என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோயம்புத்தூர்
- ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது தெரியவில்லை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை, கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது49). இவருக்கு பிரேமா(47) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ராதாகிருஷ்ணன், கெம்பட்டி காலனி 3-வது தெருவில் நகை பாலிஷ் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபாடு இருந்துள்ளது. தினமும் தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பணத்தை இழந்துள்ளார்.
இழந்தை பணத்தை மீட்க கடன் வாங்கியும் விளையாடியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தையும் அவர் இழந்து விட்டார். கடன் ஏற்பட்டால் ராதாகிருஷ்ணனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர், நகை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் சயனடை குடித்து விட்டார்.
சிறிது நேரத்தில் மயங்கிய அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் அவரது மனைவி, மகள் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாஜ்பாய் பிரதமராக இருந்த 98-ம் ஆண்டும் இவர் நீலகிரி எம்.பியாக இருந்தார்.
- தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மாதன்(வயது93).
இவர் அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக வீட்டில் இருந்தபடி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11.10 மணிக்கு வீட்டில் இருந்த மாஸ்டர் மாதன் காலமானார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இன்று காலை அவரது வீட்டிற்கு வந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் மாதன் உடலுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாஸ்டர் மாதன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 98 மற்றும் 99-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்துள்ளார். இதில் வாஜ்பாய் பிரதமராக இருந்த 98-ம் ஆண்டும் இவர் நீலகிரி எம்.பியாக இருந்தார்.
அதுமட்டுமின்றி தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
மாஸ்டர் மாதனுக்கு சரஸ்வதி அம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.
- சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல்.
யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார்.
இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த, பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்பிடிப்பு பகுதிககள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணை முழு கொள்ளவை எட்டியது.
தற்போது மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரளாவின் அட்டப்பாடி மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் நேற்று இரவு முதலே பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி சுமார் 20000 கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது.
தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக, நேற்று வரை 85 அடியாக இருந்து வந்த பில்லூர் அணை இன்று காலை 93 அடியாக உயர்ந்தது.
தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்ததால் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, பில்லூர் அணையில் இருந்து அணைக்கு வரும் நீர்வரத்தான 20 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதுமாக ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆற்றல் தண்ணீர் அதிக அளவில் வருவதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
- தேர்தலுக்கான கூட்டம் வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும்.
- மேயர் தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் செயல்படுவார்.
தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.
கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.
இதைதொடர்ந்து, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கோவை மேயரை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர் தேர்தலுக்கான கூட்டம் வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் மற்றும் நியமன குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான கூட்டமும் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேயர் தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் செயல்படுவார் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை.
- மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை:
கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். அவனுடன் தொடர்பில் இருந்த 6 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கேரளாவை ஒட்டிய தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுகாதார மற்றும் மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவையில் இருந்து கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல 2 தனியார் கல்லூரிகள் திட்டமிட்டு இருந்தன. இதுகுறித்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்விக்கு தெரியவந்தது.
தொடர்ந்து அவர் நிபா வைரஸ் பரவல் நீடிப்பதால் கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த கல்லூரிகள் கேரளாவுக்கான கல்வி சுற்றுலாவை ரத்து செய்து விட்டன.
கோவையின் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார்.
அந்த அறிவிப்பில், கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் மாணவ-மாணவிகளின் நலன்கருதி கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் மாணவ-மாணவிகளை கேரளாவுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது.
- தூங்கி கொண்டிருந்த மர்மநபரை எழுப்பி விசாரணை.
- போதையில் படுத்து தூங்கிய கொள்ளையன்.
கோவை:
கோவை அருகே உள்ள காட்டூர் ராம்நகர் நேரு தெருவை சேர்ந்தவர் ராஜன்(வயது53). இவர் பாதாம் பிஸ்தா பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி கதிர்நாய க்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். ராஜன் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு, கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்று விட்டார்.
இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர், அவர் சென்ற பின்னர் வீட்டின் அருகே வந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்.
பின்னர் வீட்டில் நகைகள், பணம் உள்ளதா என ஒவ்வொரு அறையாக தேடி பார்த்துள்ளார். அப்போது ஒரு அறையில் பொருட்களை தேடிய போது, எதிர்பாராத விதமாக கால்தவறி கீழே விழுந்து விட்டார்.
ஏற்கனவே கொள்ளையடிக்க வருவதற்கு முன்பு மது குடித்து விட்டு, வந்ததால் போதை தலைக்கேறிய அவர், கீழே விழுந்ததும், நாம் எதற்காக வந்தோம் என்பதை மறந்து அப்படியே அங்கேயே அசந்து தூங்கி விட்டார்.
இதற்கிடையே வெளியில் சென்றிருந்த ராஜன், சில மணி நேரங்களில் வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்த அவர், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக தனது நண்பர் ஒருவருக்கும் தகவல் தெரிவித்து, அவரை துணைக்கு அழைத்துக் கொண்டு பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தது யாராக இருக்கும் என தேடினர்.
அப்போது வீட்டில் உள்ள தரையில் ஒருவர் தூங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ராஜன் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பெருமாள்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த மர்மநபரை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கருமத்தம்பட்டி அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது.
அவர் வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்ததும் கொள்ளையடிக்க முடிவு செய்து, கதவை உடைத்து உள்ளே நுழைந்ததும், வீட்டிற்குள் பொருட்களை தேடி பார்த்த போது, தவறி கீழே விழுந்ததில் அப்படியே தூங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கொள்ளையடிக்க சென்ற வீட்டில் போதையில் படுத்து தூங்கிய கொள்ளையனால் பரபரப்பு ஏற்பட்டது.
- தீவிரமாக கண்காணிக்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு.
- எல்லைகளில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
கோவை:
கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் அங்கு 60 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 2 பேருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழம்-கேரளா எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி கோவை-கேரளா எல்லையில் வாளை யார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சி புரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவு ண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பஸ் மற்றும் வாகனங்களில் வருவோருக்கு நிபா காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதில் அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட வாகனங்கள் கோவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் நிபா வைரஸ் தாக்கம் குறையும்வரை தமிழக மக்கள் கேரளாவுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென கோவை சுகாதார த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
நிபா வைரஸ் காய்ச்சல் என்பது வவ்வால்கள் மூலம் பரவக்கூடியது. அவை உட்கொள்ளும் பழங்கள், சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் ஆகியவை மூலம் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. தீராத காய்ச்சல், இருமல், தலைவலி, வயிற்றுப்போக்கு, மூச்சு திணறல், மனநிலை பிரச்சினை ஆகியவை நிபா வைரசின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறியதாவது:-
கேரளாவில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழு நியமிக்க ப்பட்டு அங்கு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்கள் கிருமிநாசினி மூலம் தூய்மை செய்யப்படுகிறது.
நிபா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரின் உமிழ்நீர், சிறுநீர், சளி மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோர் பற்றிய விவரங்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுதவிர கோவை மாவட்டம் முழுவதும் நிபா வைரஸ் தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தோல்வி என்று சொல்லக்கூடாது.
- எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
கோவை குஜராத் சமாஜத்தில் இன்று தன்னார்வலர்கள் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கு பணியாற்றியபோது பா.ஜ.க. களப்பணியாளர்கள் 28 நாட்கள் மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர்.
மக்கள் அருகில் சென்று அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடிந்தது. இதில் பல சம்பவங்களை அனைவரும் சந்தித்தீர்கள். பலமுறை பலர் போலீஸ் நிலையங்களில் அமர வைக்கப்பட்டனர்.
அதுபோன்ற நேரங்களில் எல்லாம் எனக்கு தகவல்கள் பலரிடம் இருந்து கொந்தளிப்பாக வந்து கொண்டிருந்தன. கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தோல்வி என்று சொல்லக்கூடாது.
நமது வெற்றி சிறிது தள்ளிப்போய் உள்ளது என்று தான் கூற வேண்டும். கோவை தொகுதியில் 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். 100 பூத்களில் 1 அல்லது 2-ம் இடத்துக்கு வந்துள்ளோம்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 68 ஆயிரம் பூத்களில் 8 ஆயிரம் பூத்களில் முதலிடம் பெற்றுள்ளோம். எனவே பா.ஜ.க. வெற்றி சிறிது தள்ளிப்போய் உள்ளது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சைனா வேம்பு என்ற மரம் உள்ளது. இதற்கு 90 நாட்கள் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். பல முறை தண்ணீர் ஊற்றினாலும் செடி வளருவது போல் இருக்காது. ஆனால் 90 நாட்கள் கடந்த பிறகு தான் அதன் வேர் நன்கு ஊன்றிருப்பதை காண முடியும். அதேபோல பா.ஜ.க. களப்பணியாளர்களின் செயல்பாடுகள் ஆழமாக வேரூன்ற தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
கோவை பாராளுமன்ற தேர்தல் நமக்கு ஒரு ஆன்மீக பயணம். கூட்டணி இல்லாமல், பணம் இல்லாமல் பலவகையான சவால்களை சந்தித்து இந்த நிலையை அடைந்துள்ளோம். இது நமக்கு தோல்வி அல்ல.
பா.ஜ.க.வினர் பிரதமர் மோடியை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு மூன்றாவது முறையாக அவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.
பா.ஜ.க.வினர் பணத்துக்காகவோ, பதவிக்காகவோ எதையும் எதிர்நோக்குபவர்கள் அல்ல. நாட்டு முன்னேற்றத்தை மட்டுமே கொண்டு உழைப்பவர்கள். பா.ஜ.க. தலைவர்கள் பலர் சொத்துக்களை இழந்துள்ளனர்.
நாம் சில நேரம் கால்களை பின்னால் வைக்க நேரிடும். சில சமயம் காலை முன்னால் வைக்க வேண்டும். எப்போது முன்னால் வைக்க வேண்டும், எப்போது பின்னால் வைக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும்.
அரசியலில் சகிப்பு தன்மை, பொறுமை, சமரசம் மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, நமது கட்சியில் இருப்பவர்கள் கூட குறைகூறிக் கொண்டு தான் இருப்பார்கள்.
அனைத்தும் சகித்துக் கொள்ளும் தன்மை வேண்டும். எப்போதும் 5-வது கியரிலும் செல்லக்கூடாது. முதல் கியரிலேயே சென்று கொண்டும் இருக்கக் கூடாது.
அரசியலில் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் மனதில் தோன்றியது உண்டு.
எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். தனித்தன்மை இழக்காமல் இருக்க வேணடும் என்றால் கட்சியில் இணையாமல் செயல்பட வேண்டும்.
தனி மனிதனாக சமுதாயத்திற்கு வேலை செய்து கிடைக்கும் மகிழ்ச்சி, எதற்கும் ஈடு ஆகாது.
என் வாழ்க்கையில் கடந்த 3 ஆண்டுகள் மிகவும் கடினமான காலம். 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
- பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.
கோவை:
திருவண்ணாமலையில் இருந்து நேற்று இரவு கோவைக்கு தனியார் ஆம்னி ஒன்று புறப்பட்டு வந்தது.
திடீர் தீ விபத்து படுக்கை வசதி கொண்ட அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
தாஸ் மற்றும் உஸ்மான் என 2 டிரைவர்கள் பஸ்சை ஓட்டி வந்தனர். பஸ் கோவையை நெருங்கியதும் ஒவ்வொரு பயணியாக தாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக் கொண்டு இருந்தனர்.
பீளமேடு பகுதிக்கு வந்தபோது பஸ்சில் 25 பேர் இருந்தனர். அப்போது பஸ்சை ஓட்டிய டிரைவர் தாஸ், பஸ்சில் தீப்பற்றுவது போல் உணர்ந்தார். உடனடியாக அவர் கீழே இறங்கி பார்த்தார். அப்போது டீசல் வரும் பைப்பில் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பஸ்சை ஓரமாக நிறுத்தி, பஸ்சில் இருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றினார். அனைத்து பயணிகளும் பதறி அடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கினர். பயணிகள் இறங்கிய அடுத்த நொடியில் பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. டிரைவர்கள் தீயை அணைக்க போராடினர்.
ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. அதிகாலை நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.
அடுத்தக்கட்டமாக அந்த பஸ்சை அங்கிருந்து அகற்றுவதற்கான பணிகள் தொடங்கி நடந்தன. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்காக அந்த டிரைவருக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர்.
- தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது.
- நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்ட த்தில் பி.ஏ.பி.பாசனத்தி ட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஆழியாறு அணைக்கட்டு 120 அடி உயரம்கொண்டது. இங்கு 3864 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.
ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய-புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை கைகொடுக்காததால் ஆழியாறு அணை நிரம்பவில்லை. ஆனால் இந்தாண்டு நவமலை, வால்பாறை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர்நீர்வரத்து உள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 16-ந்தேதி 91 அடி என்ற அளவில் இருந்த நீர்மட்டம் 18-ந்தேதி 100 அடியை தொட்டது. நேற்று காலை 8 மணிக்கு 109.30 அடியாக இருந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு 110 அடியாக உயர்ந்தது.
ஆழியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2634 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேலும் அணையில் இருந்து 84 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியதை தொடர்ந்து நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில்ஆழியாறு, ஆனைமலை, கோட்டூர், மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடவேண்டுமென ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆழியாறு அணையின் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `ஆழியாறு நீர்மட்டம் 115 அடியை தாண்டியதும் 2-வது கட்ட மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். தொடர்ந்து 118 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து நீர்வரத்தும் அதிகமாக இருந்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும்' என்று தெரிவித்து உள்ளனர்.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்குவதை எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
கோவை:
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில் (வண்டி எண்.16766/16765) சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல். முருகன், மேட்டுபாளையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதேபோல, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே வாரத்தில் 2 நாள் மட்டும் இயக்கக்கூடிய புதிய ரெயிலையும், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தமாக நின்று செல்வதையும், மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டித்தும், தற்போது வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்குவதையும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்