search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலம்.
    X
    கல்லணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலம்.

    கல்லணை கொள்ளிடம் பாலம் வழியே பஸ்கள் இயக்க வேண்டும்

    கல்லணை கொள்ளிடம் பாலம் வழியே பஸ்கள் இயக்க வேண்டி பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    பூதலூர்:

    தஞ்சை, திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.90 கோடி மதிப்பில் 1500 மீட்டர் நீளத்தில் பொது போக்குவரத்திற்கான பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

    இந்த பாலத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பாலத்தில் 2 பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்லணை பாலத்தில் கனரக போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், திருச்சி-தஞ்சை செல்வோர் இரண்டு புறங்களிலும் இருந்து இறங்கி நடந்து சென்று மற்ற பகுதிகளுக்கு பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

    இந்த புதிய பாலத்தால் நேரடியாக திருச்சிக்கும், தஞ்சைக்கும் இடையே அரசு போக்குவரத்து வசதி ஏற்படுத்தும்  என்று பொது மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் பாலப் பணி முடிந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தஞ்சை -திருச்சி இடையே அரசு பஸ் போக்குவரத்து துவக்கப்படவில்லை. கொள்ளிடம் பாலத்தில் கார்கள், வேன்கள், இரண்டு சக்கர வாகனங்கள் லாரிகள், அரசு மணல் குவாரி துவங்கப்பட்ட நிலையில் மணல் ஏற்றிய லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று கொண்டுள்ளன.

    தஞ்சை பகுதிகளில் இருந்து திருச்சி செல்ல கரிகாலன் மணிமண்டபம் பகுதியில் இறங்கி 2 கிலோமீட்டர் நடந்து சென்று திருச்சி கிளிக்கூடு பகுதிக்கு சென்று பஸ் ஏறவேண்டி உள்ளது.

    இந்த நிலைமை மாறவே பாலம் கட்டப்பட்டது. கட்டி முடிந்தும் ஏழை மக்கள் பயன்பாட்டுக்குஅரசு பஸ் இயங்காத நிலை உள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவானைக்காவல், வழியாக கல்லணை, கோவிலடி, பூண்டி மாதா பேராலயம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்கு இரு மார்க்கங்களிலும் பஸ்கள் இயக்கி இந்த பகுதி மக்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.

    திருச்சியில் இருந்தும், திருக்காட்டுப்பள்ளியில் இருந்தும் கட்டணமில்லா பஸ்சில் வரும் பெண்கள் பாலங்களின் வழியாக ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. அண்மையில் கல்லக்குடியில் இருந்து புள்ளம்பாடி, பூண்டிமாதா கோவில், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி வழியாக தஞ்சைக்கு பஸ் விடப்பட்டது.

    திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவானைக்காவல், கல்லணை வழியாக திருக்காட்டுப்பள்ளி, திருவையாறுக்கு பஸ்கள் இயக்க தாமதிப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. கடந்த 27-ம் தேதி கல்லணையில் நீர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேருவிடம் கல்லணை புதிய பாலத்தில் அரசு பஸ் போக்குவரத்து துவங்குவது குறித்த கேள்விக்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    எனவே, கொள்ளிடம் பாலத்தின் வழியாக அரசு போக்குவரத்தை துவங்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

    Next Story
    ×