search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலத்தில் இன்று லாரி மோதி பெண் பலி
    X

    குத்தாலத்தில் இன்று லாரி மோதி பெண் பலி

    குத்தாலத்தில் இன்று காலை நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
    குத்தாலம்:

    குத்தாலம் தாலுக்கா பாலையூர் போலீஸ் சரகம் கங்காதரபுரம் ஊராட்சி திருமங்கலம் பகுதி காளியம்மன் கோவில் அம்மன் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. விவசாயி. இவரது மனைவி சுஜாதா (வயது 36) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இன்று காலை 6.30 மணிக்கு சுஜாதா பால் வாங்குவதற்காக திருமங்கலம் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த ஒருலாரி அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 

    ஆனால் மயிலாடுதுறையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் சுஜாதா சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் தாசில்தார் சபீதாபீவி, மயிலாடுதுறை டி.எஸ்.பி. அருள்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் நாகலட்சுமி, நடராஜன், ஹேமாவதி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    அப்போது அவர்கள் இப்பகுதியில் வேக தடை அமைக்காததால் விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்து நேரங்களில் மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் வர தாமதமாவதால் பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே உடனடியாக அப்பகுதியில் வேக தடை அமைக்க வேண்டும். இதே பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து தாசில்தார் மற்றும் போலீசார் இப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அருகில் உள்ள நத்தம்பாடி அரசு சுகாதார மையத்தில் ஒரு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் கும்பகோணம்- காரைக்கால் வழிதடத்தில் சுமார் 1 1/2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் பாலையூர் போலீசார் விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×