search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்- முக ஸ்டாலின் பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்- முக ஸ்டாலின் பேச்சு

    தமிழகத்தில் 21 சட்டசபைகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன், தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று கிராம சபை கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசினார். #mkstalin #parliamentelection #bjp #admk #pmmodi

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் யூனியன் தனக்கன்குளம் அருகில் உள்ள திருவள்ளுவர் நகரில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் இன்று நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த கிராமசபை கூட்டத்தில் அதிக அளவில் பெண்கள் வந்திருக்கிறீர்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் போன்ற பரவசத்தில் நான் வந்துள்ளேன்.

    கிராமங்களில் இருந்து தான் அரசியல் பிறந்துள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 617 கிராம ஊராட்சிகள் உள்ளன. தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தார்கள். அதனால் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அவசியம் இல்லாமல் இருந்தது.

    தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் நாங்கள் கூட்டம் போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் குடிநீர், சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.


    பிரதமர் மோடி பொய் கூறி ஆட்சிக்கு வந்தார். அதே போல தமிழக முதல்வர் எடப்பாடியும், சசிகலாவை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார். இருவரும் பொதுமக்களை ஏமாற்றுவதில் கில்லாடிகள்.

    மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நல்லது செய்வது போல் பிரதமர் மோடி மீண்டும் ஏமாற்றத் தொடங்கியுள்ளார்.

    தி.மு.க. ஆட்சியின் போது விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கொல்கொத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது தவறு என்று கூறினார்.

    ஆனால் அவர் பெரிய பணக்காரர்களின் பல்லாயிரக்கணக்கான கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

    பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறும் அவர், கடந்த 6 மாதத்தில் 20 சதவீதம் உரவிலை உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்த தவறி விட்டார்.

    ஜி.எஸ்.டி. மூலம் விவசாயிகளிடம் இருந்து மறைமுகமாக வரிகளை வசூலிக்கின்றனர். இந்த சலுகைகள் எல்லாம் திருட்டுத்தனம் ஆகும்.

    மேற்கு வங்காளத்தில் இரும்பு பெண்மணியாக மம்தா பானர்ஜி உள்ளார். அங்கு பா.ஜ.க.வால் அரசியல் செய்ய முடிய வில்லை. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் மோடி பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

    தமிழகத்தில் ஊழல், லஞ்சம் பெருகி உள்ளது. மத்திய மாநில அரசுகளை அகற்ற மக்கள் இங்கு கூடி வந்திருக்கிறார்கள்.

    நீங்கள் (பொதுமக்கள்) கொடுத்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். இல்லையெனில் விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜெயலலிதா புகழ் பாடுகிறவர்கள் அவரது பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் இதுவரை எந்த நிகழ்ச்சிளையும் நடத்த வில்லை.

    தமிழகத்தில் 21 சட்டசபைகளுக்கும், பாராளுமன்ற தேர்தலுடன், தேர்தல் வர வாய்ப்புள்ளது. ஆனால் மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வருவதையே பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மு.க.ஸ்டாலினிடம் தனக்கன்குளம் கிராம மக்கள் குடிநீர், சாலை, தெருவிளக்கு மற்றும் 100 நாள் வேலை கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். #mkstalin #parliamentelection #bjp #admk #pmmodi

    Next Story
    ×