search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே காக்கா சோலையில் நீரோடை தூர்வாரும் பணி நிறைவு
    X

    கோத்தகிரி அருகே காக்கா சோலையில் நீரோடை தூர்வாரும் பணி நிறைவு

    • கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி விற்று வருகின்றனர்.
    • ஓடை முழுவதும் மண் அடைத்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் காய்கறிகளை பயிரிட்டு, அவற்றை அறுவடை செய்து கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி விற்று வருகின்றனர்.

    இவ்வாறு விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் வெறும் மழை நீரை மட்டும் நம்பி இல்லாமல் தங்களது விளைநிலங்களுக்கு அருகே செல்லும் ஓடை நீரையே பெரிதும் நம்பி உள்ளனர்.

    இந்த ஓடைகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தூர்வாரப்படுவது வழக்கம். கோத்தகிரி பகுதியில் உள்ள ஓடைகள் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தூர் வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் அடைத்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது. மேலும் ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் ஓடை சுருங்கியதுடன், மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் கோத்தகிரி பகுதியில் உள்ள ஓடைகளை தூர் வாரி, பராமரிப்பு பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் கோத்தகிரி பகுதியில் செல்லும் ஓடைகளை நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடைகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் காக்கா சோலை பகுதியில் செல்லும் நீரோடையை தூர்வார சுமார் 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 1500 மீட்டர் நீளத்திற்கு தூர் வாரி ஓடை சுத்தம் செய்யப்பட்டது.

    சுமார் 30 அடி அகலமும், சராசரியாக 10 அடி ஆழத்திற்கு ஓடை தூர் வாரும் பணி நேற்று நிறைவடைந்தது.மேலும் ஒரு சில பகுதிகளில் ஓடை பராமரிப்பு திட்டத்தின் கீழ் காங்கிரீட்டாலான தடுப்புச் சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றால் வரும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×