search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் பகுதியில் அதிகரிக்கும் ஈக்கள் தொல்லையால் குழந்தைகள், முதியவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு
    X

    சூலூர் பகுதியில் அதிகரிக்கும் ஈக்கள் தொல்லையால் குழந்தைகள், முதியவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு

    • கடந்த சில நாட்களாக சிம்மநாயக்கன்பாளையத்தில் ஈக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.
    • ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை

    சூலூர்,

    கோவை சூலூர், சுல்தான்பேட்டை அருகில் சிம்மநாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வாழும் மக்கள் அனைவருமே கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிம்மநாயக்கன்பாளையத்தில் ஈக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அந்த ஈக்கள் அவர்கள் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர், திண்பன்டங்கள் உள்பட அனைத்திலும் மொய்த்து கொண்டிருக்கின்றன.

    சில நேரங்களில் மூக்கு, காதுகளிலும் சென்று தொல்லை கொடுத்து வருகிறது. தொடர்ந்து இதுபோன்று ஈக்கள் தொல்லையால், குழந்தைகள், முதியவர்கள் உள்பட அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் ஈக்கள் தொல்லையால் மக்கள் வீட்டில் உள்ள பொருட்களை மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சிம்மநாயக்கன்பாளையத்தில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. அவை சரிவர பராமரிக்கப்படுவது இல்லை.

    எனவே அங்கு ஈக்கள் அதிகம் உற்பத்தியாகி, வீடுகள் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து உள்ளாட்சி மன்றத்தில் புகார் கொடுத்தோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சிம்மநாயக்கன்பாளையத்தில் கடந்தாண்டு இதே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் சம்பந்தப்பட்ட பகுதியில் பூச்சிமருந்து தெளித்து, கோழிப்பண்ணைகளிலும் சுத்தம், சுகாதாரத்தை பராமரிக்க உத்தரவிட்டது.

    இதன் விளைவாக அங்கு ஈக்கள் தொல்லை கட்டுப்படுத்தப்பட்டது. அதேமாதிரியான நடவடிக்கையை தற்போதும் மேற்கொண்டால் சிம்மநாயக்கன்பாளையத்தில் ஈக்கள் தொல்லைக்கு முடிவு கட்ட முடியும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×