search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 33 கடைகளுக்கு மறு ஏலம் நடத்தப்படும் மேயர் இளமதி அறிவிப்பு
    X

    மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது.

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 33 கடைகளுக்கு மறு ஏலம் நடத்தப்படும் மேயர் இளமதி அறிவிப்பு

    • திண்டுக்கல் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது
    • மேயர் மாநகராட்சி விதிகளுக்கு கட்டுப்படாமல் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு மறுஏலம் விட அதிகாரம் உள்ளது என்றார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் ராஜப்பா, ஆணையாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 214 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கியுடன் மேயர் இளமதி பேசியதாவது,

    மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்திருந்தன. சாலைப்பணிகளுக்காக ரூ.36 கோடி நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.தற்போது முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி கிடைக்கப்ெபற்றுள்ளது. இதனை கொண்டு நகரில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய சாலைப்பணிகள் குறித்து ஆய்வு செய்து உடனடி பணிகள் தொடங்கப்படும்.

    மற்ற சேதமடைந்த சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும். இனிவரும் காலங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். திண்டுக்கல் மாநகராட்சியில் வரிவசூல் தாமதப்படுவதால் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குத்தகை பாக்கி, கடை வாடகை, மார்க்கெட் வாடகை போன்றவை நிலுவையில் உள்ளது.

    இதுபோல வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் 15 நாட்களுக்குள் அந்த தொகையை கட்டாவிட்டால் பொதுஏலத்திற்கு கொண்டுவரப்படும் என்றார். மேலும் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் புதிய வணிகவளாக கட்டிடத்தில் 34 கடைகள் கட்டப்பட்டன. அதில் ஒரு கடை கோர்ட்டு பிரச்சினையில் உள்ளது. மற்ற 33 கடைகளுக்கான ஏலம் முடிந்த நிலையிலும் வாடகை பாக்கி உள்ளது. எனவே அதனை செலுத்தாவிட்டால் மீண்டும் மறுஏலத்திற்கு கொண்டுவரப்படும் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க கவுன்சிலர் தனபால் இந்த கடைகள் ஏலம் விடப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், இதுகுறித்து மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கைவிடுத்தோம். தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் மறுஏலம் விடப்பட்டிருப்பது ஏன் என்றார்.

    இதற்கு பதில் அளித்த மேயர் மாநகராட்சி விதிகளுக்கு கட்டுப்படாமல் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு மறுஏலம் விட அதிகாரம் உள்ளது என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    Next Story
    ×