search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் ஆயுதங்களுடன் பிடிபட்டவர்கள் ஏற்கனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களா? - விசாரணை நடத்த குடியிருப்போர் சங்கம் கோரிக்கை
    X

    கைதான காளியப்பன், சங்கர்கணேஷ், பெருமாள், சஞ்சய்குமார்.

    ஆறுமுகநேரியில் ஆயுதங்களுடன் பிடிபட்டவர்கள் ஏற்கனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களா? - விசாரணை நடத்த குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

    • குடியிருப்பு பகுதியின் தெற்கு சுற்றுச்சுவர் அருகே நேற்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் அங்கு போலீசார் ரோந்து வருவதை கண்டதும் தப்ப முயன்றது.
    • காளியப்பன் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 1 கொலை முயற்சி வழக்கும் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதியில் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், தொழிலதிபர்களும் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த காலங்களில் வீட்டின் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன.

    இந்த நிலையில் இந்த குடியிருப்பு பகுதியின் தெற்கு சுற்றுச்சுவர் அருகே நேற்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் அங்கு போலீசார் ரோந்து வருவதை கண்டதும் தப்ப முயன்றது. அதில் ஒருவர் மட்டும் தப்பிவிட 4 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை விசாரித்த போது அப்பகுதியில் பூட்டி இருந்த ஒரு வீட்டை ஏற்கனவே நோட்டமிட்டு அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்ததாக கூறினர். இது தொடர்பாக கைதான தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த வேல்சாமி மகன் காளியப்பன் (27), ஸ்பிக் நகர் பாலசுப்பிரமணியன் மகன் சங்கர் கணேஷ் (25), ஆறுமுகநேரி கமலாநேரு காலனி கோபால் மகன் சஞ்சய்குமார் (21), கீழசண்முகபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் பெருமாள் (23) ஆகியோரிடம் இருந்து அரிவாள், கத்தி, கோடாரி, இரும்பு கம்பி ஆகிய ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய புதுக்கோட்டை சுடலைமுத்து என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த வழக்கில் கைதான கும்பலின் தலைவனாக செயல்பட்ட காளியப்பன் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், தூத்துக்குடி தென்பாககம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 4 வழக்குகளும், சிப்காட் சரகத்தில் 6 வழக்குகளும், பாளையங்கோட்டையில் ஒரு வழக்கும் உள்ளன.

    இதேபோல் சங்கர் கணேஷ் மீது சாயர்புரம், சிப்காட், தூத்துக்குடி வடபாகம், பாளையங்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. சஞ்சய்குமார், பெருமாள் ஆகிய இருவர் மீது ஆறுமுகநேரி, திருச்செந்தூர் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் உள்ளன.

    இவர்கள் அனைவரும் ஜெயிலில் இருந்த போது நண்பர்களாக மாறியது தெரிய வந்துள்ளது. இதனிடையே தங்கள் பகுதியில் ஏற்கனவே நடந்த கொள்ளை சம்பவங்களுக்கும், இப்போது பிடிபட்டுள்ள இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.ஆர்.எஸ் கார்டன் பகுதி மக்கள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×