search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கார் வெடித்த சம்பவம் எதிரொலி- தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    (கோப்பு படம்)

    கோவையில் கார் வெடித்த சம்பவம் எதிரொலி- தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த டிஜிபி அறிவுரை.

    கோவை உக்கடத்தை அடுத்த கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று கார் வெடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியுள்ளதாவது:

    இந்த சம்பவத்தில் இறந்தவர் பெயர் ஜமேஷா முபின், என்ஜினீயர். அவர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர். இந்த கோவில் அருகே போலீஸ் ேசாதனை சாவடி உள்ளது. காரில் ஜமேஷா முபின் வந்த போது போலீசாரை கண்டதும், காரை விட்டு இறங்கி செல்ல முயன்று உள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் தனிப்படையினர் சோதனை நடத்தினர்.


    அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர், உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இறந்த நபர் மீது வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. அவரது செல்போனை கைப்பற்றி அவருடன் தொடர்பில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் துப்பு துலக்கப்பட்டு உள்ளது.

    ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் 9 பேரிடம் கைமாறி 10-வது நபரிடம் வந்து உள்ளது. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கியாஸ் சிலிண்டர்களை அவருக்கு சப்ளை செய்தது யார் என்பது குறித்தும் தெரிய வந்துள்ளது. கார் வெடித்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள், கோலி குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    ஏற்கனவே ஜமேஷா முபின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை நடத்தி உள்ளனர். மேலும் அவர் உளவுத்துறை கண்காணிப்பிலும் இருந்து வந்து உள்ளார். ஜமேஷா முபின் தற்கொலைப் படையாக செயல்பட வாய்ப்பு குறைவு. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையொட்டி கோவில்கள், பேருந்து, ரெயில் நிலையங்கள், கடைவீதிகள் உள்பட முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று காவல்துறையினருக்கு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

    Next Story
    ×