search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
    X

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

    • ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.
    • இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதம் ரூ.21,260 வழங்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமனையில் உடை மாற்ற, ஓய்வெடுக்க, உணவு சாப்பிட ஓய்வறை ஒதுக்கிட வேண்டும். ஒப்பந்த முறைப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும். வேலை நேர பணி அட்டை வழங்க வேண்டும். மாத ஊதிய சீட்டு வழங்க வேண்டும்.

    வார விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இலவச சீருடை, பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23-ந் தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒப்பந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பணியை புறக்கணித்து கடந்த மாதம் 29-ந் தேதி இரவு முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 4 நாட்களாக பகல், இரவு என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் அவர்களது கோரிக்கையை ஏற்று அடுத்த 15 நாட்களில் அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார். இதன்பேரில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.

    இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×