search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்காநல்லூரில் தூக்கில் தொங்கிய இளம்பெண்- கொலையா? போலீசார் விசாரணை
    X

    சிங்காநல்லூரில் தூக்கில் தொங்கிய இளம்பெண்- கொலையா? போலீசார் விசாரணை

    சிங்காநல்லூரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் பிணமாக தொங்கினார். கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்காநல்லூர்:

    தூத்துக்குடி எழில்நகரை சேர்ந்தவர் முதலாளிசாமி. இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 23). இவர் கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள தனது அக்காள் கார்த்திகா வீட்டில் தங்கி இருந்து பீளமேடு ஹோப்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சுப்பு லட்சுமியின் அக்காள் கார்த்திகா நேற்று காலை தனது கணவருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவரது வீட்டுக்கதவு திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு கதவை தட்டினர். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது கைகள் முன்பக்கமாக கட்டப்பட்ட நிலையில் சுப்பு லட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது கைகள் முன்பக்கமாக கட்டிய நிலையில் சுப்புலட்சுமி மின்விசிறியில் பிணமாக தொங்கினார். போலீசார் வீட்டை ஆய்வு செய்த போது வீட்டின் பின் பக்ககதவு திறந்து இருந்தது.

    கைகள் கட்டப்பட்டு உள்ளதாலும், வீட்டின் பின் பக்ககதவு திறந்து இருப்பதாலும் சுப்பு லட்சுமியின் சாவு போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பின்னர் போலீசார் சுப்பு லட்சுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×