search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர், சாலைபணி தொய்வின்றி செயல்படுத்த வேண்டும்- அமைச்சர் வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவு
    X

    குடிநீர், சாலைபணி தொய்வின்றி செயல்படுத்த வேண்டும்- அமைச்சர் வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவு

    கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் குடிநீர், சாலை பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    கோவை:

    கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சாலைப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    கோவை மாநகராட்சி, தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாகும். முதல்- அமைச்சர் தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேற்றிட மாநகராட்சி அலுவலர்கள் சிரத்தையுடன் பணியாற்றிட வேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில், தெருவிளக்கு வசதிகள், குடிநீர் தேவைகள், கழிவுநீர் வடிகால்வசதி, சாலைவசதி, கழிப்பறை வசதிகள் என அடிப்படை கட்டமைப்புகளில் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்கிறது.

    எனவே கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுகின்றதா என்று மண்டல அளவிலான அலுவலர்கள் தினந்தோறும் களஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து வார்டுகளிலும், தினந்தோறும் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முழுசுகாதார துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு எரியாத தெருவிளக்குகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக சீர் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜய கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், வி.சி.ஆறுக்குட்டி மற்றும் சத்யநாராயணன், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
    Next Story
    ×