search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெகமத்தில் கொப்பரை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி
    X

    நெகமத்தில் கொப்பரை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி

    நெகமம் பகுதியில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
    நெகமம்:

    பொள்ளாச்சியை அடுத்த நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் பி.ஏ.பி. பாசனம் இருப்பதால், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அதிகளவில் தென்னை பயிரிட்டு வளர்த்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை பெய்யாததால் தென்னை மரங்களில் போதிய அளவு தேங்காய் விளைச்சல் இல்லை. இதனால் தேங்காய் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் உற்பத்தியும் வெகுவாக குறைந்தது.

    இது குறித்து சிறுக்களந்தை பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

    தேங்காய் பறித்து விற்பனை செய்வதைவிட கொப்பரை தேங்காயாக மாற்றி விற்பனை செய்வதில் தான் அதிக லாபம் இருக்கிறது. தேங்காயை அப்படியே தான் வியாபாரிக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் கொப்பரை தேங்காய் தயாரித்தால் கொப்பரை தனியாகவும், தொட்டியை (சிரட்டை) தனியாகவும் விற்பனை செய்யலாம்.

    கடந்த வாரம் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ. 115-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ. 95-க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் தென்னை மரங்கள் காய்ந்து, தேங்காய் உற்பத்தி குறைந்துது. போதிய அளவு தண்ணீர் விட முடியாததால், தேங்காய் போதிய வளர்ச்சியும் குறைவாக உள்ளது.

    இதனால் 100 கொப்பரை தேங்காய் 13 கிலோ தான் இருக்கிறது. ஆனால் நல்ல மழை பெய்து விளைச்சல் அதிகமாக இருக்கும் போது 100 கொப்பரை தேங்காய் 16 கிலோ வரை இருக்கும்.

    மேலும் கொப்பரை தேங்காய் தயாரித்து விற்கும் போது அதிகப்படியான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. கொப்பரை தேங்காய் களத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களில் முன் பணம் வாங்கியவர்களுக்கு ரூ. 230 முதல் ரூ. 250 வரையும், முன் பணம் வாங்காத வர்களுக்கு தென்னை மரம் ஏறி 1000 தேங்காய்களை பறிப்பதற்கு ரூ. 850 முதல் ரூ. 1000-ம் வரையும், தேங்காயை உரிப்பதற்கு ரூ. 500-ம், தொட்டி மற்றும் கொப்பரையை தனியாக பிரிப்பதற்கு ரூ. 250-ம் கூலி வழங்கப்படுகிறது. தேங்காய் விளைச்சல் போதிய அளவில் இல்லாத நிலையில், கொப்பரை உற்பத்தி இருக்கிறது. ஆனாலும் கூடுதல் விலை கிடைக்கவில்லை.

    இதனால் கொப்பரை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×