திப்பு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

    அப்போது அந்த நபர்கள் அவசரமாக பேச வேண்டும் உன் செல்போனை கொடு என்று மிரட்டினர். ஆனால் அசோக்குமார் செல்போனை கொடுக்க மறுத்தார்.

    அப்போது 2 பேரும் அசோக்குமாரை தாக்கி பணப்பை மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். அந்த பையில் வசூல் பணம் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 100 இருந்தது.

    பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றதால் அசோக்குமார் பரிதவித்தார். பின்னர் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த பிரவீன் (20), முருகானந்தம் (19) ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவர்களுக்கு வேறு எந்த கொள்ளை சம்பவங்களிலும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×