search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது.
    • பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிவசங்கர் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்பட 33 பேர் நேரில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டில் ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

    பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் பேட்டி அளித்ததாவது:-

    அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் குன்னம் தொகுதியில் சுடுகாடு பகுதியில் அத்துமீறி மணல் அள்ளியதால் அனைத்து கட்சி சார்பிலும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது. தற்போது நிதி நிலைமை அனைவருக்கும் தெரியும். மேலும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிதி நிலைமையிலும் முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வருகிறார்.

    ஆனால் மத்திய அரசு நம்மிடம் இருந்து நிதியை வசூல் செய்து வரும் நிலையில் மீண்டும் நிதியை சரியான முறையில் தருவதில்லை. ஆனால் பல்வேறு வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு நிறைவேற்றி வருகிறார்.

    போக்குவரத்து துறை முதலமைச்சர் வழங்கும் நிதியால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுகிறது. இது மட்டுமின்றி மகளிர் கட்டணம் இல்லா பயணம், மாணவர்களின் கட்டணமில்லா பயணம், டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கு முதலமைச்சர் நிதி வழங்கி வருவதால் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் மாதம் முதல் தேதியில் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எத்தனை மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்குகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சீரழிந்து வந்த துறையை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    மேலும் போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் டீசல் விலை உயர்ந்த நிலையிலும் ஏழை மக்கள் பாதிப்படையாத வகையில் கட்டணம் உயர்த்தவில்லை. பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். பொங்கலுக்கு பிறகு நான் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என அறிவிப்பு தெரிவித்த நிலையில் இந்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

    பொங்கலுக்கு பிறகு நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் நாங்கள் தயாராக உள்ளோம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொங்கலுக்குப் பிறகு முழுமையாக அனைத்து பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்கவில்லை. ஆனால் தற்போது போராட்டம் நடத்தி வரும் அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா? என தெரியவில்லை.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்கப்படாத அகவிலைப்படியை தி.மு.க. ஆட்சியில் சேர்த்து வழங்க வேண்டும் என கூறுவது அரசியல் நோக்கமாகும். பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம். மேலும் தற்போது அறிவித்துள்ள போராட்டத்தில் குறைவான நபர்கள் தான் செல்வார்கள். ஆகையால் எந்த பிரச்சனையும் வராது. போக்குவரத்து தடை ஆகாது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
    • வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ளது எஸ்.ஏரிப்பாளையம் கிராமம். இந்த கிராமம் சிறுவத்தூர் ஊராட்சியிலும், சேமகோட்டை ஊராட்சியிலும் உள்ளது. அதே போல இந்த கிராமம் நெய்வேலிசட்டமன்ற தொகுதியிலும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் ஏரிப்பாளையம் கிராமம் தனித்துவிடப்பட்டுள்ளது என கூறி ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கிராம மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

    இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் சிவமணி தலைமையில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இன்று காலை கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்து பண்ருட்டி-மடப்பட்டு சாலை சேலம் மெயின் ரோட்டில் எஸ்.ஏரிப்பாளையம் கேட் அருகில் சாலையின் இருபுறமும் பந்தல் அமைத்து அதில் அமர்ந்து சிறுவர், சிறுமியர் முதல்பெரியவர் வரை 1000-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி.
    • சிறப்பு பூஜைகள் நடந்தது.

    சிதம்பரம்:

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். சிவபெருமானுக்குரிய ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நாளில் ஆடல் அரசனான நடராஜருக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுவாமி நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இந்த தரிசனத்தின் போது மூலவரே தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

    ஆகையால், நடராஜரின் தரிசனத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வருவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் நடராஜருக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

    விழாவில் 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மூலவராகிய நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் ஊர்வலமாக ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு நேற்று முன்திம் இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    பின்னர், சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 3 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது, பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் தந்தார். இந்த அற்புத காட்சியை கோவிலுக்குள் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சிவ, சிவா, ஓம் நமசிவாயா என்று பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.

    • கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர்.
    • கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்த படி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் 19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை கடலூர் மாவட்டத்தில் தாக்கியதில் சுமார் 610 பேர் பேரலையில் சிக்கி உயிரி ழந்தனர். இதன் நினைவு தினம் இன்று கடை பிடிக்கப் பட்டது. மீனவ கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சுனாமி தினத்தை அனுசரித்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம் பட்டினம் மற்றும் சோனாங் குப்பம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர். பின்னர் கடற்கரை ஓர மாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பலர் தாங்கள் கொண்டு வந்த பால் மற்றும் கூடை நிரம்ப கொண்டு வந்த பூக்களையும் கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்த படி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கொண்டுவந்த மலர் வளையம், மலர்கள் மற்றும் மெழுகுவத்தி ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தி னர். இறந்த குடும்பத்தின ரையும் மற்றும் உறவினர்களை நினைத்துக்கொண்டு பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனை பார்த்த அனைவரும் கண் கலங்கியபடியே சென்றனர். மேலும் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். கடந்த 19 ஆண்டுக்கு முன்பு சுனாமி பேரலை தாக்கிய போது எப்படி இருந்ததோ அதே போல் இன்றும் அழுகை மற்றும் அலறல் குரல் நிலைத்திருந்தது. இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.

    • உற்சவ மூர்த்திகள் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர்.
    • ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தங்கர தத்தில் பிச்சாண்டவர் வெட்டுங்குதிரை வாகன வீதிஉலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழா நடை பெற்றது.

    சித்சபையில் வீற்றுள்ள மூலவரான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்ரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை யொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகா பிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை யும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

    28-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. தேரோட்டத்தை யொட்டி சிதம்பரம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
    • விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று (புதன்கிழமை) மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு (கடந்த சனிப்பெயர்ச்சி 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.) சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்தநிலையில், விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கான குடிநீர், கழிவறை, அன்னதானம், இலவச பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு, தரிசனத்திற்கான ஆன்லைன் மற்றும் கட்டண டிக்கெட், இலவச தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

    குறிப்பாக, நளன் குளம் வாயிலிலிருந்து இலவச தரிசனம் வரிசை தொடங்குகிறது. வி.ஐ.பி. தரிசனம், யானை மண்டபம் வழியாகவும், 1,000 ரூபாய் டிக்கெட் கோவில் ராஜகோபுரம் வழியாகவும், 600 டிக்கெட் தெற்கு வீதி வழியாகவும், 300 டிக்கெட் மேற்கு வீதி மற்றும் நளன் குளம் எதிர் வாயில் வழியாகவும் செல்கிறது. கோவிலைச்சுற்றி ஆன்லைன் மற்றும் கட்டண தரிசனம் டிக்கெட் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டில், புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடும் வருவது போல் ஏற்பாடு செய்யப்படுள்ளது. வழி தவறினாலும், கியூ ஆர் கோடு மூலம் உரிய இடத்திற்கு சென்று சேரலாம்.

    வாகன நிறுத்துமிடத்திலிருந்து பக்தர்களை இலவச பஸ் மூலம் கோவிலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக 26 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. பஸ் நிறுத்தம் இடத்திலும் 120-க்கு மேற்பட்ட நகரும் கழிவறை வசதிகளும், 212-க்கு மேற்பட்ட நிரந்தர கழிவறை வசதிகள் உள்ளது. பக்தர்கள் வரிசையாக செல்லும் இடத்தில் தண்ணீர், பிஸ்கட், அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முக்கியமாக, இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணிவரை என 24 மணிநேரமும் கோவில் நடை மூடாமல் விடிய, விடிய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 162 கண்காணிப்பு கேமராக்கள், மெகா எல்.இ.டி. டிவி வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    புதுச்சேரியிலிருந்து 1500 போலீசாரும், உள்ளூர் போலீசார் சுமார் 300 பேரும், இதுதவிர அப்த மித்ரா, தன்னார்வலர்களும் என சுமார் 2000 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். பக்தர்களின் அவசர மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், விநாயாக மிஷன் மற்றும் மீனாட்சி மிஷன் தனியார் மருத்துவமனை குழு ஏற்பாடு செய்துள்ளோம்.

    அதேபோல், இவர்கள் நளன் குளத்தில் குளிக்க, சிறப்பு ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சனிபெயர்ச்சிக்கு வருகை தந்து, மிக எளிமையாக தரிசனம் செய்து செல்லலாம்.

    • சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் சேதம்.
    • தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் அறிவிப்பு.

    நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கன்வேயர் பெல்ட் இயந்திரம் எரிந்து சேதமடைந்துள்ளது.

    சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் தீப்பற்றியது.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

    தீ விபத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை எனவும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
    • பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது

    சிதம்பரம்:

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். இதனை தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.

    வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடை பெறுகிறது. வருகிற 27-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

    28-ந் தேதி (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் சிவ சங்கர தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

    • 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா.
    • சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையின் சிறப்பு அனுமதி பெற்று அன்னதானம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் அன்னதானம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

    பக்தர்கள் இ-சேவை, இ-நவகிரக சாந்தி, இ-காணிக்கை சேவைகளை www.thirunallarutemple. என்ற ஆன்லைன் மூலம் பெறலாம். ரூ.1000, ரூ.600 ரூ.300 என்ற கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500-ம், சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300-ம், சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300-ம் சிறப்பு ஒரு மண்டல (48நாட்கள்) அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ரூ.2400-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் வண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோவில் ஊழியர், கோவிலை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலுக்குள் இருந்த அறை திறந்து கிடந்தது. அறைக்குள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

    இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோவிலுக்குள் வந்த மர்ம நபர் அங்கிருந்த சமையலறை வழியாக லாக்கர் இருந்த ரூமிற்கு சென்றுள்ளார். பின்னர் லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

    • பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார்.
    • சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி நேற்று மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே அதே ஊரைச் சேர்ந்த வீரன் (30) மோட்டார் சைக்கிளில் வந்தார். சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஏன் நடந்து செல்கிறாய். மோட்டார் சைக்கிளில் உட்கார், பள்ளியில் விடுகிறேன் என்று கூறினார். இதனை நம்பி அச்சிறுமி மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார்.

    பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார். சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதில் அச்சிறுமி கூச்சலிட்டார். அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தனர்.

    கரும்புதோட்டத்தில் வீரனிடம் சிக்கியிருந்த சிறுமியை மீட்டனர். வீரனுக்கு தர்மஅடி கொடுத்து, கடலூர் மாவட்ட சிறார் உதவி மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர். அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வீரனை கைது செய்து போக்சோ வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கருத்தரங்கை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
    • கருத்தரங்கில் 3 அமர்வுகளாக தொழில்நுட்பம், பருவநிலை, வேளாண்மை, உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜி.20 மாநாடு குறித்து ஒரு நாள் சிறப்பு கருத்தரங்க தொடக்கவிழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணைவேந்தர் ராம.கதிரேசன் வரவேற்புரையாற்றினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நிகழ்ச்சியில் பதிவாளர் சிங்காரவேலு, கருத்தரங்கு அமைப்பு செயலாளர் ரமேஷ்குமார், அறிவுடைநம்பி ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் 3 அமர்வுகளாக தொழில்நுட்பம், பருவநிலை, வேளாண்மை, உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது.

    கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்னை கவர்னர் மாளிகையிலிருந்து கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை கார் மூலம் புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு இரவு வந்தார். அவரை கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் சிங்காரவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர், பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கிய கவர்னர் சிறப்பு கருத்தரங்கை இன்று தொடங்கி வைத்தார்.

    ×