search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி. பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்
    X

    பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி. பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்

    • மண் அரிப்பா அல்லது திருட்டு முயற்சியால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு
    • இன்று கான்கிரீட் பணிகள் மேற்கொண்டு நாளை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    பொள்ளாச்சி,

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்துக்கு கடந்த மாதம், 20-ந் தேதி முதல் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியில் பிரதான கால்வாயில் நேற்று காலை திடீரென உடைப்பு தண்ணீர் வெளியேறியது. அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் பாய்ந்து தண்ணீர் வீணானது.

    இதுகுறித்து விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்த திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், பி.ஏ.பி., தலைமை பொறியாளர் சிவலிங்கம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், பகிர்மான குழு மற்றும் பாசன சபை தலைவர்கள் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது உடைப்பு ஏற்பட்ட கரையில் மண் கொட்டப்பட்டு தண்ணீர் வெளியேறாமல் தடுக்கும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    விவசாயிகள் கூறும்போது வறட்சியான கால கட்டத்தில் ஒரு சுற்று தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இடது கரையில் கசிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. தற்போது, அதே இடத்தில் வலது கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி உள்ளது. மண் அரிப்பா அல்லது திருட்டு முயற்சியால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:-

    பிரதான கால்வாய் மொத்தம் 124 கி.மீ., நீளம் உடையது. இப்பகுதியில் கால்வாய் வெட்டப்படாமல், மண் குவித்து உருவாக்க ப்பட்டது. ஆறு மாதம் தண்ணீர் செல்லும். ஆறு மாதம் நீர் செல்லாது.

    இதனால், கால்வாய் கரையில் இயற்கை காரணங்களால் நீர் கசிந்து உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். தற்போது மண் கொட்டப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 2 நாட்களுக்கு நீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று கான்கிரீட் பணிகள் மேற்கொண்டு நாளை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×