search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையை ஒய்யாரமாக கடந்த பாகுபலி யானை
    X

    மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையை ஒய்யாரமாக கடந்த பாகுபலி யானை

    • வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
    • வனத்துறையினர் பாகுபலி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை யானை நடமாடி வந்தது.

    இந்த யானை அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வந்தது. ஆனால் இதுவரை மனிதர்கள் எவரையும் அந்த யானை தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை.

    எனினும் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதற்காக 2 கும்கி யானைகள் வரவழைத்து, வனத்துறையினர் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணியை மேற்கொண்டனர். ஆனால் யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் பாகுபலி யானை வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாட தொடங்கியது.

    மேலும் யானையின் வாயில் காயம் இருப்பததால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவிக்கவே, வனத்துறையினர் மருத்துவ குழுவினர் மற்றும் 2 கும்கி யானைகளுடன், பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக யானையை தேடும் பணியை தொடங்கினர்.

    தொடர்ந்து யானையை கண்காணித்த போது, வாயில் ஏற்பட்ட காயம் குணமாகி வந்து தெரிய வரவே சிகிச்சை அளிப்பதற்கான கட்டாயம் ஏற்படவில்லை என மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் அறிக்கை வெளியிட்டனர்.

    மேலும் யானையின் நடமாட்டம் குடியிருப்பை ஓட்டிய பகுதிகளுக்குள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் காணப்படுகிறது.

    நேற்றிரவு பாகுபலி யானை மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வனப்பகுதியில் ஒருபுறம் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல கம்பீரமாக ரோட்டை கடந்து சென்றது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேட்டுப்பா ளையம்-ஊட்டி சாலையில் பாகுபலி யானை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி பாகுபலி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    இதனையடுத்து பாகுபலி யானை சாவகாசமாக சாலையை கடந்து சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்த பாகுபலி யானை இன்று காலை மீண்டும் சமயபுரம் ஊருக்குள் சாவகாசமாக உலா வந்தது.

    இரண்டு மாதங்கள் ஆகியும் தனது வழித்தடத்தை மறக்காமல் மீண்டும் அதே பாதையில் சமயபுரம் வழியாக மேட்டுப்பாளையம் - வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையை கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் வன ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×