search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி  மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு குழு நியமனம்-கலெக்டர் அம்ரித் தகவல்
    X

    நீலகிரி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு குழு நியமனம்-கலெக்டர் அம்ரித் தகவல்

    • யானை வழித்தடத்தில் சாலை அமைத்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
    • பர்லியார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குன்னூர் வனப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் காப்பி மற்றும் மிளகு பயிரிடுவதற்காக கனரக வாகனத்தை பயன்படுத்த வழங்கப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதியின்றி சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி கடந்த 20-ந் தேதியே ரத்து செய்யப்பட்டு விட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் கனரக வாகனத்தின் உரிமையாளர் ஆகியோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி குன்னூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கடமைகளை செய்ய தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பர்லியார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். சம்பந்தப் பட்ட வருவாய் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் செயலாளர், வனச்சரகத்தின் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. விவசாய பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் விதிமீறல்கள் இருக்கிறதா என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும்.

    மேற்கண்ட குழு உறுப்பினர்கள் தங்களது பணிகளை சரியாக செய்கிறார்களா? என்பதை சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர், ஆர்.டிஓ, தாசில்தார், வனச் சரக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்க. வேண்டும். மேற்கண்ட பணிகளில் ஏதேனும் சுணக்கம் காணப்பட்டு, புகார்கள் ஏதும் பெறப்படுமேயானால், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களின் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×