search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்:  அடிப்படை வசதி இல்லாததால்  இளைஞர்கள் சாலையோரம் தூங்கிய அவலம்
    X

    கோவையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: அடிப்படை வசதி இல்லாததால் இளைஞர்கள் சாலையோரம் தூங்கிய அவலம்

    • தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி, தாதர், நாகர்ஹவேலி, டையு, டாமன், லட்சத்தீவுகள் சேர்ந்தவர்களுக்கு முகாம்.
    • 5 மணிக்கு முகாம் என்பதால் நேற்று இரவு முதல் வரத்தொடங்கி சாலையோரம் ஓய்வெடுத்தனர்.

    இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதையொட்டி ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி (பி.ஆர்.எஸ்.) மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.

    இன்று காலை 5 மணிக்கு தெலுங்கானா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி, தாதர், நாகர்ஹவேலி, டையு, டாமன், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும் முகாம் நடக்கிறது.

    இன்று தொடங்கும் முகாமில் பங்கேற்க தெலுங்கானா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் கோவைக்கு வந்தனர். காலை 5 மணிக்கு முகாம் தொடங்குவதால் அதற்கு முன்னதாக வர வேண்டும். எனவே வெளிமாநில வாலிபர்கள் நேற்றிரவவே கோவைக்கு வந்தனர். மேலும் நள்ளிரவில் வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்குவதற்கு வசதி ஏதும் இல்லாததால் சாலையோரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டது.

    மேலும் அதிகாலையில் வரும் இளைஞர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் படுத்து தூங்கி ஓய்வெடுத்தார். இதனால் அவர்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், நாளை மறுநாள் (6-ந்தேதி) ராஜஸ்தான், மராட்டியம் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடக்கிறது.

    7-ந்தேதி தமிழகத்தில் உள்ள அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ண கிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்ப லூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடைபெறுகிறது.

    8-ந்தேதி சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களுக்கும், 9-ந் தேதி கேரள மாநிலம் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முகாம் நடத்தப்படுகிறது.

    10-ந் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், வயநாடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் முகாம் நடைபெறுகிறது.

    11-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதில் ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

    Next Story
    ×