என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா தலைவர் ஆகிவிடுவார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
- அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள்.
- மிக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆக்கப்படுவார்.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக நேற்று பல்வேறு இடங்களுக்கும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
நான் இந்த தொகுதியில் பார்த்தவரைக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்த தொகுதி மக்களாகிய நீங்கள் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச்செய்தால், மாதம் தோறும் ஒரு நாள் நான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்து உங்களுடன் இருப்பேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் அளிக்கிறேன்.
அ.தி.மு.க. சார்பில் ஒரு வேட்பாளர் நிற்கிறார். அவரை தொகுதிக்குள் பல இடங்களில் விடாமல் மக்கள் துரத்துகிறார்கள். அந்த விரக்தியில் இங்கு பிரசாரத்துக்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏதோதோ பேசி இருக்கிறார். மீசை வச்ச ஆம்பளயா என்கிறார். மீசை இருந்தால் சவரம் செய்வாரோ என்னவோ... எடப்பாடி பழனிசாமியை போல நான் தரம்தாழ்ந்து பேச முடியாது. அப்படி பேசினால் அவரால் தாங்க முடியாது.
வேட்டியை பற்றி பேசிய அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார். கூவத்தூரை மறந்து விட்டீர்களா?. ஒரு எம்.எல்.ஏ. விட்டால் போதும் என்று பஸ் ஏறி தப்பித்து ஓடினாரே. ஒருவர் சுவர் ஏறி குதித்தாரே... அங்கே நீங்கள் எப்படி முதல்-அமைச்சர் ஆனீர்கள். இதோ இப்படித்தான் (சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாண் கிடையாக விழுந்த படத்தை எடுத்துக்காட்டினார்). இவரை தெரிகிறதா... மீசை தெரிகிறதா... வேட்டி தெரிகிறதா...
நீங்கள் ஆட்சியில் இருந்தபோது இதுவரை வரலாற்றில் அல்லாத வகையில் தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்ததே. அப்போது உங்கள் மீசை என்ன செய்தது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றீர்களே அப்போது உங்கள் மீசை என்ன செய்தது. ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு கொடநாட்டில் 3 கொலைகள், தொடர் கொள்ளைகள் நடந்ததே அப்போது உங்கள் மீசை என்ன செய்தது.
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். ரூ.5 லட்சம் கோடி கடன் இருந்த சூழலிலும், கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. கொரோனா நிவாரணமாக 12 பொருட்கள் கொடுக்கப்பட்டது. பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்கள் கவர்னரின் கையெழுத்துக்காக அவரது அலுவலகத்தில் காத்திருக்கின்றன. தமிழக உரிமை சார்ந்த இந்த மசோதாக்களை கையெழுத்து போட்டு புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையுடன் எப்போதாவது எடப்பாடி கவர்னரை சந்தித்து இருக்கிறாரா... அவரும் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரையும், பிரதமர் மோடியையும் சந்திப்பது தமிழக உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காக அல்ல, அவர்களின் கட்சி பிரச்சினை சார்ந்தது.
பா.ஜனதா என்பது ஆடியோ, வீடியோ வைத்து நடக்கிற கட்சி. உன் வீடியோ என்னிடம் இருக்கு, உன் ஆடியோ என்னிடம் இருக்கு என மிரட்டி கட்சி நடக்கிறது. அதுமட்டுமின்றி அது கவர்னர் பயிற்சி மையமாக உள்ளது. முன்பு இல.கணேசன், அக்காள் தமிழிசை சவுந்தரராஜன், இப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் கவர்னர்களாக மாறி இருக்கிறார்கள். மிக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆக்கப்படுவார். அவருக்கு இப்போதே நமது வாழ்த்துகள். எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜனதா தலைவர் ஆகிவிடுவார். அ.தி.மு.க.வை பா.ஜனதாவில் இணைத்து விடுவார். இவர்கள் எப்படி தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்கள்?.
உங்களை அன்பாக, பணிவாக, பண்பாக, உரிமையாக, தலைவரின் மகனாக, அதைவிட கருணாநிதியின் பேரனாக கேட்கிறேன். தந்தை பெரியாரின் பேரனுக்கு, கருணாநிதியின் பேரன் நான் கேட்கிறேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். நன்றி.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் அணி துறை செயலாளர் கே.ஈ.பிரகாஷ் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்