search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னப்பிள்ளை
    X
    சின்னப்பிள்ளை

    வறுமையில் வாடும் எனக்கு அரசு உதவ வேண்டும் - பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வேண்டுகோள்

    வறுமையில் வாடும் எனக்கு அரசு உதவ வேண்டும் என்று பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். #ChinnaPillai

    மதுரை:

    இந்திய அளவில் பெண்களின் சுய தொழில் முன்னேற்றம் மற்றும் மகளிர் வாழ்வியல், சமூக வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் மதுரையை சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை (வயது 67). இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    விருது கிடைத்தது குறித்து சின்னப்பிள்ளையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    எனக்கு விருதுகள் என்பது புதிது அல்ல. தமிழக அரசிடம் கடந்த ஆண்டு அவ்வையார் விருது வாங்கினேன். இப்போது பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இருந்த போதிலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று எனக்கு விருது கொடுத்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.

    மதுரை மாவட்டத்தில் கிராமப்புற பெண்கள் சுய தொழில் மற்றும் குடும்ப நிதி தேவையை சீரும் சிறப்புமாக ஈடுகட்டும் வகையில் நாங்கள் கடந்த 1990-ம் ஆண்டு களஞ்சியம் மகளிர் சுய உதவி குழு அமைப்பை தொடங்கினோம்.

    இதன் காரணமாக எண்ணற்ற பெண்கள் கந்துவட்டி தொல்லையில் இருந்து மீட்கப்பட்டனர். கடந்த 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பெண்களுக்கு சுய சார்பு மற்றும் சுதந்திரம் கிடைத்துள்ளது.

    இருந்த போதிலும் பெண்கள் இன்னும் கந்து வட்டி கடனில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு வங்கிகள் மட்டுமின்றி சிறு, குறு தொழில் நிதி நிறுவனங்களும் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க முன்வர வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பெண்களை அதிகம் பாதிப்பு அடைய செய்வது கணவர்களின் மதுப்பழக்கம், மற்றும் சிறு வயது திருமணம் ஆகியவைதான். கணவரின் குடிப்பழக்கம் காரணமாக பெண்கள் இன்றைக்கு குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கமே மதுபான கடைகளை நடத்துவது வேதனை தருகிறது. எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் மதுபான கடைகளை மூட வேண்டும்.

    எனக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு அவ்வையார் விருது கொடுத்து கவுர வித்தது. அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தயாராக இருந்தேன். ஆனாலும் அதிகாரிகள் என்னை முதல்வரின் பக்கத்தில் செல்லக்கூட அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

    வறுமையில் வாடும் எனக்கு தமிழக அரசு ரூ. 1000 விதவை உதவித் தொகையை மட்டுமே வழங்குகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட எனக்கு மருந்து மாத்திரைகள் வாங்கவே இந்த பணம் செலவாகி விடுகிறது. எனவே எனக்கு அரசு ஏதாவது உதவி செய்தால் கஷ்டம் இல்லாமல் வாழ்வேன். மேலும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் சிறு வயது திருமணம் தொடர்பாக களஞ்சியம் அமைப்புக்கு தகவல் வந்தால் சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து பேசி அறிவுரை கூறி வருகிறோம். எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. இது நான் சமூக சேவையில் மேலும் சிறப்பாக செயல்பட தூண்டுகோலாக இருக்கும்.

    இவ்வாறு சின்னப்பிள்ளை கூறினார். #ChinnaPillai

    Next Story
    ×