search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பட்டுக்கூடுகள் ரூ.11.17 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
    • மழையின் காரணமாக பட்டுக்கூடு வரத்து குறைந்தது.

    தருமபுரி,

    தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநா தபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாம க்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.

    தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில், 32 விவசாயிகள் கொண்டு வந்த 2660 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.11.17 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    நேற்று திடீரென பட்டுக்கூடு வரத்து குறைந்து 30 விவசாயிகள் கொண்டு வந்த 1939 கிலோ வெண் பட்டுக்கூடுகள் குறைந்தபட்சம் 505 ரூபாய்க்கும் அதிகபட்சம் 360 ரூபாய்க்கும் சராசரி 426 ரூபாய் என மொத்தம் 8.26 இலட்சத்திற்கு விற்பனை யானது.தருமபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடிக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு வரத்து அதிகரித்த நிலையில் மழையின் காரணமாக திடீரென பட்டுக்கூடு வரத்து குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
    • மர்ம நபர்கள் கைவரிசை

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேசெட்டி அள்ளி அருகே உள்ள சின்ன கம்மாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 59). தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி காலை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். 23-ந் தேதி மதியம் தனது அண்ணன் மணி என்பவர் போன் மூலம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை அடுத்து வீட்டிற்கு வந்து தயாளன் பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தயாளன் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் அதே பகுதியில் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் சிலம்பரசன் (37). இவர் பெங்களூரில் பழைய இரும்பு கடை தொழில் செய்து வருகிறார். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    சிலம்பரசன் கடந்த 11-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். பண்டிகை முடித்து கடந்த 17-ந் தேதி பெங்களூர் சென்றுள்ளார். சென்றவர் மீண்டும் 23-ந் தேதி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து நேற்று சிலம்பரசன் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம நபர்களை குறித்து சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

    குறிப்பாக பாப்பாரப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. வயதான பெண்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தற்பொழுது பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து வருவது தொடர்ந்து வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதற்கு அச்சப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
    • அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, மூல பெல்லூர், டேம் கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    அதே போல் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான அரசநத்தம், கலசப்பாடி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், பென்னாகரம் ஊராட்சியில் கோட்டூர் மலை, அலகட்டுமலை, ஏரிமலை, உள்ளிட்ட மலை கிராமங்களும், ஏரியூர் ஒன்றியத்தில் மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, உள்ளன. மூல பெல்லூர் டேம் கொட்டாய், உள்ளிட்ட மலை கிராமங்களும் இன்று வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    அதில் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்தில் மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கால்நடைகள் வளர்ப்பது, விறகு வெட்டுவது, மலை தேன் சேகரிப்பது, சுண்டைக்காய், கிழங்கு வகைகள், கீரை வகைகள் சாகுபடி செய்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் எளிய கிராம மக்களுக்கும் கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும் கயிறு கட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

    இதனால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    பெண்கள் பிரசவ காலங்களில் பெரும்பாலானவர் அரசு சுகாதார நிலையங்களை நாடிச் செல்லாமல் பழைய முறையில் மருத்துவச்சி பெண்களைக் கொண்டு பிரசவம் பார்த்து வருகின்றனர்.

     

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான ஒருவழி பாதையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

    பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாகவும், இதனால் இப்பகுதி மாணவர்கள் பள்ளியை தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகள் பூப்பெய்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில்;-

    படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மலை குகைக்குள் இருப்பது போன்றே இருந்து வருகின்றோம். மேலும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் வீடுகளில் அருகே மின்சார கம்பங்கள் இருந்தும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் நெருப்பு மூட்டி தீ வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.

    மத்திய மாநில அரசுகள் மலைவாழ் மக்களுக்கு என்று அடிப்படை தேவைகளுக்காக பல கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது எங்கள் அடிப்படை தேவைக்குகூட வந்து சேர்வதில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் வேட்பாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.

    ஆனால் தேர்தல் முடிந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் கோரிக்கையுடன் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இது குறித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது: ஏரியூர் ஒன்றிய பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவருமே புறக்கணிக்கப்படுகிறார்கள் மலைவாழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இதையே எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறை என கூறி வருகிறது என்றார்.

    சுதந்திரம் பெற்று காலங்கள் கடந்தாலும் மலை கிராம மக்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தருமபுரியில் இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அனைவருக்கும் நெல்லிக்கனி அளித்தனர்.

    தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு வந்த தி.மு.க இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் மேள தாளங்களுடன் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க இளைஞர் அணி மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ந்தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் விலக்கு - நம் இலக்கு என்ற முழக்கத்தோடு சேலத்தில் நடைபெறும் தி.மு.க இளைஞரணி மாநாட்டையொட்டி நவம்பர் 15 ந்தேதி முதல் கன்னியாகுமரியில் இருசக்கர வாகனப் பேரணியை இளைஞரணி செயலாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த இரண்டு சக்கர வாகனப் பேரணி தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பயணம் செய்து, தி.மு.க அரசின் சாதனைகள் குறித்தும், நீட் பாதிப்பை குறித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று இருசக்கர வாகன பேரணியானது தருமபுரி கிழக்கு மாவட்ட பகுதிக்கு வந்தடைந்தது. தருமபுரி நகர எல்லைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரணி நிர்வாகிகளுக்கு தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் மேளதாளங்களுடன் மாலைகள் அணிவித்து தமிழுக்காக சேவையாற்ற நீண்ட நாள் வாழ மன்னன் அதியமான் அவ்வை பிராட்டிக்கு நெல்லிக்கனியை அளித்தந்ததை நினைவு கூறும் வகையில் அனைவருக்கும் நெல்லிக்கனி அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் இரு சக்கர பேரணியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நல்லம்பள்ளி சென்று அடைந்த பேரணிக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், தி.மு.க, கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்து லெட்சுமி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வாகன பேரணி ஒகேனக்கல் சென்றடைந்தது. பேரணி செல்லும் வழியெல்லாம் பொது மக்கள் கல்லூரி மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த பேரணியில் நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகர், ரேணுகா தேவி, இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்வரன் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான இளஞரணியினரும் பேரணியில் கலந்து கொண்டனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
    • ஆண்கள் பெண்கள் என்று சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகராட்சி பகுதியில் பணிபுரிந்து வரும் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி சுகாதார ஒப்பந்த பணியாளர்களுக்கு நாள்தோறும் ரூ. 610 ஊதியமாக வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ. 7000 வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகை மற்றும் இதர தொகைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதனை சுகாதாரப் பணியா ளர்கள் ஏற்று க்கொள்ள வில்லை. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் தொடரும் என போரா ட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இன்று தொடர்ந்து நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் போராட்டம் குறித்து விளக்கி பேசி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதில் ஆண்கள் பெண்கள் என்று சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

    • தருமபுரியில் வாலிபர் மர்மான முறையில் உயிரிழந்தார்
    • போலீசார் தீவிர விசாரணை

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்ச நாயகன அள்ளி, கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (48). கூலி தொழிலாளி இவருக்கு திருமணம் முடிந்து 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இளைய மகன் மணிகண்டன் (21). இவர் பி.எஸ்.சி. படித்து முடித்துவிட்டு ஒரு வருடமாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    கடந்த ஒரு மாத காலமாக பாலகோடு அடுத்த எரனஅள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகில் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதில் மணிகண்டன் ஜே.சி.பி. வண்டியின் கிளீனராக வேலை செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு 8 மணிக்கு வாட்ஸ் அப் மூலம் தங்கவேலுக்கு தன் மகன் மணிகண்டன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு தங்கவேல் நேரில் சென்று மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மகனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு சென்றுள்ளனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தருமபுரியில் ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.
    • மனைவியும், 2 மகளும், 2மகன்களும் உள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி அருகே உள்ள பள்ளத்து கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சன் (வயது49). இவர் மின்சாரத் துறையில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாக ராணி (45) என்ற மனைவியும், 2 மகளும், 2மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் தருமபுரி-ஓசூர் சாலையில் கடகத்தூர், அடுத்த தனியார் ஹாலோ பிளாக் கம்பெனி எதிரில் உள்ள காவேரி அம்மாள் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நஞ்சனும், சக ஊழியரான சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரும் மின் கம்பம் மாற்றி அமைத்து மின்சார வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மின் பாதை ஆய்வாளர் மின்சாரத்தை ஆன் செய்ததாக தெரிகிறது.

    இதில் நஞ்சன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடன் வேலை செய்த சத்தியமூர்த்தி லேசான காயங்களுடன் உள்ள நிலையில் இருவரை–யும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனும–தித்தினர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நஞ்சன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 ஆண்டுகளாக கை மற்றும் கால்களில் தோல் நோய் இருந்து வந்துள்ளது.
    • கடந்த 20 ஆம் தேதி இரவு வாந்தி எடுத்ததள்ளார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, அடுத்த ஏஜெட்டிஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெத்தலைகாரன் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி (70) இவர் தன் மகன் ஆனந்தன் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் முதியவருக்கு 3 ஆண்டுகளாக கை மற்றும் கால்களில் தோல் நோய் இருந்து வந்துள்ளது. இதனை குணமாகுவதற்கு மருந்தாக எட்டிக் கொட்டையை தினந்தோறும் சிறிது சிறிதாக சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி இரவு வாந்தி எடுத்ததள்ளார்.

    இதனை கண்ட மகன் ஆனந்தன் என்ன என்று கேட்டபோது இன்று எட்டிக் கொட்டையை அதிகமாக சாப்பிட்டு விட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து முதியவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து ள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இது குறித்து அதிய மான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 2011 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது,
    • 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை யும் விதிக்கப்பட்டது,

     தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முதன்மை வனக்காப்பாளர் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி வழக்கு தொடர்பாக தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது,

    இந்த வழக்கில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு வனத்துறை (ஐஎப்எஸ்) அதிகாரிகள் உட்பட வனத்துறை ஊழியர்கள் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை யும் விதிக்கப்பட்டது, மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

    அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்ட னையை உறுதி செய்து 6 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முதன்மை வன காப்பாளர் பாலாஜி (வயது 66 )நேற்று தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு ) மோனிகா முன்னிலையில் சரணடைந்தார், அவரை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
    • காரை வழிமறித்து உறவினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    ஏரியூர்,  

    ஏரியூர் அருகே உள்ள கோடல்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர், இவர் திருப்பதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், பெரும்பா லையை சேர்ந்த ஜெய்ஸ்ரீ என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீடான பெரும்பாலையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் மனைவி யை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, ராஜசேகர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம், பெரும்பா லையில் உள்ள ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் மாமனாரை தாக்கி யதாகவும் கூறப்ப டுகிறது.

    இதனை தொடர்ந்து தனது மனைவியை தன்னு டன் சேர்த்து வைக்க கோரி பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதே போல மாமனாரை தாக்கி யதாக ஜேய்ஸ்ரீ உறவி னர்கள் ராஜசேகர் மீது புகார் அளித்தனர். இந்நிலையில் விசார ணைக்காக பெரும்பாலை போலீசார் இரு குடும்ப த்தையும் போலீஸ் நிலையம் வரவழைத்துள்ளனர்.

    இதனை அறிந்த ஜெய்ஸ்ரீ உறவினர்களான ஜெயரா மன் (41) சண்முகம் (24) கணேசன் (31) பார்த்திபன் (26) உள்ளிட்ட 5 பேர் பெரும்பாலை நுழை வாயிலில் நின்று ராஜசேகர் வந்த ஆம்னி காரை வழிமறித்து அதில் இருந்த அவரது உறவினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த மாதம்மாள், விக்ரமன் (28 )ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து பெரும்பாலையைச் சேர்ந்த ஜெயராமன் சண்முகம், கணேசன், பார்த்திபன் ஆகிய 4 கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    • பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.
    • வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    மாரண்ட அள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த இன்பசேகரன் (வயது 25). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.

    இதையறிந்த தரும்புரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் வாலி பர் மீது நட வடிக்கை எடுக்க கோரி மாரண்டஅள்ளி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாரண்டஅள்ளி போலீ சார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் நேரடி விசாரணை நடத்தினர்.
    • அசைவ உணவகங்களில் தரமான இறைச்சிகள் மூலமாக உணவுகள் தயாரித்து விற்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகே கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் விற்பனை செய்த மெதுவடையை சண்முகம் என்பவர் வாங்கி சாப்பிட வடையை பிரித்த போது அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

    அதனையடுத்து கடை உரிமையாளரிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் நேரடி விசாரணை நடத்தினர். மேலும் அந்த கடை சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கடையை சுகாதாரமாக வைக்க அறிவுறுத்தியதோடு மீண்டும் தாங்கள் சோதனைக்கு வரும் போது சுகாதாரமற்ற முறையில் இருந்தால் கடையை சீல் வைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் தருமபுரி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

    தருமபுரி நகரில் சாலையோர கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் மற்றும் பலகாரங்கள் விற்கப்படுகின்றன. மேலும் அசைவ உணவகங்களில் தரமான இறைச்சிகள் மூலமாக உணவுகள் தயாரித்து விற்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வடையில் பல்லி இருக்கும் அவலங்கள் நடக்காது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×