search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமனூர் பஸ் மேற்கூரை இடிந்து விபத்து- வலது காலை இழந்த கல்லூரி மாணவிக்கு ரூ. 6 லட்சம் நிதி
    X

    சோமனூர் பஸ் மேற்கூரை இடிந்து விபத்து- வலது காலை இழந்த கல்லூரி மாணவிக்கு ரூ. 6 லட்சம் நிதி

    கோவை அருகே உள்ள சோமனூர் பஸ் மேற்கூறை இடிந்து விழுந்த விபத்தில் வலது காலை இழந்த கல்லூரி மாணவிக்கு ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
    கோவை:

    கோவை அருகே உள்ள சோமனூரில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி பஸ் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.விபத்தில் பலியானவர்களுக்கு அரசு சார்பில் ரூ. 4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

    பஸ் கூரை இடிந்து விழுந்த விபத்தில் திருப்பூர் மாவட்டம் தேவராயம் பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி லதா (21) என்பவரும் சிக்கி படுகாயம் அடைந்தார்.கோவையில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வந்த லதா கல்லூரி சென்று விட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கி கொண்டார். பஸ் கூரை இடிந்து விழுந்த விபத்தில் லதாவின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது கால் துண்டிக்கப்பட்டது. லதாவிற்கு ரூ. 11 லட்சம் வரை மருத்துவ செலவானதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக லதாவின் தாய் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பல முறை மனு அளித்தார். அவரது மனுவை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து லதாவின் மருத்துவ செலவுக்காக சமூக நலத்துறை சார்பில் ரூ. 6 லட்சம் நிவாரண நிதி வழங்க முடிவு செய்து உள்ளது.

    இது தொடர்பாக அவரது பெற்றோரை வரவழைத்து லதாவின் மருத்துவ செலவிற்கான ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்து உள்ளனர். விரைவில் ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என தெரிகிறது. #tamilnews
    Next Story
    ×