search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோதிடம் பார்ப்பதாக கூறி தம்பதியிடம் 5 பவுன் நகை கொள்ளை
    X

    ஜோதிடம் பார்ப்பதாக கூறி தம்பதியிடம் 5 பவுன் நகை கொள்ளை

    துறையூரில் ஜோதிடம் பார்ப்பதாக கூறி நூதன முறையில் தம்பதியிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற ஜோதிடர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    துறையூர்:

    துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகன்யா. நேற்று வீட்டின் அருகே கணவன்,  மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 ஜோதிடர்கள்  வந்தனர். அவர்கள் தம்பதியிடம் சில ஜோதிட குறிகளை கூறினர். இதில் நம்பிக்கையடைந்த தம்பதி வீட்டிற்குள் அழைத்து கைரேகை ஜோதிடம் பார்த்தனர். பின்னர் பரிகாரம் செய்ய வேண்டும் வீட்டில் உள்ள செம்பில் தண்ணீர், புளி  எடுத்து வரும் படியும்  தாலி செயினை  புளியில் வைத்து உருட்டி செம்பில்  வைக்கும் படியும் கூறியுள்ளனர்.   

    இதை நம்பிய தம்பதியும் அவர்கள் சொன்னபடி செய்தனர். பின்னர் ஊரின் எல்லையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில்  வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் உடன் வாருங்கள் என கூறி அழைத்து சென்றனர். அங்கு சில பரிகாரங்களை செய்து  முடித்தவுடன் புளி உருண்டையை கையில் கொடுத்து திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு செல்லுங்கள், பின்னால் நாங்கள் வருகிறோம்  என தம்பதியிடம்கூறி விட்டு சென்றனர். வீட்டிற்கு சென்று புளியை பிரித்து பார்த்த போது அதில் தாலிச் செயின் இல்லை. இதனால் சாமிநாதன் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    5 பவுன் எடையுள்ள தாலி செயினை நூதன முறையில் திருடப்பட்டது  குறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார்  அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குபதிவு செய்து 2 ஜோதிடர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×