search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டியில், தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. #gajacyclone #relief #dmk
    திருத்துறைப்பூண்டி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். ஆடலரசன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் பாண்டியன், கோட்டூர் ஒன்றிய செயலாளர்கள் பாலஞானவேல், தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஓட்டு வீடு, கூரை வீடு, மாடி வீடு என பாரபட்சம் இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர்கள் கார்த்தி, ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமாரை, அவரது அலுவலகத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  #gajacyclone #relief #dmk
    Next Story
    ×