search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பேட்டி
    X

    3500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பேட்டி

    • பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை. இதுபோன்ற சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறாது.
    • தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

    கடலூர்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை. இதுபோன்ற சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறாது. நமது நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சி பணிதான் முக்கியமென ராமேஸ்வரத்திற்கு வந்து நடைபயணத்தை தொடங்கி பேசியுள்ளார். தமிழையும், திருக்குறளையும் பா.ஜ.க.தான் வளர்ப்பது போல அவர் பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு இந்தி, சமஸ்கிருதம் மொழிகளின் வளர்ச்சிக்கு பணம் ஒதுக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

    நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக மாற்ற பா.ஜ.க. முன்வருமா, தமிழகத்தில் தமிழ் குறித்து பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். என்,எல்.சி.யில் நடைபெற்ற சம்பவம் வருத்தத்திற்குறியது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்.எல்.சி.யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிகலாபம் ஈட்டி வரும் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்திற்கு வேலை வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்கவும் முன்வரவேண்டும். நேற்று நடைபெற்ற போராட்டத்தில், தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டுமென பா.ம.க.வினர் வலியுறுத்தினர். அவ்வாறு என்,எல்.சி. நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறினால் 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்படும். ஆகவே, என்.எல்.சி. பிரச்னையை சரி செய்து, பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்தவர்கள் அனைவரும் கோவில்களில் அர்ச்சகராகலாம் என நீதிமன்றம் கூறியுள்ளதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இதனை பயன்படுத்தி தமிழக கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×