search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூந்தமல்லி-திருவேற்காடு பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார்-மோட்டார் சைக்கிள்கள்
    X

    பூந்தமல்லி-திருவேற்காடு பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார்-மோட்டார் சைக்கிள்கள்

    • பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .

    பூந்தமல்லி:

    சென்னையை ஒட்டி அமைந்துள்ளது பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள். இங்கு பிரசித்திப் பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் தேவார பாடல் பெற்ற தலமான வேதபுரீஸ்வரர் கோவில்கள் உள்ளன. இதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சென்னை நகருக்கும், புறநகர் பகுதிகளுக்கும் சென்று வருகிறார்கள். இதனால் பூந்தமல்லி, திருவேற்காடு பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த 2 பஸ்நிலையங்களும் தற்போது கட்டணம் இல்லாத இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வருவதிலும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பாரிமுனை, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதிக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பூந்தமல்லி பஸ்நிலையம் எப்போதும் பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும். பஸ்நிலையத்தில் கட்டணம் கொடுத்து வாகனங்கள் நிறுத்த நகராட்சி சார்பில் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தங்களது மோட்டார் சைக்கிள்கள், கார்களை பஸ்நிலையத்திற்கு உள்ளேயே கட்டணமின்றி நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் பஸ்நிலையம் முழுவதுமே வாகனம் நிறுத்தும் இடம் போல் காட்சி அளிக்கிறது. பயணிகள் பஸ்நிலையத்திற்கு சென்று வரவும், பஸ்கள் இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சில ஷேர் ஆட்டோக்கள் பஸ்நிலையத்தின் உள்ளேயே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனை கட்டுப்படுத்தி பஸ்நிலையத்திற்குள் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதே நிலைதான் திருவேற்காடு பஸ்நிலையத்திலும் நீடிக்கிறது. திருவேற்காடு பஸ் நிலையத்தில் இருந்து, பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆவடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 72 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ்நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பஸ்நிலையம் போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் விளங்குகிறது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவேற்காடு பேரூராட்சியாக இருந்த போது, இந்த பஸ் நிலையம் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் திருவேற்காடு நிலையத்தை சென்னை மாநகர போக்கு வரத்துக்கழகம் பராமரித்து வருகிறது. ஆனால் மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருவேற்காடு பஸ்நிலையம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேற்கூரை பகுதிகளில் சிறுமழை பெய்தால் கூட மழைநீர் ஒழுகுகிறது. இங்கு போதிய மின் விளக்குகள் இல்லை.

    பஸ்நிலையத்தை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் மாற்றி விட்டனர். குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லை. இதேபோல் தான் பூந்தமல்லி பஸ்நிலையமும் காட்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×