search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 மாத கர்ப்பிணி பலி
    X

    சேலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 மாத கர்ப்பிணி பலி

    சேலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 மாத கர்ப்பிணி பலியானார். பலியான கர்ப்பிணிக்கு டெங்கு காய்ச்சலா? அல்லது பன்றிக்காய்ச்சலா? என்பதை உறுதி செய்ய டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.
    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள தடிக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், தனியார் நிறுவன ஊழியர்.

    இவரது மனைவி சுகன்யா (வயது 20). கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது சுகன்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சுகன்யா சிகிச்சை பெற்று வந்தார்.

    தொடர்ந்து காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மகுடஞ்சாவடியில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல்நிலை மோசம் அடைந்ததால் நேற்று இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறினர்.

    உடனே சுகன்யாவை அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சுகன்யா பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்வதுடன் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    பலியான சுகன்யாவுக்கு டெங்கு காய்ச்சலா? அல்லது பன்றிக்காய்ச்சலா? என்பதை உறுதி செய்ய டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.

    ஏற்கனவே கடந்த 5 நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ஒருவர் மர்ம காய்ச்சல் பாதிப்பால் உயிர் இழந்தார். இதனால் காய்ச்சல் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர், ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இதில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள 100-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் காய்ச்சல் பாதித்தவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×