search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜி-பே வசதியுடன் 24 மணி நேரமும் தடையின்றி நடக்கும் மதுபான விற்பனை
    X

    புதுக்கோடாங்கிபட்டியில் நேற்று இரவு மது விற்பனையில் ஈடுபட்ட நபர்.

    ஜி-பே வசதியுடன் 24 மணி நேரமும் தடையின்றி நடக்கும் மதுபான விற்பனை

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மது கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுவிற்பனை ஜோராக நடந்தது.
    • பணம் செலுத்த முடியவில்லை என்றால் ஜி-பே மூலம் பணம் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காமுபிள்ளைசத்திரம், புதுகோடாங்கிபட்டி, கோழிபண்ணை, வீரக்கல், கோடிக்காமன்வாடி உள்ளிட்ட பகுதியில் 5 டாஸ்மாக் மது கடைகள் உள்ளது.

    இக்கடையில் மதுபான பார்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் இங்கு 24 மணி நேரமும், ஒரு பாட்டிலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதல் விலை வைத்து மது விற்பனை இரவு பகலாக படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மது கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப்பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் மது கடை அருகிலே தனிநபர் சிலர் மதுபானங்களை விற்பனை செய்தனர்.

    முதல் நாளே டாஸ்மாக் மது கடையில் விற்பனையாளர்கள் துணையுடன் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு நேற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். மேலும் வழக்கம் போல் ஒவ்வொரு நாளும் மதுக்கடைகள் மூடிய பிறகும் மதுக்கடை திறப்பதற்கு முன்பும் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகிலே கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    பணம் செலுத்த முடியவில்லை என்றால் ஜி-பே மூலம் பணம் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.

    இதுகுறித்து இப்பதி பொதுமக்கள் பலமுறை போலீசாருக்கு புகார் செய்தும் பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு டாஸ்மார்க் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு உத்தரவை மதிக்காமல் இந்தப் பகுதியில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது. குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.

    புதுகோடாங்கிபட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் திறந்த வெளியில் சாலை ஓரம் மது விற்பனை நடைபெற்றது. காமுபிள்ளைசத்திரம் டாஸ்மாக் மதுக்கடைஅருகே செம்பட்டி - நிலக்கோட்டை சாலையில் சாலை ஓரம் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்தனர். விடுமுறை நாட்களில் மது விற்பனை நடைபெற்று வருவதால் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவர்கள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் இந்த வழியில் செல்லும்போது பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    எனவே இதுபோன்ற மதுவிற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×