search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்கள் போராட்டம் எதிரொலி:  தேங்காய்பட்டணம் மீன்பிடி  துறைமுகத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்
    X

    மீனவர்கள் போராட்டம் எதிரொலி: தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்

    • காலையில் கிரேன் முலம் துறைமுக அலை தடுப்பு சுவர் பழுதடைந்த பகுதியில் இருந்து கற்களை அகற்ற தொடங்கினர்.
    • தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் வரும் 10 நாட்களுக்கு பணிகள் சிறிது தாமதமாக நடைபெறும் எனவும், அதன் பிறகு முழு வீச்சில் பணிகள் தொடரும் என கூறினர்.

    கன்னியாகுமரி, ஆக.12-

    தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சரியான முறையில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடிக்கப்பட்டதால் துறைமுக முகத்துவாரத்தில் அடிக்கடி கடல்சீற்றத்தில் சிக்கி படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    இதனை சீரமைக்க கோரி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீனவ மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து மறு சீரமைப்புக்காக ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதுவரை எந்த பணிகளும் துவங்காமல் துறைமுக முகத்துவாரம் அப்படியே கிடக்கிறது.

    இதற்கிடையில் கடந்த ஒரு சில வாரங்களாக தொடர் விபத்துகள் துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்டு வந்தது. ஒரே நாளில் பல படகுகள் கவிழ்வதும், உடைந்து சேதமடைவதும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று காலை நாட்டு படகு ஒன்று துறைமுக முகத்துவாரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (வயது 48) என்ற மீனவர் பலியானார். இதை தொடர்ந்து பூத்துறை மீனவ கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மேலும் போராட்டம் முடிவுக்கு வரும் வரையிலும் துறைமுகத்தில் மீன் இறக்குதல் உள்ளிட்ட எந்த பணியும் செய்வதில்லை எனவும், இனயம், தூத்துர் மண்டலத்தை சேர்ந்த 15 மீனவ கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிப்பது எனவும், பெரு நிறுவனங்கள் உட்பட கடைகள் அனைத்தும் அடைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    இதையடுத்து சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுடன் ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று உடனடியாக துறைமுக பணி ஆரம்பிக்கப்படும் என மீன்வளத் துறை இணை இயக்குனர் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் பணிகள் தொடங்க அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்தனர்.

    காலையில் கிரேன் முலம் துறைமுக அலை தடுப்பு சுவர் பழுதடைந்த பகுதியில் இருந்து கற்களை அகற்ற தொடங்கினர். தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் வரும் 10 நாட்களுக்கு பணிகள் சிறிது தாமதமாக நடைபெறும் எனவும், அதன் பிறகு முழு வீச்சில் பணிகள் தொடரும் என கூறினர்.

    Next Story
    ×