search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பயிர் கடன்கள், வேளாண் இடுபொருட்கள்: கலெக்டர் வழங்கினார்
    X

    விவசாயிகளுக்கு பயிர் கடன்கள், வேளாண் இடுபொருட்கள்: கலெக்டர் வழங்கினார்

    • விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
    • 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துக்கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    விவசாயிகளுக்கான வேளாண் நலத்திட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு, கூட்டுறவு துறை சார்பில், 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.6,18,791 மதிப்பீட்டில் பயிர் கடன்களும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஒரு விவசாய பயனாளிக்கு ஒரு விசைத்தெளிப்பான், ஒரு விவசாய பயனாளிக்கு உயிர் உரங்கள், 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    முன்னதாக பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவையொட்டி, மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×