search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாழை மரத்தில் பூ பூத்துள்ள காட்சி.
    X
    தாழை மரத்தில் பூ பூத்துள்ள காட்சி.

    ராமேசுவரம் பகுதிக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் தாழை மரங்கள்

    ராமேசுவரம் பகுதிக்கு பாதுகாப்பு அரணாக தாழை மரங்கள் விளங்குகின்றன. சுனாமி உள்ளிட்ட பேரலைகளை கட்டுப்படுத்தும். அவற்றை வெட்டி அழிப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
    ராமேசுவரம்:

    தமிழகத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை பகுதி என்றால் அது ராமேசுவரம் பகுதி தான். அது போல் பாம்பனில் இருந்து தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி கடற்கரை வரையிலும் கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும், கடல் அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் தமிழக வனத்துறையின் சார்பில் லட்சக்கணக்கான சவுக்கு மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

    இதை தவிர ராமேசுவரம் தீவு பகுதியை இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றுவதில் சவுக்கு மரங்களுக்கு அடுத்த படியாக தாழம்பூ மரங்களும் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகின்றது என்றால் ஆச்சர்யம் தான்.

    பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இருந்து முகம்மதியார்புரம், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள நம்புநாயகி அம்மன் கோவில் வரையிலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான தாழம்பூ மரங்கள் மிகப்பெரிய அளவில் அடர்த்தியாக வளர்ந்து அழகாக காட்சியளிக்கின்றன.அதிலும் குறிப்பாக குந்துகால் மற்றும் ராமேசுவரம் நம்புநாயகி அம்மன் கோவில் அருகிலும் ஏராளமான தாழம்பூ மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

    தற்போது தாழம்பூ மரங்களில் பூ பூக்கும் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள தாழை மரங்களில் ஏராளமான தாழம்பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

    இது பற்றி தொல்லியல்துறை ஆர்வலர் ராஜகுரு கூறியதாவது:-

    தாழம்பூ மரங்கள் சுனாமி போன்ற பேரலைகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் ராமேசுவரம் தீவு பகுதிக்கு தாழம்பூ மரங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகின்றது.தாழம்பூ மரங்களில் இருவகை உள்ளன.ஒன்று ஆண் மரம், மற்றொன்று பெண் மரம்.பெண் மட்டுமே காய் காய்க்கும். ஆனால் பூ பூக்காது.

    ஆண் மரத்தில் மட்டுமே தான் பூ பூக்கும். திருஉத்திரகோசமங்கை கோவிலில் சாமிக்கு பூஜை செய்ய தாழம்பூ பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தாழம்பூ வாசனைக்கு பாம்பு வரும் என்று சொல்வது உண்மை இல்லை.தாழம்பூ மரம் மிகவும் அடர்த்தியான மரமாக உள்ளதால் குளிர்ச்சிக்காக தாழம்பூ மரத்திற்கு பாம்புகள் வரும் என்பது தான் உண்மை. தாழம்பூவில் உள்ள அதிக நறுமணம் வேறு எந்த ஒரு பூவிலும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.அதுபோல் ஆண்டு தோறும் மார்கழி, தை மாதங்களில் தாழம்பூ மரங்களில் பூ பூக்கும் சீசானகும்.

    தற்போது அந்த சீசனையொட்டி தாழம்பூ மரங்களில் ஏராளமான பூக்கள் பூத்துள்ளன.கடல் அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் தாழை மரங்கள் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் அடர்த்தியாக வளர்ந்து நிற்கிறது. இதை சிலரால் தீ வைத்தும், வெட்டியும் அழிப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகின்றது.

    இருக்கின்ற மரங்களை பாதுகாக்கவும், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தாழம்பூ மரங்களை அதிகளவில் வளர்க்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தாழை மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை பலர் ஆர்வமுடன் வந்து பறித்து செல்வதுடன் சிலர் பூக்களை பறித்து ரூ.50 லிருந்து ரூ.100 வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட போது ராமேசுவரம் தீவு பகுதிகளில் எந்த ஒரு பாதிப்பும் எற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×